தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 30, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடி வாழ்ந்தால்...

எங்கள் அடுக்கு மாடி கட்டடத்தின் எட்டு வீடுகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று, பலதரப்பட்ட மொழிகள் பேசும் மக்கள் வசிக்கின்றனர். எங்கள் குடியிருப்புக்கு பக்கத்து வீட்டில் கன்னடியர் குடும்பம் உள்ளது. புகைப்படத்தில் ஏற்கனவே இரு வீட்டாருக்கும் பிடித்த நிலையில், அவர்கள் வீட்டு பெண்ணை நேரில் பார்த்து பேச, வெள்ளியன்று நாள் குறித்திருந்தனர்.

ஆனால், மாப்பிள்ளை பையனின் பதவி உயர்வு காரணமாக, டில்லிக்கு வரும்படி உத்தரவு வந்ததால், உடனே போக வேண்டியிருந்தது. மருமகள் வீட்டுக்கு வருமுன்பே, மகனுக்கு, 'ப்ரமோஷன்' கிடைத்தது என்று சந்தோஷப்பட்டு, வியாழக்கிழமை காலையில் போன் செய்து, 'இன்று மாலையே பெண் பார்க்க வருகிறோம். தாம்பூலம் மாற்றிக் கொள்ளலாம்...' என்று, தகவல் கூறினர், பையன் வீட்டார்.

திடீரென கூறியதால் திகைத்து போயினர், பெண் வீட்டார். 'கவலை வேண்டாம். குடியிருப்பில் இருக்கும் நாங்கள் அனைவரும் உதவுகிறோம்...' என, ஆறுதல் சொன்னோம்.

கேசரி, பஜ்ஜி, சேமியா பாயசம், சாம்பார் சாதம், தயிர் சாதம், காய், கூட்டு என்று, ஆளாளுக்கு ஒன்றை தயார் செய்தோம். அதற்குள் ஒருவர், கடைக்கு போய், பூ, பழம் வாங்கி வந்தார். வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, கோலம் போட்டனர்.

இப்படி, எட்டு வீடுகளின் ஆண்களும், பெண்களும் சேர்ந்து மகிழ்ச்சியாக எல்லா வேலைகளையும் முடித்தோம். மாப்பிள்ளை வீட்டிலிருந்து, 10 பேர் வந்திருந்தனர். பெண் பார்க்கும் படலம் சிறப்பாக முடிந்து, தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பார்த்து அசந்து போன மாப்பிள்ளை வீட்டார், 'எட்டு குடும்பங்களும் சேர்ந்து ஜமாய்த்து விட்டீர்களே... மாப்பிள்ளைக்கும், பொண்ணுக்கும் அப்புறம் திருஷ்டி கழிக்கலாம். முதலில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள எல்லாருக்கும் திருஷ்டி கழிக்க வேண்டும்...' என்று சொல்லி, சந்தோஷமாக விடைபெற்றனர்.

'கூடி வாழ்ந்தால், கோடி நன்மை' என்று, சும்மாவா சொல்லி வைத்தனர்.

— மரகதம், சென்னை.

கீரைக்கார பாட்டியின் கனிவு!

எங்கள் பகுதியில், பக்கத்து கிராமத்திலிருந்து வரும் பாட்டி ஒருவர், கீரை வகைகளை எடுத்து வந்து விற்பனை செய்வார். பெரும்பாலான குடும்பத்தினர், அந்த பாட்டியின் வாடிக்கையாளர்கள் தான். அதற்கு காரணம், அந்த பாட்டி, 'கீரை வகைகளை, 'பிரிஜ்'ஜில் வைத்து சமைக்கக் கூடாது; 'பிரெஷ்'ஷாக இருக்கும்போதே சமைத்து விடவேண்டும்...' என்று, கனிவுடன் கூறி, அவரே கீரையை ஆய்ந்தும், தருவார்.

அதுமட்டுமின்றி, எந்தெந்த கீரையை எப்படி சமைக்க வேண்டும், கீரையில் என்னென்ன, 'வெரைட்டி' செய்யலாம் என்றும், 'டிப்ஸ்' தருவார். அது, புதிதாக சமைப்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

செய்யும் வியாபாரத்திலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் மட்டுமே குறியாக இருப்போர் மத்தியில், தன் இனிமையான செயல்முறையால், நுட்பமான வியாபார யுக்தியை கற்பித்து வருகிறார், கீரைக்கார பாட்டி.

டி. பிரேமா, மதுரை.

தொழில் சிறக்க...

சமீபத்தில், 'டூ - வீலர்' பழுதாகி, நடு ரோட்டில் நின்று விட்டது. அதை தள்ளியபடியே அருகில் உள்ள, 'மெக்கானிக் ஷாப்'பில், கொண்டு நிறுத்தினேன். மெக்கானிக் இளைஞரை, எங்கோ பார்த்த ஞாபகம் வர, அது குறித்து அவரிடம் விசாரித்தேன்.

'சர்வீஸ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்தேன். சொந்தமாக இந்த கடை ஆரம்பித்து, மூன்று மாதங்கள் ஆகிறது...' என்றார், அந்த இளைஞர். கடையில் நிறைய டூ - வீலர்கள் இருந்தன. இரு மெக்கானிக்குகளை பணியில் அமர்த்தி இருந்தார். குறுகிய காலத்தில், தொழில் முன்னேற்றம் அடைந்திருப்பதை கண்டு, மலைப்பாக இருந்தது.

பழுதுக்கான, 'பில்'லுடன், கடை பெயர் அச்சிடப்பட்ட கையேடு ஒன்றையும் கொடுத்தார்; புரட்டிப் பார்த்தேன். அதில், 'பஞ்சர்' போடும் நபர்களின் மொபைல் போன் எண்கள் மற்றும் மாவட்டத்திற்குள் இருக்கிற பெட்ரோல் பங்குகளின் பெயர்கள்; மழை மற்றும் வெயில் காலங்களில், டூ - வீலரை கையாள்வது குறித்த தகவல்கள் இருந்தன.

இதுதவிர, 'ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ்' பொருத்தி தரப்படும். அதை சம்பந்தப்பட்ட நபர்கள் சோதித்து கொள்ளலாம். என்ஜின் ஆயில் கலப்படம் இன்றி வாடிக்கையாளரின் முன்னிலையில், ஊற்றி தரப்படும் என, கடையின் சிறப்பு அம்சங்களை பற்றி மேலும் சில தகவல்களும் இருந்தன.

கடையின் குறுகிய கால வளர்ச்சிக்கு, இவைகள் தான் காரணம் என புரிந்தது.

'இந்த புத்தகம் குறித்த யோசனை உங்களுக்கு எப்படி தோன்றியது?' என, கேட்டேன்.

'லோக்கல் மெக்கானிக் என்றவுடனேயே, 'அவன் ஏமாற்றுவான்...' என, சிலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். இதனால், ஒழுங்காக வேலை செய்பவர்களையும், சந்தேகிக்கும் நிலை உருவாகிறது. எனவே தான், இந்த புத்தகத்தை அச்சிட்டு, வாடிக்கையாளர்களிடம் வழங்கி வருகிறேன்.

'தற்போது, நான் எதிர் பார்த்ததை விட, கடை மிக சிறப்பாக இயங்குகிறது. இன்னும் ஒரு கடை ஆரம்பிக்கும் ஏற்பாட்டில் இருக்கிறேன்...' என்றார். அவரின் வித்தியாசமான முயற்சியை, பாராட்டினேன்.

மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us