sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

முடிவல்ல ஆரம்பம்!

/

முடிவல்ல ஆரம்பம்!

முடிவல்ல ஆரம்பம்!

முடிவல்ல ஆரம்பம்!


PUBLISHED ON : டிச 06, 2020

Google News

PUBLISHED ON : டிச 06, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஞாயிற்றுக்கிழமையின் சோம்பேறித்தனமான விடியல்... கால் நகங்களை சீராக்கிக் கொண்டிருந்தாள், லாவண்யா.

அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது.

''ஹலோ... உங்க பேரு, லாவண்யாவா?''

''ஆமாம்... ஆனா, நீங்க யாருன்னு புரியலையே.''

''என் பேர் பார்வதி. மிசஸ் ராஜசேகர். இப்ப நான் யாருன்னு புரிஞ்சிருக்குமே?''

பதில் சொல்லாமல் அதிர்ச்சியில் உறைந்தாள், லாவண்யா.

''இங்க உட்கார்ந்து விபரமா பேச முடியாது. பக்கத்து ஹோட்டலுக்கு போய், டிபன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். உடை மாத்திட்டு, சட்டுன்னு கிளம்பு.''

குரலில் இருந்த கம்பீரத்துக்கு கட்டுப்பட வேண்டியிருந்தது. உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் முட்டி மோதின.

'சண்டை போடுவாளோ... என் கணவனை என்னிடமிருந்து பிரிக்காதே என்று கெஞ்சுவாளோ... ஆட்களை வைத்து மிரட்டுவாளோ...'

என்ன செய்வதென்று புரியாமல், உடை மாற்றி கிளம்பினாள், லாவண்யா.

லாவண்யா வேலை பார்க்கும் கம்பெனியின் மேலதிகாரி, ராஜசேகர். 3,000 பேர் வேலை பார்க்கும் இடத்தில் ஆண் - பெண் பழகுவது இயற்கைதானே. ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும் ரீதியில் பேசினர். மற்றொரு நாள், 'லிப்டில்' சேர்ந்து வரும்படி ஆனது.

பெயர்கள், மொபைல் எண்கள் தரப்பட்டன; பெறப்பட்டன. ராஜசேகர் போனில் பேசினபோது மறுக்க தோன்றவில்லை. பேசத் தோன்றியது; பழகத் தோன்றியது. பழக்கம் நெருக்கம் ஆகி, காதலாய் மலர்ந்தது. காதல், திருமணத்தில் முடிய வேண்டும் என்று விரும்பினாள், லாவண்யா.

'நான் ஏற்கனவே திருமணம் ஆனவன்...' தடுமாறினான், ராஜசேகர்.

'என் பெண்டாட்டி ஒரு ராட்சசி, குண்டு, அழகும் கிடையாது; மலடு வேற. குழந்தை பிறக்காததற்கு அவள் உடல் நிலைதான் காரணம்ன்னு, தெரிஞ்சப்புறம் ரொம்பவே பிரச்னை பண்றா. எப்பவும் கத்தல், கூப்பாடு தான். சாமான்களை துாக்கி எறிவா. அன்பா ஒரு வார்த்தை கிடையாது. வீட்டுக்கு போகவே பிடிக்கலை...' என, தன் தரப்பு நியாயம் பேசினான்; கையில் முகம் புதைத்து அழுதான்.

'உன்னைப் பார்த்த நொடியிலேயே விழுந்துட்டேன். தேவதை மாதிரி உன்னை பார்த்ததும் எல்லாம் மறந்துட்டேன். நான் திருமணம் ஆனவன்னு தெரிஞ்சா, என்கிட்ட பழக மாட்டியோங்கிற பயத்துலதான், உண்மையை சொல்லல. என்னை விட்டு போயிடாதே, லாவண்யா...'

இதைக் கேட்ட பின், ராஜசேகர் மேல் இருந்த காதல் தீவிரமானது. இத்தனை அன்பான கணவனிடம் பிரியமாக இருக்கத் தெரியாத அவன் மனைவி மேல், கோபம் வந்தது.

