sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 06, 2020

Google News

PUBLISHED ON : டிச 06, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா-கே

உறவினர் மகனின் திருமணத்துக்காக, மதுரை சென்றிருந்தேன். திருமணம் முடிந்து ஊர் திரும்ப, கார் மற்றும் ரயிலை தவிர்த்து, அரசு பேருந்தில் பயணம் செய்ய முடிவு செய்தேன்.

பேருந்தில் ஏறியதும், வித்தியாசமாக உணர்ந்தேன். பேருந்தின் உட்புறமும், இருக்கைகளும் சுத்தமாக துடைக்கப்பட்டு, 'சானிடைசர்' மணம், மூக்கைத் துளைத்தது.

பேருந்தின் நடத்துனர், ஒவ்வொருவரையும் வரவேற்று, 'மாஸ்க்' அணிய செய்து, சமூக இடைவெளி விட்டு அமர வைத்தார். 'மாஸ்க்' இல்லாமல் வந்தவர்களுக்கு தன்னிடமிருந்ததைக் கொடுத்தார்.

பேருந்து கிளம்ப ஆயத்தமானது.

பேருந்தின் நடுப்பகுதியில் வந்து நின்ற, நடத்துனர், 'பயணிகள் அனைவருக்கும் வணக்கம். இங்குள்ள பயணியர், யார் யார் எந்தெந்த நோக்கத்திற்காக பயணம் செய்கிறீர்களோ, அவர்களது காரியம் இனிதாக நிறைவேற வாழ்த்துகள்...' என்று, வரவேற்பு அளித்தது, ஆச்சரியமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல், பேருந்து எந்தெந்த ஊர்களில் நிற்கும், கட்டணம் எவ்வளவு என்று கூறி, சரியான சில்லரை கொடுக்குமாறும், கோரிக்கை விடுத்தார்.

மேலும், பேருந்தில் யாருக்காவது வாந்தி வந்தால், புளிப்பு மிட்டாய் மற்றும் 'பிளாஸ்டிக் கவர்' இலவசமாக தருவதாக கூறினார்.

அடுத்து அவர் கூறியது தான், 'ஹை-லைட்!'

அதாவது, காலியான தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் உறை, வேர்க்கடலை மற்றும் பழத்தோல் குப்பைகளை, ஜன்னலில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள துணி பையில் போட சொல்லியதோடு, 'இது, நம்ம பேருந்து; இதை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்...' என்றும் கூறி, டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.

நான் காண்பது கனவா, இல்லை நிஜமா... இது அரசு பேருந்து தானா...

வழக்கமாக, 'சள்புள்' என்று எரிந்து விழும் நடத்துனர்களை பார்த்து பழகிய பயணியருக்கு, இவரது பணிவான பேச்சு வியப்பளித்தது. அவரது கோரிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து, முழு ஒத்துழைப்பு கொடுத்ததைப் பார்த்தேன்.

'இதுபோன்ற நடத்துனர்கள், தங்கள் பொறுப்பு உணர்ந்து, பொதுமக்களிடம் தன்மையாக நடந்து கொண்டால், தனியாருக்கு சமமாக அரசு பேருந்துகளும் வருமானம் ஈட்டி தருமே...' என்று நினைத்து, ஊர் வந்து சேர்ந்தேன்.

கே

அலுவலகத்தில் அன்று வந்த தபால்களை மும்முரமாக பிரித்துக் கொண்டிருந்தேன்.

'மணி... ஊரில் இருந்து எப்ப வந்த... கல்யாணம் சிறப்பா நடந்ததா...' என்று கேட்டபடி, வேகமாக வந்தார், லென்ஸ் மாமா. அவரே தொடர்ந்தார்...

'நீ ஊரில் இல்லாதபோது, ரொம்ப, 'போர்' அடிச்சுதா... தீபாவளிக்கு, 'ரிலீசான' ஏதாவது ஒரு சினிமாவுக்கு போகலாம்ன்னு, தியேட்டருக்கு போனேன். 'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகாக அரசு விதித்த விதிமுறைகள் படி, தியேட்டர் சுத்தமாகத் தான் இருந்தது.

