
* கே. கணேசன், மறைமலைநகர்: தேசிய கட்சிகளான, காங்., - பா.ஜ.,வின் எதிர்காலம் தமிழகத்தில் எப்படி இருக்கும்?
இரு கட்சிகளுமே, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் சேலையை பிடித்துக் கொண்டு தான் இருக்கும்!
ஜி. கலைவாணி, செங்கல்பட்டு: தமிழகத்திற்கு தேவை இரு மொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா?
சந்தேகம் இல்லாமல் இரண்டாவதே! ஹிந்தியை எதிர்ப்பவர்கள், தம் வாரிசுகளை அம்மொழி புலவராக்கலாம்; அவர்கள் நடத்தும் பள்ளிகளில் அம்மொழியைச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால், அரசு பள்ளியில் படிக்கும், நடுத்தர, கீழ் தட்டு மாணவர்களுக்கு, ஹிந்தி மறுக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?
வெ. ராமமூர்த்தி, கடையநல்லுார்: பெண்களே இல்லாமல், சினிமா படம் தயாரிக்க முடியாதா?
கண்களே இல்லாதவர்களை படம் பார்க்கச் சொல்கிறீர்கள் போலும்!
கோ. குப்புசாமி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி: ஆந்திராவைப் போன்று, தமிழகத்திலும் மூன்று தலைநகர் உருவாக்கலாம் என்று கூறுகின்றனரே... இது சரிப்பட்டு வருமா?
இரண்டு தலைநகர் போதும்; சென்னையை அடுத்து, மதுரை அல்லது திருச்சியில் அமைந்தால், மக்களின் பிரச்னைகள் சுலபமாகத் தீரும்!
ஜி. விஜயகுமார், நீலாம்பூர், கோவை: பெயரில் முருகன் பெயரை வைத்துள்ள, துரைமுருகன், முருக கடவுளை வணங்குவாரா?
தி.மு.க.,வின் இளைஞர் அணி தலைவர், உதயநிதி ஸ்டாலின், தன் வீட்டிலேயே பூஜை அறை உள்ளதாகக் கூறி இருக்கிறாரே... இந்த முருகன் வீட்டிலும் இல்லாமல் இருக்குமா? இவர், வணங்காமல் இருப்பாரா?
வி. மகாதேவன், சென்னை: இந்தியாவை, சீனா பிடித்துவிடும் என்று சொல்கின்றனரே...
இந்தியாவின் வரைப்படத்தை வேண்டுமானால், பார்த்துக் கொள்ளலாம்! இந்தியாவை ஒருநாளும் அவர்களால் பிடிக்க முடியாது!
* முருகு. செல்வகுமார், சென்னை: திராவிட கட்சிகள் தவிர்த்து, புது கட்சிகள் தலைமையில் கூட்டணி ஆட்சியாவது அமையுமா?
கட்சி ஆரம்பித்து, ரஜினி தலைமையில் கூட்டணி சேருமானால், உங்களது ஆசை நிறைவேறும்!