'நீ கவலைப்படாதடா. அந்த சனியன, 'டைவர்ஸ்' பண்ணிடறேன். அப்புறம் உன் இஷ்டப்படி, நாம திருமணம் பண்ணிக்கலாம். ஆனா, அதுவரைக்கும், உன்னைப் பார்க்காம, பேசாம இருக்க முடியாது. ஹாஸ்டலுக்கு வந்து போக முடியாது.

'ஒரு தனி வீடு எடுத்துடறேன். அங்க இருந்துக்கோ. இன்னும் இரண்டு மாசத்துல, 'டைவர்ஸ்' கிடைச்சிடும்...' நம்பிக்கை வார்த்தைகள், ஆசையை தந்தன. ஆனால், அவன் மனைவியே இப்படி வந்து நிற்பாள் என எதிர்பார்க்கவில்லை.

ஹோட்டலுக்கு வந்த பார்வதியும், லாவண்யாவும் தனி அறையில் அமர்ந்தனர். தேவையானதை, 'ஆர்டர்' செய்து, மவுனத்தை கலைத்தாள், பார்வதி.

''என்ன லாவண்யா, ஒண்ணுமே பேச மாட்டேங்கிற... நான் என்ன சொல்வேனோன்னு பயமா இருக்கா?''

''நான்... இங்க, இந்த ஹாஸ்டல்ல இருக்கேன்றதை எப்படி கண்டுபிடிச்சீங்க?''

கடகடவென சிரித்த பார்வதி, ''புருஷன் வேற இடத்துக்கு தடம் மாறிப் போறான்கிறதை பெண்டாட்டியால புரிஞ்சுக்க முடியாதா என்ன... புருஷன்கிட்ட கேட்டேன், சரியான பதில் வரலை... 'டிடெக்டிவ் ஏஜன்சி' உதவியை நாடினேன். எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டாங்க.

''சின்ன வயசுல, உங்க அம்மா, அப்பா இறந்துட்டாங்க. நெருங்கின சொந்தம்ன்னு, யாரும் கிடையாது. ஆபீஸ்ல யார்கிட்டயும் கலகலன்னு பழக மாட்டே.

''வெள்ளிக்கிழமை மட்டும் புடவை கட்டுவ; மற்ற நாட்களில் சுடிதார். போன வாரம், ராஜசேகரோட வெளிய போன, பச்சை கலர்ல மைசூர் சில்க் புடவை வாங்கிக் கொடுத்தாரு. எல்லாம் தெரியும்.''

குற்ற உணர்வில் தலை குனிந்தாள், லாவண்யா.

''இந்தா வச்சுக்கோன்னு ஒரு சாக்லேட் குடுக்க கூட, உனக்கு ஆள் கிடையாது. கம்பீரமா ஒரு ஆள் வந்ததும், 'டக்'குன்னு விழுந்துட்ட. நான் பார்க்க அழகில்லை தான்; குண்டு, கறுப்பு. எங்கப்பாவோட அதீத அன்பு, இப்படி ஒரு பொருந்தா திருமணத்தை தீர்மானிச்சுடுச்சு.

''எங்க அக்கா, ஒருத்தனை காதலிச்சா, யாரு, என்னன்னு கூட கேட்காம மறுத்துட்டார், அப்பா. அவரிடம் பொறுமையா பேசி, காதல்ல ஜெயிச்சிருக்கணும், அக்கா. அப்பாவாவது காதலிக்கிறவனை பத்தி விசாரிச்சு, நல்லவனா இருந்தா, திருமணம் பண்ணி குடுத்திருக்கணும்.

''காதல் வெற்றி பெறலைன்னு, எங்க அக்கா தற்கொலை பண்ணி, செத்துப் போயிட்டா. நானும் காதல்ல விழுந்துடுவேன்னு பயந்து, அவர் ஆபீஸ்ல வேலை பார்த்த, ராஜசேகருக்கு அவசர அவசரமா திருமணம் பண்ணி வச்சுட்டார்.

