தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம்! (12)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம்! (12)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம்! (12)


PUBLISHED ON : ஜூலை 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடக காட்சிகளுக்கு, முதல் அமைச்சர்களை அழைத்தது, எஸ்.வி.சேகருக்காகவோ, அவரது நாடகத்தின் வளர்ச்சிக்காகவோ அல்ல. நாடகக்கலையும், நாடகக் கலைஞர்களும் நலிவுற்று விடக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாக, அதிகாரத்தில் உள்ளவர்களை அழைத்தார்.

முதல்வராக கருணாநிதி கலந்து கொண்ட விழாவில், எஸ்.வி.சேகர் பேசும்போது, 'நாடக கலைஞர்களுக்காக, மாவட்டந்தோறும் நாடக மன்றங்களை கட்டித் தாருங்கள். அவர்கள் பயணம் செய்ய, அரசு பஸ்களில் இலவசமாக அனுமதியுங்கள். சென்னையில், மினி அரங்கங்களை கட்டித் தாருங்கள்.

'பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நாடகத்தின் மூலம் அரசுக்கு எதிரான கொள்கைகளை பரப்பி விடுவர் என்பதால், போலீசில் அனுமதி வாங்க வேண்டும் என்று, சட்டம் போட்டிருந்தனர்.

'பிரிட்டிஷார் நாட்டை விட்டு சென்று பல காலமாகிவிட்ட போதும், இன்னும் அந்த சட்டம் இருக்கிறது. நாடகம் போட போலீஸ் அனுமதிக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. அந்த சட்டத்தை எடுத்து விடுங்கள்...' என்று, கோரிக்கைகளை வைத்தார். அதன்பின், எழுத்தாளர் ஞாநி மூலமாக, அந்த சட்டம் எடுக்கப்பட்டது.

எஸ்.வி.சேகரின் நாடகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மேடையேறினால், அதில் வரும் வருமானத்தை பெரும்பாலும் சமூகத்தில் நலிவுற்றவர்களுக்கு கொடுத்து விடுவார். அன்றும் கூட, மாற்றுத்திறனாளிகள் நல நிதியாக முதல்வரிடம், 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்ட, முதல்வர் கருணாநிதி, அன்று நிகழ்த்திய உரை முக்கியமானது...

'இந்த விழாவிற்கு வாழ்த்துரை வழங்கிய, நல்லி குப்புசாமி அவர்களின் தந்தை கூட பிறந்திருக்காத காலத்தில், நான் பிறந்து தொலைத்து விட்டேன். ஆகவே, பல பழைய விஷயங்களை அவைக்கு எடுத்துச் சொல்வது அவசியமாகிறது.

'நான் திருக்குவளையில் இருந்து, என் தந்தையுடன், ஏழு கல் தொலைவு நடந்து சென்று பார்த்ததுதான், கன்னையா குழுவினரின் பகவத்கீதை நாடகம்.

'அந்த நாடகத்தில், யானை, குதிரை படை கொண்ட போர்க்கள காட்சிகளை, ஒலி - ஒளியாலே அமைத்து காட்டியிருப்பர். அதன்பின், நவாப் ராஜமாணிக்கம் நாடகம், பெயர் பெற்றது. நவாப் ராஜமாணிக்கமே, நவாப்பாக நடிக்கும் நாடகம் என்று, விளம்பரம் செய்யப்பட்டது.

'அங்கிருந்து பிறந்தது தான், சக்தி நாடக குழு. அதில், பெண்களே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு, பெண் வேடமிட்டு நடித்தவர் தான், நம் நடிகர் திலகம் சிவாஜி. அதன்பின், டி.கே.சண்முகம், ஆர்.எஸ்.மனோகர் போன்றோர், நாடகத்தை பிரம்மாண்டமாக்கினர்.

'கருத்து சொல்வதற்கு, ஒரு மேஜை, ஒரு நாற்காலி, சில காட்சி அமைப்புகள் போதும் என்று சொல்லி, ஊர் ஊராக சென்று நாடகம் போட்டு ஜெயித்தவர், எம்ஆர்.ராதா. அவரைப் போலவே பெரிய கருத்துக்களை, சின்ன சின்ன வசனங்களில் கொடுத்து, மக்களை சிந்திக்க வைக்கிறார், எஸ்.வி.சேகர்.

'நல்ல கருத்தை சொல்வதற்கு நாடகத்தை பயன்படுத்தினார், அண்ணாதுரை. எழுதியதை அதே தொனியில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, சந்திரோதயம் என்ற நாடகத்தில் அவர் நடிக்கவும் செய்தார். அவரது பாணியில், நானும், துாக்கு மேடை நாடகத்தில் நடித்தேன்.

'நாடகம் என்பது, ரசிகர்களை நேருக்கு நேராக பார்த்து சொல்வது. சினிமா போல, இதில் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை; தவறினால் தவறியது தான். ஆனால், அந்த தவறே வராத அளவிற்கு, எஸ்.வி.சேகர் நடத்திய நாடகம் முழுவதிலும் நிறைந்திருக்கிறார்; மக்கள் மனதையும் மகிழ்ச்சியால் நிறைத்திருக்கிறார்.

'மேலும், 5,500 நாடகம் என்பது, கேட்பவர்களுக்கு வேண்டுமானால் அலுப்பை ஏற்படுத்தலாம். ஆனால், எஸ்.வி.சேகர் கொஞ்சமும் அலுப்பு ஏற்படாமல் நாடகத்தை சந்தோஷமாக நகர்த்திச் செல்கிறார்.

'அன்றாடம் செய்தித்தாள்களை நாமும் தான் படிக்கிறோம். ஆனால், அதை எல்லாம் ஜோக்குகளாக மாற்ற, எஸ்.வி.சேகரால் மட்டும் தான் முடிகிறது. பல செய்திகளை சேகரிப்பதால் தான் அவர், எஸ்.வி.சேகரனாக இருக்கிறார்...' இவ்வாறு பேசி முடித்தார்.

இவரை பற்றி அவர்

சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப, நாடகத்தில் வசனத்தை சேர்த்து, நம்மை சிரிக்க வைப்பதில் வல்லவர், எஸ்.வி.சேகர். மக்களை மகிழ்விப்பதற்காக, அவர் எடுத்துள்ள இந்த நாடக முயற்சி மகத்தானது. அவருக்கு, கலைமாமணி பட்டம் போதாது, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

நல்லி குப்புசாமி



—தொடரும்.

எல். முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us