
மீன் பிடிக்க கற்றுக் கொடுங்களேன்!
உறவினர் வீட்டு திருமண வரவேற்புக்கு, பூங்கொத்து வாங்கிச் சென்றிருக்கிறார், நண்பர்.
போகும் வழியில், சாய்பாபா கோவில் வாசலில், வயதான ஒருவர், தனக்கு முன் ஒரு துண்டை விரித்து, யாரிடமும் யாசகம் கேட்காமல், அமைதியாக உட்கார்ந்திருந்துள்ளார்.
அத்துண்டின் மீது, பூங்கொத்தை சுற்றி வந்த பேப்பரை விரித்து, பூங்கொத்தை அவிழ்த்து, ரோஜா மலர்களை காம்புடன் பரப்பி வைத்துள்ளார். 10 ரூபாய் நோட்டை முதியவர் கையில் திணித்து, ஒரு ரோஜாவை மட்டும் எடுத்து, சாய்பாபா கோவிலுக்குள் சென்று வழிபட்டார், நண்பர்.
இதைப் பார்த்த பலரும், 10 ரூபாய் நோட்டுகளை பெரியவரிடம் கொடுத்து, ரோஜாக்களை வாங்கிச் செல்ல, கால் மணி நேரத்தில் அனைத்து ரோஜாக்களும் சாய்பாபா கோவிலுக்குள் சென்று விட்டன.
முதியவர் கையில், 250 ரூபாய்க்கு மேல் சேர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு பிறகு, அதே கோவில் வழியாக நண்பர் செல்லும்போது, யதேச்சையாக முதியவரை பார்த்துள்ளார்.
நண்பரை கையெடுத்து கும்பிட்டவர், பெஞ்ச் மீது, மலர் கொத்துகளை பரப்பி, வியாபாரம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.
மன நிறைவுடன் திரும்பிய நண்பர், நடந்தவைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
மீன் சாப்பிட கொடுப்பதை விட, அதை பிடிக்க கற்றுக் கொடுப்பதே மகிழ்ச்சியானது என்பதை புரிய வைத்த நண்பரை பாராட்டினேன்.
- வேத. புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.
நீங்களும் முயற்சி செய்யலாமே?
பாலிடெக்னிக் முடித்தவுடன், சென்னையில் உள்ள பிரபல, 'பைக்' கம்பெனியில் பயிற்சி பெற்று, சிங்கப்பூரில் ஒரு கம்பெனியில் பணியில் சேர்ந்தேன். 'கொரோனா' தாக்குதல் ஆரம்பமானதும், ஊருக்கு வந்து விட்டேன்.
வருமானத்துக்கு என்ன செய்வது என்று யோசித்த நான், நண்பர் ஒருவர் மூலம் கருங்கோழி வளர்ப்பு பற்றி தெரிந்து கொண்டேன். மருத்துவ குணம் கொண்ட, கருங்கோழி முட்டை மற்றும் இறைச்சி நல்ல விலைக்கு போகிறது என்பதை பலரிடமும் விசாரித்து அறிந்து, 50 ஆயிரம் முதலீட்டில் சிறிய அளவில், கருங்கோழிப் பண்ணையை ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில், வியாபாரம் சுமாராக தான் இருந்தது. போகப் போக சூடு பிடித்தது. இப்போது, முட்டை, இறைச்சி கேட்போர் எல்லாருக்கும் கொடுக்க முடியாத அளவுக்கு விரிவடைந்துள்ளது. ஆரம்பத்தில், 'வெளிநாட்டில் வேலை பார்த்த உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது...' என்று கூறியவர்கள், இப்போது, 'கோழி பிசினஸ் நல்லா செய்யறியே...' என, பாராட்டுகின்றனர்.
கோழிகளுக்கு தீவனம் வைப்பது, அதன் குஞ்சுகளை பராமரிப்பது, பண்ணையை சுத்தம் செய்வது என்று, பகல் முழுவதும் பார்க்கிற வேலை, நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கிறது. படிப்புக்கேற்ற வேலை என்று எண்ணாமல், சுயதொழிலில் இறங்கியதால், யாரிடமும், எதற்கும் கையேந்தாமல், ஓரளவு நல்ல வருமானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எந்த தொழில் செய்தாலும், ஆர்வத்தோடு செயல்பட்டு கடுமையாக உழைத்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது, புரிந்து விட்டது. நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே!
- வ. அமுதன், நாகை.
'நாங்க தனியாக இல்லையே!'
மத்திய அரசு பணியிலிருந்து, 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற, நண்பரை பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது, பைக்கில் வந்த ஒருவர், வாசலில் அமர்ந்திருந்த நண்பரிடம், அவரது மாடி வீட்டை, வாடகைக்கு பார்க்க விருப்பப்படுவதாக சொன்னார்.
வீட்டை சுற்றிக் காட்டிய நண்பரிடம், 'வயதான காலத்தில், இவ்வளவு பெரிய வீட்டில் உங்கள் மனைவியோடு இருக்கிறீர்களா...' என்று கரிசனத்துடன் கூறினார். 'இல்லையே, பக்கத்து தெருவுல இருக்கிற என் தம்பி, அடிக்கடி வந்து எங்களை கவனிச்சுப்பான். காவல்துறையில் உயர் அதிகாரியாய் இருக்கிறான்...' என்றார்.
வீடு பார்க்க வந்தவரை அனுப்பிவிட்டு, என்னிடம், 'வயதானோரை இரக்கமின்றி கொலை செய்யும் இந்தக் காலத்தில், நாம் தனியே இருப்பதை காட்டிக் கொள்ளக் கூடாது என்று தான், அப்படி ஒரு பொய்யை அடிச்சு விட்டேன்...' என்றார்.
நண்பரின் எச்சரிக்கை உணர்வையும், சமயோசித புத்தியையும் வியந்தபடியே, வீட்டுக்கு திரும்பினேன்.
- எஸ். வைத்தியநாதன், மதுரை.

