sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன் - (16)

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன் - (16)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன் - (16)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன் - (16)


PUBLISHED ON : டிச 06, 2020

Google News

PUBLISHED ON : டிச 06, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அப்பாவைப் போல் புகழ்பெறும் எண்ணம் உருவானது எப்படி?

'புகழ் என்பது, மதுவை விட மோசமான போதை. மதுவில் சிக்கியவர்கள் கூட மீண்டு விடலாம்; புகழ் போதைக்கு அடிமையாகி விட்டால், எவரும் மீள முடியாது. மாணவப் பருவத்திலேயே அவனுக்குப் புகழின் ருசியைக் காட்டியது, தவறான முடிவாகி விடக் கூடாது என்று பார்க்கிறேன்.

'எனவே, லேனாவை, 'கல்கண்டு' இதழில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளச் சொல்லப் போகிறேன். வேண்டுமானால், மாதம், 60 ரூபாய் கொடுத்து விடுவோம். நீ என்ன சொல்கிறாய்...'

இது, என் அம்மாவிடம், அப்பா கேட்ட கேள்வி.

'அப்படி இல்லீங்க. நானும் அவன் எழுதுவதை படிக்கிறேன். குல வித்தை அவனுக்குச் சரியாக வருகிறது. பாவம் புள்ளை. ரொம்ப ஏமாந்துரும்...' என்றார், அம்மா.

அப்பா தீர்மானமாகப் பேசினால், அதை அசைக்க எவராலும் முடியாது. ஆனால், 50 - 50 என இருந்ததால், அம்மாவால், 51 - 49 ஆக ஆக்க முடிந்தது. இதை என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

சென்னை, பனகல் பூங்கா எதிரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில், என் கல்வி வாழ்வு உருப் (படாமல்) பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நான் சற்று அறியப்பட்ட மாணவனாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வலம் வந்தேன்.

இந்த அங்கீகாரம், என் படிப்புத் திறமை கொண்டோ, விளையாட்டில் சிறந்தவன் என்றோ கிடைக்கவில்லை; இன்னார் மகன் என்பது தான் காரணம்.

படிக்கட்டு ஏறி வலப்புறம் சென்றால், என், 11பி வகுப்பு; வராண்டாவின் கடைசி வரை நடந்த பிறகே வரும். இப்படி ஐந்து வகுப்பறைகளையும் கடந்து, ஆசிரியர் இல்லாத நேரம் நான் சென்றால், மாணவர்களின் கவனம் என் மீது திரும்பும்...

'டேய், தமிழ்வாணன் பையன் போறாண்டா...' என்று, அவர்கள் என் காதுபடவே பேசுவர்.

என்னை இப்படிப் பலரும் கவனிக்கவே, அழுக்கு அரை டிராயர் கொண்ட சில மாணவர்கள் நடுவே, கைக் கடிகாரம், சைக்கிள், பேன்ட், டெர்லின் சட்டை, ஜுவல் தீப் தொப்பி (எப்போதாவது) என, அனைவர் கவனத்தையும் மேலும் ஈர்க்க முயன்றேன்.

ஆசிரியர்களும், அப்பா பற்றி வகுப்பில் நல்லபடியாக பாராட்டிப் பேசும்போதும்; 'நாங்கள், உன் அப்பாவின் தீவிர வாசகர்கள்...' என்று வெளிப்படையாக கூறியபோதும், என் முக்கியத்துவம் சக மாணவர்களிடையே உயர்ந்தபடி இருந்தது.

என் வகுப்புத் தோழன் ஸ்ரீதர், ஒருமுறை, 'ஏண்டா நேத்து வரலை... நேத்து எல்லா வாத்தியார்களும் உன்னையே கேட்டாங்க தெரியுமா... 'ஏண்டா தமிழ்வாணன் புள்ளை வரலை'ன்னு, சொல்லி வச்ச மாதிரிக் கேட்டாங்கடா... இனிமே நீ, 'கட்' அடிக்கவே முடியாதுடா. நல்லா மாட்டினுட்டே...' என்றான்.

'ஓ... நன்றாகப் படிக்காவிட்டாலும், மற்றவர்கள் கவனத்தை நன்கு தேடிக் கொள்ள முடியும் போலிருக்கிறதே...' என, எண்ணிக் கொண்டேன்.

ஒருமுறை, 'டேய் லக் ஷ்மணா (இயற்பெயர்) உங்கப்பாகிட்ட என்னை ஒருமுறை கூட்டிட்டுப் போடா... ஒரு தடவையாவது பார்த்துடணும்டா...' என்று, நாகரத்தினம் வாத்தியார், வகுப்பறையில் கேட்டார்.

உட்கார்ந்திருக்கும் பெஞ்சிலிருந்து, 2 அடி உயர்ந்து, மறுபடி பெஞ்சிற்கு திரும்பியது போல இருந்தது எனக்கு.

'கண்டிப்பா கூட்டிக்கிட்டுப் போறேன்... நாளைக்கே வாங்க சார்...' என்றேன்.

இவற்றாலெல்லாம் உயர்ந்து விட்ட என் புகழ்(?) போதையை, நிதானப்படுத்தவும், இயல்பு நிலைக்கு திரும்பவும் மிகவும் சிரமப்பட்டேன்.

முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்களை மதிக்கவே மாட்டார்கள். ஆனால், என்னை மட்டும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொள்வர். வகுப்பல்லாத நேரங்களில் என்னுடன் பேசவும் ஆரம்பித்தனர்.