''ஆனா, ராஜசேகருக்கு, எங்கப்பாகிட்ட இருந்த பணத்து மேல தான் கண்ணுன்னு புரிஞ்சபோது, அவர், உயிரோடு இல்லை. எனக்கு குழந்தை இல்லைங்கிறது, ஒரு சாக்கு. ஏன்... குழந்தை இல்லாதவங்க சந்தோஷமா வாழறதே இல்லையா... மனசுல அன்பு இருந்தா தான் சாத்தியம்...'' குரல் கரகரத்து, கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன, பார்வதிக்கு.

தன் தவறு புரிய ஆரம்பித்தது, லாவண்யாவுக்கு.

''லுக், என் பிரச்னையை சொல்லி, பரிதாபம் தேடிக்க, நான் வரலை. என் புருஷனை விட்டுக் குடுன்னு கேட்கவும் போறதில்லை. எப்ப என் உடல் குறையை காரணம் காட்டி வேற இடம் தேடிப் போனாரோ, அப்பவே இந்த மண வாழ்க்கையில அர்த்தம் இல்லைன்னு புரிஞ்சு போச்சு.

''நான் உன்னைத் தேடி வந்தது, உன்னை பற்றி பேசத்தான். பேசலாமா...''

'தட்டிக்கொடுத்து வழி நடத்த அம்மா இருந்திருந்தால், எனக்கு இந்த நிலை வந்திருக்காதே...' என நினைத்து, துவண்டு போனாள், லாவண்யா.

''என்ன பொண்ணும்மா நீ, கூட வேலை பார்க்கற ஆள், உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா, உடனே மயங்கிடறதா... நீ கேட்டப்புறம், 'நான் திருமணம் ஆனவன். என் பெண்டாட்டி சரியில்லை'ன்னு சொன்னாரே, அதை அப்படியே நம்பிடறதா... விசாரிக்க வேண்டாமா...

''எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாமே... நீ தனியா இருக்க. வேலை பார்த்து சம்பாதிக்கிற. எதுக்கு இந்த, 'செகண்ட் ஹேண்ட்' வாழ்க்கைன்னு யோசிக்கலையா... இப்ப என்னை விட்டு உன்கிட்ட வர்றவர், நாளைக்கு உன்னையும் விட்டுட்டு போனா, உனக்கு ஆதரவா குரல் கொடுக்க யாருமே இல்லை.

''சட்டம் தெரிஞ்சுக்க வேணாமா... விவாகரத்து கேட்டா, இந்தான்னு துாக்கி குடுத்துடுவாங்கன்னு நினைச்சியா... ராஜசேகர் இன்னும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கவே இல்லை. அப்படியே விண்ணப்பித்தாலும், கிடைக்க குறைஞ்சது இரண்டாண்டு ஆகும்.

''இதுல, நான் ஏதாவது எதிர்ப்பு காட்டினா, இன்னும் கூட நாள் ஆகும். அதுவரைக்கும், அவரால உன்னை திருமணம் பண்ணிக்க முடியாது; பண்ணினா அது சட்டப்படி செல்லாது.''

பார்வதியின் ஆணித்தரமான பேச்சுக்கு லாவண்யாவிடம் பதில் இல்லை.

''இப்ப என்ன செய்யிறதுன்னு புரியலை. நீங்க சொல்லுங்க,'' என்றாள், லாவண்யா.

''பார்த்தியா, இப்பத்தானே சொன்னேன். யார் என்ன சொன்னாலும் உடனே நம்பாதேன்னு. என்னை இதுவரைக்கும் நீ பார்த்தது கூட கிடையாது. நான் நிஜம் பேசறேங்கிறது என்ன நிச்சயம்... உன்னை தொல்லை பண்ண நான் இங்க வரலை.

