
பா - கே
நெல்லை மாவட்டம், கடையநல்லுார் என்ற ஊரில் ஒரு நண்பர் இருந்தார். அவர், அங்குள்ள, 'டாஸ்மாக்' கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
திடீரென, அவருக்கு கோவாவில் வேலை கிடைத்து, அங்கே சென்று விட்டார்.
அண்மையில் சந்தித்த போது, உற்சாக பானங்கள் பற்றி கூற ஆரம்பித்தார். லென்ஸ் மாமாவையும் அருகில் அமர்த்திக் கொண்டேன்.
அவர் கூறியதாவது:
ரஷ்யாவின் வோட்கா, பிரான்சின் கோனியாக் போல், இந்தியாவின் கோவா மாநிலத்தின் பிரத்யேக பானம், பெனி. சமஸ்கிருதத்தில், 'பெனா' என்றால், நுரை என்று அர்த்தம். பெனி பாட்டிலை குலுக்கினால், நுரை தளும்பும்.
அதனால், பெனி என, பெயர் பெற்றது.
கடலோர மாநிலமான கோவாவில், நிறைய தென்னை மரங்கள் உண்டு. ஆரம்பத்தில், தேங்காயிலிருந்து பெனி தயாரித்தனர். போர்த்துகீசியர்கள் கோவாவில் குடியேறிய போது, நிறைய முந்திரி மரங்களை வளர்த்தனர். அதனால், முந்திரி பழத்திலிருந்து தயாரிக்கப்பட்டது.
இதில், 42 சதவீதம் போதை ஏற்றும் வஸ்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் வாசனையை வைத்தே தரம் பிரிக்கப்படுகிறது. இதை குடித்தால் உடனடியாக போதை ஏறிவிடும் என்பதால், சோடா அல்லது வேறு பானங்களுடன் கலந்து அருந்தப்படுகிறது.
ஆனால், இதன் சரியான சுவையை அறிய வேண்டும் எனில், எலுமிச்சை துண்டை சேர்த்து, அப்படியே அருந்த வேண்டும். கோவாவில், ஐந்து நட்சத்திர விடுதி முதல், ரோட்டு கடை வரை, எல்லா இடத்திலும் இது கிடைக்கிறது.
பெனி தயாரிக்கப்படுகிறது என்பதை, அதன் மணத்தை வைத்து, வெகு தொலைவிலிருந்தே அறிய முடியும். தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் பெனி, ஆண்டு முழுவதும் கிடைக்கிறது; முந்திரி பழத்திலிருந்து தயாரிக்கப்படுவது, பிப்ரவரி முதல் மே இறுதி வரை கிடைக்கிறது.
தலைநகர் பானாஜி மற்றும் சத்தாரி ஆகிய இடங்களில் தான், இது பிரபலமாக உள்ளது. மலை உச்சியை பாத்திரம் போல் குடைந்து, அதில் ஒரு பக்கம் புனல் போல் அமைக்கின்றனர். அந்த பாத்திரத்தில், முந்திரி பழங்களை போட்டு, அரைத்து வடிகட்டுகின்றனர்.
இப்படி அமைக்கப்பட்ட பாத்திரத்தை, 'கொயம்பி' என்று அழைக்கின்றனர். வடிக்கப்பட்ட ரசத்தை, மண்ணில் புதைக்கப்பட்ட குடத்திலிட்டு, சில தினங்களுக்கு பின், பல நிலைகளில் கொதிக்க வைத்து, வடிகட்டுகின்றனர்.
இப்படி தயாரிக்கப்பட்ட பானத்தில் முதல் பதம், 'அரக்' என, அழைக்கப்படுகிறது; இது, மிக லேசாக உள்ளது. இதை, எலுமிச்சம் பழம் அல்லது ஆரஞ்சு பழ சாற்றுடன் கலந்து அருந்துகின்றனர். இரண்டாவது பதத்தை, 'காசுலோ' என்று, சற்று அடர்த்தியான பானமாக அருந்துகின்றனர்; மூன்றாவது பதமே பெனி.