இதனாலோ என்னவோ, மனம் பக்குவப்படாத அந்த வயதில், எனக்குள் திமிர்த்தனம் வளர ஆரம்பித்தது. அதை அடக்க முயன்றாலும், மூடி வைத்த கூடையைத் தள்ளி, தலையை வெளியே நீட்டிப் பார்க்கும் பாம்பு போல, கொழுப்புத்தனம் அவ்வப்போது எட்டிப் பார்த்தது.

சமயங்களில் அப்பாவே காரில் வந்து, பள்ளியில் இறக்கி விடுவார். இதை, பள்ளி வாசலில் எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதை அறிய, காரிலிருந்து இறங்கும்போது தலைகளை எண்ணுவேன்.

மாணவர்கள் பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இறங்கும் நேரத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்துவேன். அப்பாவுக்கா புரியாது... அர்த்தப் புன்னகை ஒன்றை உதிர்ப்பார்.

அப்பா காரில் இறக்கி விட்ட தினங்களில், ஐஸ்கிரீம் வேணுகோபால், காத்தாடி கிருஷ்ணன் ஆகியோரின் பக்கத்தில் நின்று கொண்டால் போதும்...

'டேய்... இன்னைக்கு இவன் கார்ல வந்து இறங்குனாண்டா. அப்பாவே கொண்டு வந்து விட்டாருடா. இவன் அப்பாவை நான் கண்ணாடி இல்லாமப் பார்த்துட்டேனே...' என்று, நன்கு, 'வாய் விளம்பரம்' செய்வர். எனக்கு செம மெதப்பாக இருக்கும். அன்றைக்கு மட்டும், இவர்களுக்கு இரண்டு ஐஸ்கிரீம்.

'ஸ்கவுட்' மற்றும் என்.சி.சி., ஆகியவற்றில் நான் இணைந்தேன். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேனே! கீதா கேப் டிபன், 'ஓசி'யில் கிடைக்கும்.

இவற்றிலும் பி.எஸ்.கே., வாத்தியார் (எழுத்தாளர் கடுகுவின் சகோதரர்) எனக்கு மட்டும், 'டபுள்' டிபன் தருவார். வி.ஐ.பி., புள்ளையாம், நான்! சக மாணவர்கள் பார்த்து வயிறு எரிவர்; இதுவும் பிடித்துப் போனது.

வீட்டிற்கு, என்.சி.சி., உடையுடன் போவேன். அப்பாவுக்கு பெருமை பிடிபடாது.

'லேனா... இந்த உடையிலேயே கொஞ்ச நேரம் இரு. மாத்திப்புடாதே. என்னைப் பார்க்க சில பேர் வர்றாங்க. அவங்ககிட்ட, 'மார்ச் பாஸ்ட்' செய்து காண்பிக்கணும், என்ன?' என்பார்.

'சரிப்பா...' என்பேன்.

தம்பி ரவி தான் எனக்கு, 'கமாண்டர்!'

ரவி, 'கமாண்டு'களைச் சொல்லச் சொல்ல, நான் செம மிடுக்குடன் விறைப்பாக நடந்து காண்பிப்பதை, வந்தவர்கள் மத்தியில் அமர்ந்து பெருமிதமாகப் பார்ப்பார், அப்பா.

எவ்வளவோ பெருமைகளை வாழ்வில் பார்த்த அவருக்கு, ஏனோ என்னை முன்னிலைப்படுத்திப் பார்ப்பதில் தனிப் பூரிப்பு இருந்தது.

ஒருமுறை, இருமுறை அல்ல! அவரைப் பார்க்க பெருங்கும்பல் வரும்போதெல்லாம், 'போ, என்.சி.சி., உடை மாட்டி வந்து, 'மார்ச் பாஸ்ட்' செஞ்சு காமி...' என்பார்.

'அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்பது, இதுதானோ! அதுதான் சிவபுராணம் பாடச் சொல்லி அரங்கேற்றி விட்டீர்களே அப்பா! அப்புறம் என்ன?

சபைக் கூச்சம் போக்குதல், பெருங் கூட்டத்தினரையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான பயிற்சி இது என்பதை, அன்று நான் அறியாமல் போனேன்.

என்னைப் பற்றி அவருக்கு நிறைய எதிர்பார்ப்புகளும், கனவுகளும் இருந்தன. அப்பாவின் உள்நோக்கம் புரியாமல் போனதால், 'சே... என்னை விளையாடப் போக விடாமல் இப்படிப் படுத்துகிறாரே...' என்று சலித்துக் கொண்டதுண்டு.

சரி, தலைப்பிற்கு வருவோம்.

நாளும் பொழுதும் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், ஒருநாள், திடீர் ஞானோதயம் வந்தது. இது என்ன ஆசையா அல்லது லட்சியமா எந்த ரகத்தில் அந்தச் சிந்தனையை அடக்குவது என்றே, எனக்குப் பிடிபடவில்லை. இது சரியா, தவறா என்றே முடிவெடுக்க முடியாத வயது அது.

அப்பாவால் தானே எனக்கு இந்தப் பெயர், புகழ், அங்கீகாரம், இந்தச் சலுகை ஆகியன எல்லாம்? அவரால் தானே நான் அறியப்படுகிறேன்! இந்நிலை மாற வேண்டும்.

வருங்காலத்தில், என்னால் அப்பா அறியப்பட வேண்டும் என்பதே, அந்த எண்ணம். இள வயதில், நான் எடுத்த மிகப்பெரிய உறுதிப்பாடு இதுதான் என்பேன். இது, எவ்வளவு பெரிய கடினமான விஷயம், மகத்தான சவால் என்பதையெல்லாம், நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

தொடரும்

லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us