''எங்க வீட்டுல, ஒரு காதல் தற்கொலையில முடிஞ்சிடுச்சு. அது மாதிரி ஆகக்கூடாதுங்கிற அக்கறையில வந்தேன். ஹாஸ்டலுக்கு போ, நல்லா யோசனை பண்ணு. உனக்கு ராஜசேகர் மேல, அவருக்கு உன் மேல இருக்கிறது நிஜ அன்பாங்கிறத தெரிஞ்சுக்கோ...

''ஏன் சொல்றேன்னா, எங்களுக்கு விவாகரத்து ஆயிடுச்சுன்னா, பணம், வீடு எல்லாம் என்னோட வந்துடும். தட்டின குரலுக்கு வேலை ஆள், சுகமான பெரிய பங்களா, எப்பவும் டிரைவரோட நிற்கிற கார். இந்த வசதிகளை இழக்க, அவர் தயாரா இருப்பாரான்னு தெரியாது.

''இதையெல்லாம் விட்டுட்டு, உன் கூட வந்தாருன்னா, அது நிஜக் காதல். திருமணம் பண்ணிக்கிட்டு, சந்தோஷமா இரு. ஆனா, அதை, 'செக்' பண்றது, உன் கையிலதான் இருக்கு. ஏமாற ஆள் இருந்தா, ஏமாத்தறவங்களும் இருப்பாங்க.

''ராஜசேகர் பேச்சை கேட்டுக்கிட்டு அவசரமா காலி பண்ணி, தனி வீடு போயிடாத. நான் சொல்றது பெண்ணான உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். நான் சொன்னதுக்காக அவசரப்பட்டு, எந்த முடிவையும் எடுக்க வேணாம். நான் சொல்றது நியாயம்கிறது புரிஞ்சா, உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா, எனக்கு போன் பண்ணு,'' என்ற பார்வதி, டிபனுக்கு பணத்தை கொடுத்து விட்டு, வெளியேறினாள்.

ராஜசேகர் உருவகப்படுத்திய பார்வதிக்கும், நேரில் பார்த்தவளுக்கும் எவ்வளவு வித்தியாசம்... இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், காதல் என்று சொன்னதும் மயங்கிய, தன் தவறு புரிந்தது.

எதுவும் தெரியாதது போல் ராஜசேகரிடம் பேசினாள்.

விவாகரத்து பற்றிய கேள்விகளுக்கு, முன்னுக்கு பின் முரணான பதில்கள் வந்தன. லாவண்யாவை தனி வீட்டுக்கு அழைப்பதிலேயே குறியாக இருந்தான்.

பார்வதியுடன் வசதியான வாழ்க்கை, வெளி உலகில் நல்லவன் என்ற அடையாளம், ஆசைக்கு லாவண்யாவுடன் மறைவு வாழ்க்கை என்று, திட்டம் போட்டிருந்தது புரிந்தது. அதை லாவண்யா புரிந்துகொண்டு விட்டாள் என்று தெரிந்தபோது, கோபம் வந்தது.

''என்ன பெரிய இவ மாதிரி பேசற. என் கூட இவ்வளவு நாள் சுத்தியிருக்க, ஹோட்டலுக்கு வந்திருக்க. அதையெல்லாம் போன்ல போட்டு அனுப்பிடுவேன். வேற எவனும் உன்னை கட்டிக்க மாட்டான். நான் சொன்னபடி இரு. இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.''

பார்வதியின் உதவியை நாடினாள், லாவண்யா.

''மிரட்டினா நீ ஏன் பயப்படற... குரைக்கிற நாய் கடிக்காது. உன் புகைப்படத்தை போட்டா, கூடவே ராஜசேகர் புகைப்படம் வராதா... ஆனா, என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேன்னு சொன்னார் இல்லையா... அதுக்கு கவனமா இருந்துக்கோ... கோபத்துல கொலை கூட செய்ய துணிஞ்சுடுவாங்க...

