
* எம். சுப்ரமணி, வீரணம்பட்டி, கரூர்: ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்குத் தேவை, விளம்பரங்களா, வாசகர்களா?
விளம்பரங்கள் தான்; ஆனால், வாசகர்கள் இருந்தால் தானே, விளம்பரதாரர்கள், பத்திரிகையை திரும்பிப் பார்ப்பர்!
லெ.நா. சிவக்குமார், சென்னை: ராமதாஸ், வைகோ, வாசன் - இவர்களுக்கு, தமிழக அரசியலில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருப்பதன் காரணம் என்ன?
தொண்டர்கள் கிடையாது... இதனால், செல்வாக்கு இல்லை! ஏதாவது திராவிட கட்சிகளின் முந்தானையை பிடித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்!
எம். பானுமதி, கன்னியாகுமரி: பொறியியல் படிப்பின் மதிப்பு இவ்வளவு குறைந்து கொண்டே வரக் காரணம் என்ன?
அந்தப் படிப்பு படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு குறைந்து வருவதே காரணம்! ஏராளமான பொறியியல் கல்லுாரிகளும், மாணவர் சேர்க்கையின்மையால் மூடப்பட்டு வருகின்றன!
* ரா. இளங்கோ, செங்கல்பட்டு: 'டில்லியில், 2013ல் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அது போன்ற மாற்றம் தான், தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலில் நடைபெறும்...' என்கிறாரே கமலஹாசன்; இது சாத்தியமா?
சாத்தியம் தான்! உடல் நிலையை காரணம் காட்டி ஒதுங்க நினைப்பவர்கள், களம் இறங்கினால் சாத்தியமே! ஆனால், தங்கள் கேள்வியில் குறிப்பிட்ட, 'ஸ்டேட்மென்ட்' கொடுத்தவரால் சாதிக்கவே முடியாது!
என். கணேசன், தென்காசி: எனக்கு பல நண்பர்கள் உள்ளனர்; இவர்களில் என்னைக் காக்கும் நண்பன் யார் என நம்புவது?
ஒரு நண்பனும் காப்பாற்ற மாட்டான்! மனதில் உறுதி வேண்டும்; அந்த உறுதி என்ற, உற்ற நண்பனால் மட்டுமே நம்மை காக்க முடியும்!
கே. கணேசன், சென்னை: 'அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, பிச்சை எடுப்பதற்கு சமம்...' என, உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளதே... இனியாவது திருந்துவரா?
லஞ்சம் வாங்குவது அவர்கள் ரத்தத்தில் கலந்து விட்டது. அதை நிறுத்தினால், அவர்களுக்கு ரத்த புற்றுநோய் வந்து விடும்; கை நீட்டி பழகியவர்கள் ஒருநாளும் மடக்கப் போவதில்லை - சரியான சட்டம் வரும் வரையில்!
ஆர். ஆதிமூலம், மதுரை: எனக்கு அடிக்கடி சோம்பல் ஏற்படுகிறது; இது எதனால்?
தவறான பழக்க வழக்கங்கள் உங்களிடம் இருக்கலாம்! இதனாலேயே உடல் சோம்பல் ஏற்படும். இதற்கு காரணம், அறியாமை. நல்ல நுால்களை படியுங்கள்... ஒழுக்கமாக இருக்கப் பழகுங்கள்; சோம்பல் உங்களை விட்டு ஓடி விடும்!
* பி. ஜெய்குமார், வந்தவாசி: பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத, தி.மு.க., செலவுகளை எப்படி சமாளிக்கிறது?
கை நீட்டி சேர்த்து வைத்த பணம் இருக்கிறதே! இன்னும், 10 பொது தேர்தல் வந்தாலும், செலவுகளை எதிர்கொள்ளும்!