PUBLISHED ON : செப் 06, 2020

என்னைப் பற்றி பேட்டி கண்ட தந்தை!
வள்ளலார் சன்மார்க்க சங்க விழாவில், சிவபுராணத்தை பாட, அப்பா அழைக்க, உடம்பெல்லாம் வெட வெடவென உதற, மேடை ஏறினேன்.
'பரவாயில்லையே... இந்த வயசிலேயே சிவபுராணம் பாடுவியா...' என, கிரிதாரி பிரசாத், முதுகைத் தட்ட, என் உயரத்திற்கு, 'மைக்' குறைக்கப்பட்டது.
வாழ்க்கையில் முதல் முதலாக இவ்வளவு பெரிய சபையை எதிர்கொண்டு நிற்கிறேன். தொண்டையில், யாரோ பஞ்சை வைத்து அடைத்து வைப்பதை போன்று உணர்ந்தேன். கால்கள் நர்த்தனமாட, கைகள் தானாகத் தாளமிட, தர்மசங்கடமான நொடிகள் மெல்ல நகர்ந்தன.
அப்பாவோ, 'சும்மா பாடு, தைரியமாக பாடு, நான் இருக்கேன்ல?' என்றார்.
அது, ஆன்மிகவாதிகளின் சபை. பலரும், சிவபுராணத்தை நன்கு அறிந்தவர்கள். சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்று, சில வரிகளை விழுங்கி விட்டு கீழே இறங்கிவிட முடியாது.
அப்பாவுக்கு பெருமைமிகு கணங்களை தந்தாக வேண்டும். கண்களிலோ நீர். தவறின்றி பாடி விட்டேன் என்று தான் நினைக்கிறேன்.
'பல்லோரும் ஏத்தப் பணிந்து...' என முடித்து, சபையை வணங்கினேன்.
சபையில், அப்படி ஒரு கை தட்டல்; அதுவும் நீண்ட நேரம். அப்பாவை பார்த்தேன். அவர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். மேடையில், மாலையால் கவுரவிக்கப் பட்டேன்.
வாழ்வின் முதல் மாலை. மாலையில் இருந்த செண்டு காலைத் தொட்டது. ஆள் உயர மாலை என்பரே, அது இதுதானோ!
அப்பா, தன் பேச்சை துவங்கும்போது, 'திருவாசகத்திற்கு உருகுகிறவர்களை பார்த்திருக்கிறேன். பையன், சிவபுராணத்திற்கே உருகி விட்டான்...' என்று, என் கண்ணீர் சம்பவத்தை கலகலப்பாக மாற்ற, மறுபடி கரவொலி தந்தது, சபை.
விழா மேடையின் நினைவுகளை அசை போட்டபடியே, அப்பாவுடன் காரில் வீட்டை நோக்கிப் பயணம். நான் சிவபுராணம் பாடுவேன் என்பது, அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது?
இந்த வியப்புக் குறி, வினாக் குறியாக மாறியது. கேட்டு விடலாமா... தைரியம் வரவில்லை. பயம் தான் தலை துாக்கியது. எச்சிலை விழுங்கி, நெஞ்சை அவருக்கு தெரியாதபடி தடவியபடி, 'அப்பா, வந்து வந்து...' என்றேன்.
'சொல்லு...'
'சரியாப் பாடினேனாப்பா...'
அவரது பாராட்டைக் காதில் கேட்டுக் கொண்டால், உரையாடத் தெம்பு வரும் என்று கணக்குப் போட்டேன். அது நன்கு வேலை செய்தது.
'பிரமாதமாப் பாடினே...'
'தப்பில்லாமல் பாடினேனாப்பா... நான், சிவபுராணம் பாடுவேன்னு, அம்மா சொன்னாங்களாப்பா?'
'இல்லை. பெரியம்மாவே சொன்னாங்க. உன்னைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாதுல்ல. அதுனால அவங்ககிட்டே கேட்டு நிறையத் தெரிஞ்சுகிட்டேன்...'
அப்பாவின் இந்த அக்கறை, எனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. யார் யாரையோ பேட்டி கண்ட தந்தை, என்னைப் பற்றியும் பெரியம்மாவிடம் பேட்டி கண்டிருக்கிறாரே!
பெருமை பிடிபடவில்லை.
ஒன்பது வயது வரை, 'விசிட்டிங் தந்தை'யாக இருந்தவர், பத்தாவது வயதில், மிக அண்ணாந்து பார்க்கப்பட்டவர். நெஞ்சத்தால் அந்நியமாய் இருந்தவர், இப்போது, மிக நெருங்கி விட்டதாகவும், பயம், உயர் மதிப்பீடுகள் ஆகியவை மாறி, பாசம் வளர்த்திருப்பதாக உணர்ந்த கணங்கள் இவை.
ஆனால், இந்த பெருமித கணங்கள், நெடு நாளெல்லாம் நீடிக்கவில்லை. ஏன் என்று சொல்கிறேன்.
தமிழ்வாணன் பற்றி பாவேந்தர் பாரதிதாசன்
நல்லொழுக்கம் நாணயம்
நேர்மை நடு நிலைமை
எல்லாமிருக்கும் எழுத்தாளன்
- சொல்வேன்
அமிழ்தான சொல்லிட்டுக்
கற்கண்டை ஆக்கும்
தமிழ்வாணன்! என்ன தடை?
தன்னலமோ வேம்பு
தமிழ் நலமே கற்கண்டு
தன்மானக் கொள்கை
தழுவுகின்ற - நண்பன்
தமிழ்வாணன் வாழ்க!
— தொடரும்
லேனா தமிழ்வாணன்

