
உழைப்பு அதிகரித்தால், வருமானம் பெருகும்!
தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக, மாதம், 8,000 சம்பாதிக்கும் எனக்கு தெரிந்த இளம் பெண் ஒருவர், 'போதுமான சம்பளம் கிடைக்கவில்லை...' என்று என்னிடம் கூறி, வருத்தப்பட்டார்.
'எங்கள் குடியிருப்பு வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில், 30 நிமிடம் என, பாத்திரம் துலக்கி, வீட்டை துடைத்து கொடுத்தால் போதும். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் கொடுக்கின்றனர்...' என, ஆலோசனை கூறினேன்.
என் வீடு மற்றும் அடுத்தடுத்த வீடுகள் என, இப்போது, ஏழெட்டு வீடுகளில் வேலை செய்யும் வாய்ப்பு, அப்பெண்ணுக்கு கிடைத்துள்ளது. மாதம், 21- ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவர் வைத்துள்ள இருசக்கர வாகனத்தில் வந்து, காலை, 6:00 மணியிலிருந்து அடுத்தடுத்த வீடுகளில் உள்ள வேலையை முடித்து, மதியத்திற்குள் வீடு சென்று விடுகிறார். மாலையில், தன் அம்மாவிற்கு உதவியாக, பூ கட்டி விற்று, கூடுதல் வருமானம் பெறுகிறார்.
காலை, 8:00 -மணிக்கு பணிக்கு சென்று, மாலை, 6:00 -மணி வரை பணி செய்து, வெறும் 8-,000 ரூபாய் சம்பாதித்த இளம்பெண், தன் உழைப்பை அதிகப்படுத்தி, மூன்று மடங்கு அதிகமாக சம்பாதித்து, வாழ்க்கையில் உயர்ந்துள்ளார்.
இவர் போல், குறைந்த சம்பளம் பெறும் பெண்கள், கவுரவம் பார்க்காமல், நேர்மையான வழியிலும், தங்களின் அதீத உழைப்பால், கூடுதல் வருமானம் தரும் வேலைகளை செய்து, வாழ்வில் உயரலாமே!
- ஜே.ரஞ்சிதமணி, கோவை.
இப்படியும் பணம் ஈட்டலாம்!
கணவர் இறந்துவிட்ட நிலையில், வருமானத்திற்கு வழி தெரியவில்லை என, புலம்பிக் கொண்டிருந்தார், நண்பரின் அம்மா.
அப்போது, 'குழந்தையையும் கவனித்து, அலுவலகம் செல்வதால், சமையல் வேலையை மிச்சப்படுத்த, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, 'இன்ஸ்டன்ட்' பொடியை வாங்கி உபயோகிக்கிறேன். இதனால், உடல் நலம் கெடுகிறது...' என, பக்கத்து வீட்டு தோழியும், ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருந்தார்.
'நாளைக்கு உங்களுக்கு விடுமுறை தானே... உங்களின் சமையல் அறையையும், சமையலையும் சின்ன மாற்றம் செய்து தரவா...' என்று தோழியிடம் கேட்டுள்ளார், நண்பரின் அம்மா.
மளிகை சாமான்களை வாங்கி வரச்சொல்லி, சிலவற்றை கழுவி, காய வைத்து, வறுத்தார். மாவு மிஷினில், மிளகாய் துாள், சத்து மாவு, கோதுமை மாவு, இடியாப்ப மாவு, முறுக்கு மாவு மற்றும் பஜ்ஜி மாவு என்று, ரக வாரியாக அரைத்தும் கொடுத்தார்.
வீட்டில், மிளகாய் பொடி, பருப்பு பொடி என அரைத்து, ஒரு நாள் முழுக்க வேலை செய்து, கூலி கேட்டார்.
தோழியோ, மகிழ்ச்சி பொங்க, 'எனக்கு பணமும் மிச்சம்; உடல் நலமும் கெடாது; 'டேஸ்ட்'டும் சூப்பர்...' என்றார்.
தனக்கு தெரிந்த மற்ற தோழியருக்கும் இதைக் கூற, நண்பரின் அம்மா, இப்போது ரொம்ப, 'பிஸி'யாகி விட்டார்.
ஒரு சிலர் வீட்டிற்கு வந்து, 'பலகாரம் செய்து தருகிறீர்களா...' என, கேட்கின்றனர்.
கணவர் மற்றும் மகன்கள் கவனிப்பதில்லை என்று புலம்பும், சமையல் கலை தெரிந்த அம்மாக்கள் இனி, இதுபோல் செய்து, பணம் ஈட்டலாமே!
— அ. மீனாட்சி, சென்னை.
தையற்கடைக்காரரின் தொழில் யுக்தி!
தையல்கார நண்பருடன், காஜா கடைக்கு சென்றிருந்தேன். அச்சமயம் அங்கு, மற்றொரு தையல்காரர், 20 செட் பேன்ட் - ஷர்ட்டுகளை, மொத்தமாக காஜா போட்டு வாங்கிச் செல்ல வந்திருந்தார்.
'நண்பரே, 'பிசி'யாகிட்ட போலிருக்கே...' என, கேட்டேன்.
'கடைக்கு சென்று, துணி வாங்கி, நம்மிடம் அளவு கொடுத்து தைத்து வாங்கிச் சென்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது, எந்த வாடிக்கையாளரிடமும் பொறுமை இல்லை. வந்தோம், வாங்கினோம், சென்றோம் என, 'ரெடிமேட்' விரும்பிகளாக மாறி விட்டனர்.
'நாமும் தொழில் கற்று, கடை வைத்து, பிழைப்பை தொலைத்து, எத்தனை நாளைக்குத்தான் தவித்து நிற்பது...
'அதற்காகத்தான், வாடிக்கையாளரின் வழிக்கே சென்று விட்டேன். மீட்டர் கணக்கில் துணிகளை வாங்கி வந்து, குறிப்பிட்ட அளவுகளில் தைத்து, கடையின் முகப்பில் மாட்டி விடுகிறேன்.
'வாடிக்கையாளர்களும், சொல்லும் விலையை கொடுத்து, அவரவர் அளவுக்கேற்ப வாங்கிச் செல்கின்றனர். நானும் பசியின்றி வாழ்கிறேன்...' என்றார்.
'வாடிக்கையாளர்கள் காலத்துக்கு தகுந்தாற்போல் மாறும்போது, தொழில் செய்யும் நாமும், தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்ற நண்பரின் யுக்தியை, அனைவரும் பின்பற்றலாமே!
ரா.ராஜ் மோகன், திண்டிவனம்