
தட்சிணாயண காலம் எனப்படும் சூரியனின் தெற்கு நோக்கிய பயண காலத்தின் துவக்க மாதம், ஆடி. நமக்கு, ஆறு மாதம் என்பது, தேவர்களுக்கு ஒரு பகல் அல்லது ஒரு இரவு.
தை முதல் ஆனி வரை, பகல் பொழுதில் விழித்திருந்த தேவர்கள், ஆடி முதல் மார்கழி வரை, உறக்கத்தில் ஆழ்ந்து விடுவர் என்பது ஐதீகம். இந்த காலத்தில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் அம்பாள் வழிபாடு பிரசித்தமாக இருக்கிறது. இது ஏன் தெரியுமா?
சூரியன் உதிக்கும்போது கவனித்தால் தெரியும். தை முதல் ஆனி வரை சூரியன், கிழக்கிற்கும், வடக்கிற்கும் இடையில் உதிப்பது போல் தோற்றம் தரும். இதை உத்ராயண காலம் என்பர். உத்தரம் என்றால் வடக்கு. இது, சூரியனின் வடதிசை பயண காலம்.
ஆடி முதல் மார்கழி வரை கிழக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் உதிப்பது போல் தோன்றும். இது, தட்சிணாயண காலம். தட்சிணம் என்றால் தெற்கு. இதனால் தான் தெற்கு நோக்கிய கடவுளை, தட்சிணாமூர்த்தி என்பர்.
தட்சிணாயண காலத்தில், தேவர்கள் ஓய்வெடுப்பதால், உலக உயிர்களை, தாயான பராசக்தி பாதுகாக்கிறாள்.
இரவில் குழந்தை அழுது விழிக்கும்போது, வீட்டிலுள்ள மற்றவர்கள் எல்லாம் துாங்கினாலும், தாய் மட்டும் பதறி எழுந்து, குழந்தையின் அழுகையை நிறுத்த பாலுாட்டுவாள். அதே போல்தான், அம்பாளும் நம் மேல் கொண்ட கருணையால், விழித்திருந்து, பாதுகாக்கிறாள்.
இதற்கு நன்றிக்கடனாகவே, தட்சிணாயணத்தின் முதல் மாதமான ஆடியில், நம்மைக் காக்கும் அம்பாளை மகிழ்ச்சிப்படுத்த, சிறப்பு பூஜை செய்கிறோம். அவளுக்கு ஆடிக்கூழ், வேப்பிலை, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்த அரிசி மாவு (துள்ளுமாவு) ஆகியவற்றைப் படைத்து, பிரசாதமாக உண்கிறோம். பாலபிஷேகம் செய்து, அதை அவளே தருவதாகக் கருதி குடிக்கிறோம்.
குழந்தை பசியாறி விட்டால் உறங்கி விடும். மீண்டும் சில மணி நேரம் கழித்து எழும். அப்போதும் தாய், முன்பு போலவே பாலுாட்டுவாள். தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடியில், நம்மைப் பாதுகாக்கும் அம்பாளும், சற்றே ஓய்வெடுத்து, புரட்டாசியில் மீண்டும் எழுவாள்.
ஒன்பது நாட்கள் தொடர்ந்து விழித்து (நவராத்திரி) நமக்கு வேண்டியதைத் தருவாள். மார்கழியில் நாமே அவளை எழுப்பி விடுவோம். சிறப்பு பூஜைகள் செய்வோம். அவளும் அருள் தந்து வாழ்த்துவாள்.
தட்சிணாயண காலத்தில், முன்னோரும், நம்மைப் பாதுகாக்க வருகின்றனர். இவர்களும் அம்பாளைப் போல் கருணை மிக்கவர்களே. இதனால் தான் இந்த பருவத்தில், அம்பாளை ஆடியிலும், புரட்டாசி, நவராத்திரியிலும் வணங்குவது போல, முன்னோரை ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசையிலும் வணங்குகிறோம்.
தட்சிணாயண காலத்தில் செய்யும் அம்பாள் பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு, நம்மைக் கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும். மனதார வணங்கினாலே போதும். இவர்களின் அருள் பாதுகாப்பு அரணாக நிற்கும்.
தி. செல்லப்பா