'பெண்கள், குழந்தைகள் கூட்டம் இல்லை. இளைஞர்களும், நடுத்தர வயதினரும் தான் வந்திருந்தனர். படம் ஆரம்பமான முதல் அரை மணி நேரம், சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்த சிலர், தம் நண்பர்களுடன் சேர்ந்து பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

'இடைவேளையின் போது அரங்கில் இருக்கும், 'ஸ்நாக்ஸ்' கடைக்கு சென்று, ஏதாவது, 'கொறிக்க' கிடைக்குமா என்று பார்த்தேன். பெரும்பாலானோர், அங்கு விற்ற, 'பாப்கார்னை' அதிக விலை கொடுத்து வாங்கி, 'கொறிக்க' ஆரம்பித்தனர். மற்றும் சிலர், 'பிரெஞ்ச் ப்ரை, சாண்ட்விச், சமோசா' மற்றும் 'கோகோ கோலா' போன்ற பானங்களையும் வாங்கி சென்றனர்.

'டீ, காபி விலை கேட்ட போது, குடிக்கும் ஆசையே போனது. ஏம்பா... சிறு வயதில் நாம் தியேட்டருக்கு சென்றால், முறுக்கு, மிக்சர், வடை மற்றும் போண்டா போன்ற அயிட்டங்கள் தானே விற்கும்; நாமும் ஆசையாக சாப்பிட்டபடி தானே படம் பார்ப்போம்.

'அதுபோல், இப்போதும் விற்றால், தியேட்டர்களின் கவுரவம் போய் விடுமோ அல்லது படம் பார்க்க வருபவர்கள் சாப்பிட மாட்டார்களா... தெருவோர கடைகளில் இந்த அயிட்டங்கள் விற்பதையும் கூட்டம், கூட்டமாக மக்கள் வாங்கி சுவைப்பதையும் பார்த்திருக்கிறோமே...

'இந்த சிறு வியாபாரிகளுக்கு, ஒரு ஓரமாக இடம் ஒதுக்கிக் கொடுத்தால், சுடச்சுட சுவையாக தயார் செய்து கொடுப்பரே...' என்று புலம்பினார், லென்ஸ் மாமா.

'இதுபற்றி தியேட்டர் மானேஜருக்கு, 'ஐடியா' கொடுத்து விட்டு வந்திருக்கலாமே...' என்றேன்.

'சொல்லாம இருப்பேனா... மானேஜரை வரவழைத்து, அங்கிருந்தவர்களின் முன்பாகவே இந்த யோசனையை சொன்னேன். தியேட்டர் முதலாளியிடம் சொல்வதாக கூறினார்...' என்றார்.

'அதானே... லென்ஸ் மாமாவா, கொக்கா...' என, நினைத்துக் கொண்டேன்.



சமீபத்தில் ஜப்பானுக்கு சென்று வந்த, வாசகர் ஒருவர் அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம் இது:

* ஜப்பானில், மொத்த ஜனத்தொகையில், 100 வயதுக்கு உட்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரம்

* ஜப்பானில், 6,800 தீவுகள் உள்ளன

* இங்கு குழந்தைகளை விட, வளர்ப்புப் பிராணிகள் அதிகம்

* அலுவலகத்தில் துாக்கம் வந்தால், துாங்க அனுமதிக்கப்படுவர்

* கறுப்புப் பூனையை இவர்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர்

* ஜப்பானின் கல்வியறிவு விகிதம், 100 சதவீதம்

* பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஜப்பானியர்களுக்கு இதுவரை, 18 நோபல் பரிசுகள் கிடைத்திருக்கின்றன

* நிறைய வீடுகளில் விருந்தினருக்கென தனியாக கூடுதல் காலணிகள் வைத்திருப்பர்

* தினமும் காலையில் குழந்தைகள், பெரியவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் என, அனைவரும் யோகா செய்கின்றனர்

* தாய்ப்பாலுக்கென தனி கடைகள் உள்ளன. இங்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தாய்ப்பால் கிடைக்கிறது

* ஜப்பானில் கோணப்பல் அழகானதாக கருதப்படுகிறது. இதனால், பல்லை கோணலாக்கிக் கொள்ள பெண்கள், பல் மருத்துவரிடம் செல்வதுண்டு

* 'சூப்'புடன் இருக்கும் நுாடுல்ஸ் சாப்பிடும் போது, உறிஞ்சி சத்தத்துடன் சாப்பிட வேண்டும். அப்போது தான் அதை ருசித்து சாப்பிடுவதாக அர்த்தமாம்.

ஜப்பானுக்கு மீண்டும் போக வேண்டும் என்ற ஆவலை துாண்டி விட்டது, இக்கடிதம்.






      Dinamalar
      Follow us