பல கடைகளில், தேங்காய் ஓட்டில் பெனியை பறிமாறுகின்றனர். ஒரு பாட்டில், 75 - 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. முந்திரி பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பெனிக்கு, 2009ல், புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
அதன்படி, பெனியை ஒரு நிறமற்ற திரவமாகவும், மர பீப்பாய்களில் பதப்படுத்துகையில், தங்க நிறமாக மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதால், இதை வேறு யாரும் தயாரிக்க முடியாது.
கடந்த, 2016ல் கோவா அரசு, இதை அம்மாநிலத்தின் பாரம்பரிய பானமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதில், பல மருத்துவ குணங்கள் உள்ளது என்று கூறப்படுகிறது. பல், ஈறு வலிகள், வாய்ப்புண், எடைக்குறைப்பு மற்றும் சளி, இருமலை போக்குவதாகவும் கூறுகின்றனர்; ஆனால், குறைந்த அளவு பருகினால் மட்டுமே, மருந்தாக பயன்படுத்த முடியும்.
தற்போது, பலவித அழகிய குடுவைகளில் பெனி கிடைக்கிறது. கோவா வரும் பல நாட்டினரும், இதை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன் பிரத்யேக வாசனையின் காரணமாக, பலர் இதை அருந்த யோசிக்கின்றனர்.
பாரம்பரியமாகவே தயாரிக்கப்படுவதால், 70 சதவீதம் உள்ளூரில் உள்ள வீடுகளில் விற்கப்படுகிறது; மீதமுள்ள, 30 சதவீதம் தான், கடைகளில் விற்கப்படுகிறது.
'மணி... கோவா போகலாமா?' என்றார், லென்ஸ்.
ஒரு முறை முறைத்து விட்டு, நண்பருக்கு விடை கொடுத்தேன்!
ப
மெத்தை நிறுவனம் ஒன்று, துாக்கம் பற்றி, சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. ஆய்வு
முடிவில் வெளியான தகவல்கள்:
இன்று, பல கார்ப்பரேட் நிறுவனங்கள், வேலையின் நடுவில், சிறிது நேரம் துாங்குவதற்கு அனுமதித்து, வசதியும் செய்துள்ளன. நடுவில், அரை மணி நேரம் துாங்கி எழுந்தவர்களுக்கு தான், அதன் சுகம் தெரியும். அதன்பின், வேலையையும் சிறப்பாக செய்ய முடியும்; உற்பத்தி திறனும் கூடும்.
* தினமும், 7 - 9 மணி நேரம் துாங்குவோர், மிக சிறப்பாக பணிபுரிவர்
* குழந்தைகள் மற்றும் 'டீன் - ஏஜ்' இளைஞர்களுக்கு, மேலும், அதிக துாக்கம் தேவை
* தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்து மக்கள், தினமும், இரவு, சராசரியாக, ஏழு மணி நேரத்திற்கு மேல் துாங்குகின்றனர்
* ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, நெதர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம், அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள மக்கள், நன்கு துாங்கும் பட்டியலில் உள்ளனர்
* சிங்கப்பூர் மக்களுக்கு, துாக்கம் குறைவு என்கிறது, ஒரு ஆய்வு
* பிரிட்டனில், மூன்றில் ஒருவர், உடலில் எந்த துணியும் இல்லாமல் துாங்குவதை தான் விரும்புகின்றனர்
* அண்டை நாடான சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான, வியட்நாமில், வேலை நேரத்தில், சில நிமிடங்கள் முதல், அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை துாங்க அனுமதி உண்டு. இதற்கு கூறப்படும் காரணம், அங்கே பெரும்பாலோர், அதிகாலை, 4:00 மணிக்கே எழுந்து விடுவது தான்
* கனவு காண்பவர்களில், 12 சதவீதத்தினர், விழித்த பின், அடுத்த, ஐந்து நிமிடத்தில், 50 சதவீத கனவுகளை மறந்து விடுகின்றனர்
* ஒருவரால் மிக அதிகபட்சமாக, 11 நாட்கள் மட்டுமே துாங்காமல் இருக்க முடியும்
* துாக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ளவர்களாக, 15 சதவீதத்தினர் உள்ளனர்.
- பெங்களூரிலிருந்து, ராஜிராதா எழுதிய கடிதத்தில் படித்தது!

