sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

டைட்டானிக் காதல்... (1)

/

டைட்டானிக் காதல்... (1)

டைட்டானிக் காதல்... (1)

டைட்டானிக் காதல்... (1)


PUBLISHED ON : செப் 06, 2020

Google News

PUBLISHED ON : செப் 06, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்று, சனி மகா பிரதோஷம்.

பெருத்த வாகன போக்குவரத்து மிகுந்த சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி இருந்தது, அந்த சிவன் கோவில். கோவிலின் வெளிப் பிரகாரம், ஆளரவமற்றிருந்தது.

சிவன் சன்னிதிக்கு எதிரிலிருந்த கல் மண்டபத்தில், கூட்டம் குழுமியிருந்தது. ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் கூட்டம் இருக்கும் தான். ஆனால், சனி மகா பிரதோஷ நாளன்று, மண்டபம் நிறைந்து காணப்படும்.

அன்றும் அப்படித்தான் இருந்தது. கர்ப்பகிரகத்தின் அருகில் பெரிய அண்டாவில் பால் தளும்பி நின்றது. கூடவே, சின்ன எவர்சில்வர் துாக்குகளும், செம்புகளும், பால் கவர்களும் காணப்பட்டன. அதற்கு மேலும் ஓரிருவர், 'சாமி... சாமி...' என்று, பால் கவர்களை நீட்டினர். மறுக்காமல் வாங்கி வைத்து, தன் வேலையை தொடர்ந்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.

சங்காபிஷேகத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார், அவர். 108 சங்குகளுக்கும் சந்தன பொட்டும், குங்குமப் பொட்டும் வைத்தார். எதிரில் சோமாஸ்கந்தர் விக்கிரகம், பட்டுடுத்தி பளபளத்தது. அம்பாளும், ஈஸ்வரனும் தேஜோ மயமாக காட்சியளித்தனர். காசு மாலைகளும், கெம்பு அட்டிகைகளுடன் மின்னினர். பூ மாலைகளின் வாசம் துாக்கிற்று.

சங்குகளை அபிஷேகத்திற்கு தயார் பண்ணிவிட்டு, கர்ப்பகிரகத்தினுள் நுழைந்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார். திரையை இழுத்துவிட்டு, சிவலிங்கத்தின் அலங்காரத்தை களைந்தார். வெறும் நுால் வேட்டி சுற்றி, திரையை விலக்கினார்.

கை கூப்பி, 'ஹர ஹர மஹாதேவா...' என்று குரல் எழுப்பினார்; கூடவே இருந்த கூட்டமும் குரல் கொடுத்தது. அண்டாவிலிருந்த பாலை சங்குகளில் மொண்டு, பையன் குமரேசன் கொடுக்க, அபிஷேகத்தை துவங்கினார்.

கல் மண்டபத்தில் அமர்ந்திருந்த கூட்டம் மெய் சிலிர்த்தது.

'என்னப்பா... பரமசிவா... மஹாதேவா... சங்கரா...' என்று உருகிற்று.

குருமூர்த்தி சிவாச்சாரியாரும், தன்னிலை மறந்து, ஈசனோடு ஐக்கியமாகி, அபிஷேகத்தை நிறைவு செய்தார். பாலாபிஷேகம், தேனாபிஷேகம், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் விபூதி என, எல்லாம் முடித்து, மீண்டும் திரையிட்டார்.

''இந்தா, குமரேசா... ஜனங்களுக்கு அபிஷேக பிரசாதம் குடு. நான், அலங்காரத்தை முடிக்கிறேன். தீபாராதனை ஆனதும், பிரதோஷ ஊர்வலம் ஆரம்பிக்கணும்.''

''சரிப்பா,'' என்று, பால் செம்புடன், திரையை லேசாக விலக்கி, சன்னிதியை விட்டு வெளியே வந்தான், 16 வயது குமரேசன்.

''வரிசையாக நில்லுங்க... எல்லாருக்கும் தர்றேன்,'' என்றான்.

இருந்த, 20 - 30 பேரும் வரிசை கட்டினர். அவர்கள் எடுத்து வந்திருந்த கண்ணாடி பாட்டில்கள், சின்ன செம்பு, குட்டி சம்படம், குவிந்த உள்ளங்கை என, எல்லாவற்றிலும் பால் ஊற்றினான், குமரேசன்.

உள்ளே அலங்காரத்தை முடித்தார், சிவாச்சாரியார். திரை விலக்கி, தீபாராதனை காட்டினார்.

