PUBLISHED ON : ஜூலை 25, 2021

முன்னெச்சரிக்கையான தையற்காரர்!
எங்கள் பகுதியில், புதிதாக பெண்களுக்கான கடை திறந்த தையற்காரர் ஒருவர், 'காஜா வேலை செய்வதற்கு, தையல் தொழில் கற்றுக்கொள்ள விருப்பமுள்ள, பெண் பிள்ளைகள் வேண்டும்...' என்றார்.
'வழக்கம்போல, பையன்களை தானே காஜா வேலைக்கு வைத்துக் கொள்வர். நீங்கள் ஏன், பெண் பிள்ளைகள் வேண்டுமென்று, குறிப்பிட்டு கேட்கிறீர்கள்...' என்றேன்.
'நான், ஏற்கனவே பையன்களை தான் வைத்திருந்தேன். அதில் சிலர், வாடிக்கையாள பெண்கள், 'ஆர்டர்' தொடர்புக்காக தரும் மொபைல் எண்ணை குறித்து, வெவ்வேறு எண்களிலிருந்து அழைத்து, ஆபாசமாக பேசுவது மற்றும் வீடியோக்களை பகிர்வது என, தவறான செயல்களில் ஈடுபட்டனர். போலீஸ் வழக்காகி, அங்கிருந்து கடையையே காலி செய்யும்படி ஆகிவிட்டது.
'அதனால் தான், இங்கு இடம் மாறி வந்ததும், முன்னெச்சரிக்கையாக, பையன்களை வேலைக்கு வைப்பதில்லை என்று முடிவு செய்து, பெண் பிள்ளைகளை கேட்டேன். மேலும், வாடிக்கையாள பெண்களின் மொபைல் எண்ணை பெறாமல், அவர்கள் வீட்டு ஆடவர் எண்களையே பெறுவதென முடிவு செய்துள்ளேன்...' என்றார்.
ஒரு தவறிலிருந்து பாடம் கற்று, முன்னெச்சரிக்கையோடு நடக்க எண்ணும், அந்த தையற்காரரை, பாராட்டினேன்.
- எஸ். நாகராணி, மதுரை.
சின்ன உதவி தான்...
நாம் வெளியில் செல்லும்போது, வழியில், 'பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு' மற்றும் 'பேங்க் பாஸ் புக்' போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதாவது கிடைத்தால், அலட்சியமாக கடந்து செல்லாமல், உடனடியாக அதை எடுத்து, பக்கத்தில் இருக்கும் தபால் பெட்டியில் போடலாம். அஞ்சல் துறையினர், உரிமையாளர்களிடம் அதை சேர்த்து விடுவராம்.
தேடிப் போய் நம்மால் கொடுக்க முடியாவிட்டாலும், தபால் பெட்டியில் போடும் சின்ன உதவியையாவது செய்யலாமே!
எம். ராகவன், சென்னை.
'ஊட்ட தயார்... விழுங்க தயாரா?'
ஒருநாள் மாலை, நடுத்தர வயது பெண்கள் சிலர், எங்கள் இல்லம் வந்தனர். முன்பின் தெரியாத அவர்களிடம் பேச தயங்கினேன்.
உடனே அவர்கள், தங்களின் வசிப்பிடம், குடும்ப பின்னணி குறித்து கூறி, 'இது, எங்கள் அடையாள அட்டை, ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தின் நகல்...' என, நிறைய ஆதாரங்களை என்னிடம் கொடுத்தனர். உள்ளே அழைத்து, அமரச் சொன்னேன்.
தங்களின் கல்வி மற்றும் பிற தகுதிகள் குறித்து பேசியவர்கள், 'கணினி ஹார்டுவேர், சாப்ட்வேர், ஹிந்தி, ஷாட்ஹேண்ட், யோகா, நீச்சல், ஸ்போக்கன் இங்கிலீஷ், டிரைவிங் (இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்) என, ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பயிற்சி பெற்றுள்ளோம்.
'இவைகளில் நீங்கள் எதை கற்க விரும்பினாலும், உங்கள் வீட்டிற்கே வந்து பயிற்சியளிக்கிறோம். டிரைவிங், நீச்சல் போன்றவற்றிற்கு மட்டும் வெளியே அழைத்துச் செல்வோம். பாதுகாப்பின்மையால், பயிற்சி நிறுவனம் வந்து பயிற்சிகள் பெற தயங்குகின்றனர், பெண்கள். ஆர்வம் மற்றும் திறமை இருந்தும், பயிற்சி பெற இயலாத பெண்களுக்காகவே, உங்கள் இல்லம் தேடி வருகிறோம்.
'ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சமாக, 100 - 500 ரூபாய் வரை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சிக்கு ஏற்ப கட்டணம் மாறும்.
'இவை தவிர, 'ஜுவல்லரி மேக்கிங், பேஷியல்' மற்றும் தையல் என, சம்பந்தப்பட்ட பயிற்சியாளரை, தங்கள் இல்லத்திற்கே அழைத்து வந்து பயிற்சி அளிக்கிறோம்...' என்றனர்.
அவர்களது முயற்சியை பாராட்டி, எங்கள் வீட்டு பெண்கள் மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்தினரையும் பயிற்சி வகுப்பில் சேர வைத்தேன்.
தி. பூபாலன், காவேரிப்பாக்கம்.
