தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உழைக்கும் முதியோருக்கு உதவலாமே!

ஏதேனும் பொருளை விற்பனை செய்யும் பொருட்டு, தலைச்சுமையோடு முதியோர் யாரேனும் எங்கள் தெருவுக்கு வந்தால், அவரை ஓரிடத்தில் அமரச் செய்து, அப்பொருள் தேவைப்படும் வீடுகளுக்கும், கடைகளுக்கும், நேரிடையாகவோ, மொபைல் போனிலோ தகவல் தெரிவித்து, விற்பனையும் செய்து தருவர், எங்கள் பகுதி இளைஞர்கள். அதோடு நில்லாமல், யாராவது ஒருவர் வீட்டிலிருந்து, அந்த முதியவருக்கு உணவும் ஏற்பாடு செய்து கொடுப்பர்.

நான்கு நண்பர்கள் கூடினால், குடித்து, புகைத்து, ஊதாரியாக அரட்டையடித்து, உருப்படாமல் போவர் என்பதை மாற்றி, உழைக்கும் முதியோருக்கு உதவும் மனப்பாங்கோடு அவர்கள் இருப்பது, எங்கள் பகுதியினருக்கு பெருமை தருவதாக உள்ளது.

முதியோருக்கு உதவுவதன் மூலம், வேலையில்லாத இளைஞர்கள், தற்சமயம் சுயதொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.

வேலையில்லா இளைஞர்களே... நீங்களும், உங்கள் பகுதி உழைக்கும் முதியோருக்கு உதவிடுங்கள். அவர்கள் மூலம் வேலையின்மையை விரட்டி, சுயதொழிலில் ஈடுபடுங்கள்.

ஆர். செந்தில்குமார், மதுரை.

ஸ்வீட் வேண்டாம்; காய் - கனிகள் போதும்!

எங்கள் வீட்டிற்கு வந்த தாய் மாமன் குடும்பத்தார், காரிலிருந்து இரண்டு மூட்டைகளை இறக்கினர். அதில், இரண்டு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் இருந்தன.

மாமாவை வரவேற்ற அம்மா, 'ஏண்டா, இப்படி மூட்டையை சுமந்து வந்திருக்கிறாயே, என்ன வேலை இது...' என்று, திட்டினார்.

'அக்கா... நம் ஊரில் ஒரு பெரியவர், 'அக்கா வீட்டிற்கு போகிறேன் என்கிறாயே, ஸ்வீட், பலகாரம் வாங்குவதற்கு பதில், சத்தான, பசுமையான காய்கள் வாங்கி கொண்டு போய் கொடு...' என்றார். ஸ்வீட், காரம், பிஸ்கெட் வாங்குவதை விட, பசுமையான சத்தான காய்கறிகள் வாங்கி வந்தால், உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என, வாங்கி வந்தேன்...

'மேலும், 1,000 - 500க்கு, சுவீட், எண்ணெய் பலகாரத்தை வாங்குவதை விட, 'கொரோனா' காலத்தில், சத்தான, பசுமையான காய்கறிகள் மேலானவை. நோய் எதிர்ப்பு சக்தி தரும் காய்கறிகள் உடல்நலத்திற்கு நல்லது. அந்த எண்ணத்தில் தான் வாங்கினேன்...' என்றார்.

உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு போக சந்தர்ப்பம் ஏற்பட்டால், இதுபோன்ற சத்தான, பசுமையான பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்லுங்கள். வீட்டில் உள்ளவர்களும் சந்தோஷத்துடன், எந்த அச்சமும் இல்லாமல் சாப்பிடுவர்.

ஏ.எம்.இஸ்மாயில், திருப்பூர்.

உறவுகளை புதுப்பிக்கும், 'பாட் லக்' விருந்து!

ஞாயிறன்று, தன் குடியிருப்பில், வித்தியாசமான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக, என்னை அழைத்தார், நண்பர். விருந்துக்கு, இரவு, ௭:௦௦ மணிக்கு வரும்போது, எங்கள் வீட்டு, 'ஸ்பெஷல் அயிட்ட'மான சுண்டலை செய்து எடுத்து வருமாறும் கூறினார்.

'அப்பார்ட்மென்ட்' பின்புறம், ஷாமியானா பந்தல் போட்டு, அனைவரது வீட்டிலிருந்தும் எடுத்து வந்திருந்த உணவு பதார்த்தங்களை மேஜையில் வைத்திருந்தனர்.

சிறிது நேரத்தில், அறிமுகப்படலம், குசல விசாரிப்புகள், தங்கள் பிரச்னைகள், சந்தோஷங்களை பகிர்ந்தவாறு, எடுத்து வந்த பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தோம்.

'இதற்கு, 'பாட் லக்' விருந்து என்று பெயர். அனைவரும், தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை எடுத்து வந்து, கூட்டாஞ்சோறு போல, ஒருவருக்கு ஒருவர் பரிமாறி உண்ணும் முறை.

'பொதுவாக, கார்ப்பரேட் நிறுவனங்களில் இதை கடைப்பிடிப்பர். இம்முறையை, 'அப்பார்ட்மென்ட்' நண்பர்கள் மத்தியில், மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்வதால், அனைவருடனும் பேசி மகிழவும், தங்கள் மன அழுத்தத்தை போக்கும் வாய்ப்பாகவும் இருக்கிறது...' என்றார், நண்பர்.

'கெட் டுகெதர்' என்றாலே, நண்பர்களின் உற்சாகபான பார்ட்டி தான் என்ற நிலை மாறி, இதுபோன்ற ஆரோக்கியமான சந்திப்பாகவும் அமைந்தது, வியப்பாக இருந்தது.

நவீன யுகத்தில், பண்டைய கால கூட்டாஞ்சோறு, நிலாச்சோறு போன்ற நிகழ்வுகள் அரிதாகிவிட்ட போதும், இதுபோன்ற, 'பாட் லக் பார்ட்டி' மூலம் உணவை மட்டுமல்லாது, நம் அன்பையும் பரிமாறிக் கொள்ளலாமே!

எம். விக்னேஷ், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us