யாரோ ஒருவர், அர்ச்சனை தட்டை நீட்ட, மென்மையான குரலில், ''பிரதோஷ ஊர்வலம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் அர்ச்சனை. கொஞ்சம் காத்திருங்க,'' என்றார், சிவாச்சாரியார்.

''சரி, சாமி...'' என்று நகர்ந்தார், வந்தவர்.

சப்பரத்தில் அமர்த்தப்பட்டார், சோமாஸ்கந்தர். வெண்சாமர குடையுடன் ஊர்வலம் துவங்கியது. நாதஸ்வர மேள சப்தங்கள் பின் தொடர்ந்தன. சப்பரம் துாக்கியவர்கள், ஆங்காங்கே நின்று, ஒய்யார நடை போட்டு, வெளி பிரகாரத்தை சுற்றி வர துவங்கினர்.

ஒய்யார நடைக்கும், கால்களின் இயக்கத்திற்கும் ஏற்ப, ஆடி வந்த ஈஸ்வர தம்பதியரை, கல் மண்டபத்தில், சப்பரத்தோடு கீழே இறங்கினர். உடனே, மேள தாளம் நின்றது. தீபாராதனையை துவங்கினார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.

'என் அப்பா... கைலாசநாதா... அம்மா பார்வதி தேவி... என் மூத்த பொண்ணு, புவனேஸ்வரிக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும். குருக்கள் குடும்பத்திலிருந்தே மாப்பிள்ளை அமையணும். அவ கல்யாணம் நல்லபடியாக முடியணும். அதுக்கு, நீங்க ரெண்டு பேரும் தான் ஆசிர்வதித்து, அனுக்கிரகம் பண்ணணும்...' என, மனமுருக வேண்டிக் கொண்டார்.

பஞ்ச தீபாராதனை, அடுக்கு தீபாராதனை எல்லாம் முடித்து, கை விரல்களால் முத்திரையிட்டார். தன் உதவிக்காக இருந்த முத்துவிடம், அர்ச்சனைகளை செய்யச் சொல்லி, கல் மண்டபத்தை விட்டு வெளியில் வந்தார்.

உடல் முழுவதும் வியர்வை ஆறு பெருகிக் கிடந்தது. நெற்றி விபூதியும், குங்குமப் பொட்டும் கரைந்து வழிந்தது. இடுப்பில் கட்டியிருந்த துணியை உருவி துடைத்தபடி, மடப்பள்ளியை ஒட்டி கட்டப்பட்டிருந்த சின்ன சிமென்ட் திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.

''என்னப்பா... ஈஸ்வரா...'' என்று, பெருமூச்சு விட்டபோது, ''மன்னிக்கணும்...'' என்றவாறே எதிரில் ஒருவர் வந்து நின்றார்.

வெடவெடவென்று நல்ல உயரம். செக்கச் செவேலென்ற நிறம். நெற்றி நிறைய விபூதி. நடுவில் அளவாய் குங்குமப் பொட்டு. வைர கடுக்கன். தங்க சங்கிலியில் கோர்த்த ருத்திராட்சம். கையில் தங்க காப்பு. பஞ்சகச்ச வேஷ்டி. பட்டு மேல் உத்திரியம். தங்க நிற மூக்கு கண்ணாடி. கை கூப்ப வைக்கும் தோற்றம்.

எழுந்து நின்றார், குருமூர்த்தி.

''யாருன்னு தெரியலையே...''

''உங்களுக்கு, என்னை தெரியாது. என் பேரு, சாம்பசிவம். திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஊரு. பரம்பரையாக கோவில் திருப்பணி. எனக்கு, ஒரே பையன், ராஜாராமன்னு பேரு. சி.ஏ., பாஸ் பண்ணிட்டான். கோவில் வேலையிலும் எனக்கு ஒத்தாசையாக இருக்கான்.

''என்னை விட நிறமா, அழகாக இருப்பான். வீடு, தோப்பு, நிலம்ன்னு ஏகப்பட்ட சொத்து இருக்கு. எல்லாத்துக்கும் அவன் ஒருத்தன் தான் வாரிசு. பேர் மட்டும் ராஜாராமன் இல்ல, குணத்துலயும் அவன் அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தான்.''

ஒன்றும் புரியாமல் விழித்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.

''சரி... இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றேன்னு கேட்கறீங்களா,'' என்று குறுக்கிட்ட சாம்பசிவம், என் பையன், ராஜாராமனுக்கு, உங்க மூத்த பொண்ணு புவனேஸ்வரியை, பொண்ணு கேட்டு வந்திருக்கேன்.''