''அதனால, 'ராஜசேகர் மூலமா ஆபத்து இருக்கு'ன்னு, போலீஸ்ல புகார் குடு. 'ஒரு பட்டன் தட்டினா, 'வாட்ஸ் ஆப்'ல, உங்க பேரை, புகைப்படத்தை, நடந்ததை சொல்ல என்னாலும் முடியும்'ன்னு, ராஜசேகர்கிட்ட சொல்லு...

''பணிய வேண்டிய இடத்துல பணியணும், தப்பு நடந்தா தட்டிக் கேட்கணும்; நிமிர்ந்து நிற்கணும். துணிந்த பின் மனமே, துயரம் கொள்ளாதே...'' என்று வழி காட்டினாள்.

வழுக்கி விழும் நிலையில் இருந்தவளை கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்; மன இறுக்கம் குறைய, வழிகள் சொல்லிக் கொடுத்தாள்.

அப்படியும் அலுவலகத்தில், குறுகுறுத்த பார்வைகளையும், ராஜசேகரின் மறைமுக மிரட்டல்களையும் எதிர்கொள்ள முடியாமல் தவித்தாள், லாவண்யா.

''பிடிக்கலைன்னா வேலையை ராஜினாமா செஞ்சுடு, லாவண்யா,'' என்றாள், பார்வதி.

''வேலையை விட்டுட்டா, எப்படி?''

''வாழ நினைத்தால் வாழலாம்...'' பார்வதியிடமிருந்து பதிலாய் வந்தது பாட்டு.

''லாவண்யா... உனக்கு, 'டிரெஸ் டிசைன்' பண்ண நல்லா வரும். உன் உடைகளை நீயேதான் வடிவமைக்கிற இல்லையா... இதெல்லாம் எப்படி தெரியும்ன்னு, கேட்காதே. 'டிடெக்டிவ்'ல கண்டுபிடிச்சு சொன்னாங்க.

''சின்னதா கடை ஆரம்பிப்போம். பார்வதி - லாவண்யா சேர்ந்து, 'பாலா பேஷன்ஸ்' என்று பெயர் வைப்போம். வெவ்வேறு இடங்களில் துணி வாங்கி தைப்போம். நல்லா போச்சுன்னா, 'டெவலப்' பண்ணுவோம்.''

''இல்லைன்னா?''

''கடையை மூடிட்டு, தள்ளு வண்டியில இட்லி விற்போம்,'' சொல்லிச் சிரித்தாள், பார்வதி.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், உலகில் எதற்கும் அஞ்சாத பார்வதி உயர்ந்து நின்றாள்.

அவளுக்கும் அன்பு காட்ட யாருமில்லை தான். ஒரே அக்கா தற்கொலை செய்து கொண்டாள். அப்பாவும் இல்லை. கட்டின புருஷன், வேறு பெண்ணை தேடிச் சென்றாலும், கலங்காது நிற்கிறாள்.

முடிவுகளை ஆராய்ந்து எடுக்கிறாள். இன்னொரு பெண் ஏமாறக்கூடாது என்று, அக்கறையுடன் உதவுகிறாள். மனதில் உறுதி வேண்டும் என்பதை, வாழ்ந்தே

நிரூபிக்கிறாள்.

பழகப் பழக பார்வதியின் தன்னம்பிக்கை ஒட்டிக்கொண்டது. 'பாலா பேஷன்ஸ்' பிறந்தது. உண்மையாக வாழ விரும்பிய இரண்டு தன்னம்பிக்கை பெண்களின் முயற்சி, வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்தது.

ர. கிருஷ்ணவேணி

குடும்பத் தலைவி. கணவர் தந்த ஊக்கத்தில் எழுத ஆரம்பித்து, 10 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை, 60 சிறுகதைகள் வெளியாகி உள்ளன; ஏழு சிறுகதைகள், பரிசு பெற்றுள்ளன.






      Dinamalar
      Follow us