உடம்பு சிலிர்த்தது, குருமூர்த்தி சிவாச்சாரியாருக்கு. உள்ளம் உருகி, கண்களில் நீர் நிறைந்தது. சன்னிதி பக்கம் திரும்பி, தலைக்கு மேல் கை கூப்பினார்.

''என் அம்மை - அப்பன் ரெண்டு பேரும் தீர்மானிச்சு, உங்களை வரவழைத்ததற்கு அப்புறம், நான் யாரு சுவாமி தடை சொல்ல...''

அந்த பதில், சாம்பசிவத்தை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

''ரொம்ப சந்தோஷம். நல்ல நாள் பார்த்து, குடும்பத்தோடு பொண்ணு பார்க்க வர்றேன்.''

''பார்வதி - பரமேஸ்வரா விருப்பப்படி நடக்கட்டும்.''

''அப்போ நான் கிளம்பறேன்.''

''அம்பாள் உத்தரவு.''

அவர் நகர்ந்ததும், மீண்டும் கை கூப்பி, 'வேண்டி ஒரு நிமிஷம் ஆகல... உடனே மாப்பிள்ளையை அனுப்பி வெச்சிருக்கீங்க... உங்க கருணைக்கு எல்லையே இல்லை... இதே மாதிரி கல்யாணத்தையும் நல்லபடியா நடத்திக் குடுத்துடுங்க...' என வேண்டினார், குருமூர்த்தி.

அவர் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது.

அதே நேரம், அதே நிமிடம், கடற்கரையின் படகுக்கு பின்னால் அமர்ந்திருந்த புவனேஸ்வரியின் கண்களிலிருந்து நீர் வழிந்து, கன்னங்களை நனைத்தன. தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை உருவினான், கார்த்திகேயன்.

''போதும் புவனா... சிரிச்சு சிரிச்சு, கண்ணுல தண்ணி வடியுது பாரு... இந்தா, துடைச்சுக்கோ,'' என, கைக்குட்டையை நீட்டினான்.

''ஊஹும்...'' என்று தலையசைத்து மறுத்தாள், புவனேஸ்வரி.

அந்த மறுப்பு, அவனை திடுக்கிட வைத்தது.

''ஏன் புவனா?''

''நீங்களே துடைச்சு விடுங்க.''

''அப்பாடா... இவ்வளவு தானா... என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்... வா, கிட்ட வா.'' வந்தாள்.

''இன்னும் கிட்ட...''

நெருங்கினாள்.

''இது போறாது. இன்னும் கொஞ்சம் கிட்ட...''

மிக அருகில் வந்தாள்.

சட்டென்று அவள் முகத்தை பற்றி, முத்தமிட முயன்றான். அவன் உதடுகளை தன் விரல்களால் பொத்தினாள், அவள்.

''இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். இப்போ கிடையாது,'' என்று, அவன் கண்களுக்குள் குறும்புத்தனமாக பார்த்தாள்.

சிலிர்த்து போய், ''இப்போ எதுதான் கிடைக்கும்?''

''இது மட்டும் தான்,'' என, அவனது கரத்தை பற்றி, உள்ளங்கையில் தன் உதட்டை வைத்து அழுத்தினாள்.

''சரி, மீதியெல்லாம்...''

''கல்யாணத்துக்கு அப்புறம்.''

''எப்போ கல்யாணம்?''

''அப்பா தான் முடிவு பண்ணணும்.''

''எப்போ பண்ணுவாரு?''

''முதல்ல நம்ம விஷயத்தை நான் அப்பாகிட்ட சொல்லணும்ல.''

''எப்போ சொல்லுவ?''

''இன்னிக்கு ராத்திரி சொல்லிடலாம்ன்னு இருக்கேன்.''

''சொல்லிடு.''

''சொல்லிடறேன்,'' எழுந்தாள், புவனா.

''இவ்வளவு சீக்கிரமா?''

''இன்னிக்கு, என்ன நாள் தெரியுமா... பிரதோஷம், அதுவும் சனி பிரதோஷம். வீட்டுக்கு போய் குளிச்சுட்டு, கோவிலுக்கு போகணும்.''

'என்ன தோஷமோ...' என்று, அவனும் எழுந்து கொண்டான்.

இருவரும் கை கோர்த்து நடந்து, கடற்கரை மணலை விட்டு வெளியேறிய போது-

கோவிலை விட்டு வெளியில் வந்து, மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.

தொடரும்

இந்துமதி







      Dinamalar
      Follow us