தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினால்...

சமீபத்தில், திருமண விழாவுக்கு சென்று, மணமேடைக்கு அருகில் அமர்ந்திருந்தேன். மணமேடையில் ஐயர், கெட்டிமேளம் கொட்ட சொல்லி, விரலை உயர்த்தி, மந்திரத்தை உச்சரித்தபடியே, தாலியை மணமகனிடம் கொடுத்தார்.

மணமகளின் கழுத்தில், மணமகன் தாலி கட்ட முயன்றபோது, தாலியை கையால் தட்டி எறிந்து, 'இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை...' என்று சொல்லி, மணமேடையில் இருந்து தன் அறைக்கு ஓடினாள், மணமகள்.

இதை சற்றும் எதிர்பாராத இருவீட்டாரும், திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பெண் வீட்டார் தங்களை அவமானப்படுத்தியதாக கூறி, சகட்டுமேனிக்கு திட்டி, ரகளையில் ஈடுபட்டனர், மாப்பிள்ளை வீட்டார்.

விசாரித்தபோது, மணப்பெண் வேறு ஒருவரை காதலித்திருக்கிறாள். அவரையே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்திருக்கிறாள். இந்த விபரத்தை பலமுறை தன் தாயிடமும், நிச்சயதார்த்தத்திற்கு பின் மணமகனிடமும் இரண்டு, மூன்று முறை கூறியிருக்கிறாள்.

மாப்பிள்ளை வீட்டார் நல்ல வரன் என்பதால், மகள் சொன்னதை பெரிதுபடுத்தவில்லை, பெண்ணின் தாய். பெண் அழகாக இருந்ததால், அவளை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில், இந்த விஷயத்தை அலட்சியமாக விட்டதுடன், பெற்றோரிடமும் சொல்லவில்லை, மாப்பிள்ளை என்பது தெரிந்தது. இதனால், செலவு, அலைச்சல், அவமானம் தான் மிஞ்சியது.

புது கல்யாண மாப்பிள்ளைகளே... உங்களை மணக்கப்போகும் பெண், எவ்வளவு அழகியாக இருந்தாலும், தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினால், தயவுசெய்து அலட்சியப்படுத்தாதீர்.

உங்கள் பெற்றோரிடமும், பெண் வீட்டாரிடமும் விஷயத்தை கூறினால், அவர்கள் கலந்தாலோசித்து, நல்லதொரு முடிவை எடுப்பர். இரு வீட்டு உற்றார் உறவினருக்கும், இது போன்ற தலைகுனிவும் ஏற்படாது.

— ப. சீனிவாசன், கோடிக்கரை.

பதார்த்தங்களை வீணாக்காதீர்!

பிரபல உணவகத்துக்கு, நண்பருடன் மதிய உணவுக்கு சென்றிருந்தேன். பெரிய தட்டில், ஏழெட்டு கிண்ணங்களில், ஸ்வீட், கூட்டு, பொரியல், கீரை, தயிர், பாயசம் என, பரிமாறப்பட்டது.

தட்டை வைத்துவிட்டு நகர முயன்ற சர்வரை நிறுத்திய நண்பர், இனிப்பு, சில கூட்டுகள் அடங்கிய கிண்ணங்களை காட்டி, திருப்பி எடுத்து செல்லுமாறு பணித்தார்.

'ஏன்' என கேட்டபோது, 'எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. இனிப்பு சாப்பிடுவதில்லை. சில கூட்டுகளும் எனக்கு பிடிக்காது. பொதுவாக, உணவை வீண் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை...' என்றார்.

அதுவரை, ஹோட்டலில் எனக்கு பிடிக்காத பதார்த்தங்களை சீண்டாமல் வைத்து வந்த எனக்கு, இது நல்ல பாடமாக அமைந்தது. இந்த, 'ரிட்டன்' பாலிசியை பின்பற்ற துவங்கி விட்டேன். நீங்களும் செய்யலாமே!

ஜெய்சங்கர், சென்னை.

எங்கே போனது மனிதாபிமானம்!

நண்பர் ஒருவருக்கு, இரு மகன் மற்றும் இரு மகள்கள். அனைவரையும் நன்கு படிக்க வைத்து, அரசு பணியிலும் சேர்த்து விட்டுள்ளார். அவர்களுக்கு சிறப்பாக திருமணமும் செய்து வைத்துள்ளார். வெவ்வேறு இடங்களில், தங்கள் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.

பணி ஓய்வுக்குப் பின், சென்னை புறநகர் ஒன்றில் சொந்தமாக வீடு வாங்கி, மனைவியுடன் வசித்து வந்தார், நண்பர். சில மாதங்களுக்கு முன் நண்பர் இறந்துவிட, அம்மாவை பராமரிக்க எந்த பிள்ளையும் முன் வரவில்லை. சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார், நண்பரின் மனைவி.

சமீபத்தில், அந்த அம்மா, 'கொரோனா' தொற்றில் பாதிக்கப்பட்டு, உதவிக்கு யாரும் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டில் வசிக்கும், வேறு மதத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர் ஒருவர், மனிதாபிமானத்துடன், தான் அவரது உறவினர் என்று கூறி, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, இரண்டாவது நாளே அந்த அம்மா இறந்து விட, பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார், பக்கத்து வீட்டு ஆசிரியர்.

'கொரோனா' தங்களுக்கும் தொற்றிவிடும் என்று பயந்து, எட்டிக் கூட பார்க்காமல் இருக்கவே, ஆசிரியரே, அந்த அம்மாவின் உடலை பெற்று, ஹிந்து முறைப்படி அடக்கம் செய்துள்ளார்.

இதெல்லாம் முடிந்து, ௧ம் நாள் காரியம் செய்ய, நண்பரின் வீட்டுக்கு வந்த வாரிசுகள், அக்கம் பக்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிள்ளைகளின் உதாசீன செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர், தெரு வாசிகள். சடங்குகள் செய்ய, அப்பகுதியை சேர்ந்த வைதீகருக்கு தகவல் தெரிவிக்க, அவரும் மறுத்து விட்டிருக்கிறார்.

இது பற்றியெல்லாம், கவலைப்படாமல், தங்கள் அம்மாவின் படத்திற்கு முன், ஏகப்பட்ட ஐட்டங்களுடன் படையல் இட்டு, 16ம் நாள் காரியத்தை தடபுடலாக செய்துள்ளனர். அடுத்து நடந்தது தான் உச்சக்கட்டம். பெற்றோரின் வீட்டை பங்கு போட்டுக் கொள்வதில், வாரிசுகளுக்கிடையே ஏக கலாட்டாவாகி, அடிதடியில் முடிந்துள்ளது.

யதேச்சையாக நான் அங்கு செல்ல, இந்த கூத்துகளை சொல்லி புலம்பினார், பக்கத்து வீட்டு ஆசிரியர். இவர்களது மனிதாபிமானமற்ற செயலை, எங்கே போய் சொல்வது? அக்கம் பக்கத்தினருக்கு இருக்கும் கரிசனம் கூட, பெற்ற பிள்ளைகளுக்கு இல்லையே என்று நொந்து கொண்டேன்.

கே. வெற்றிவேல்முருகன், வடமலைப்பட்டி.

'பஞ்சர்' கடைக்காரரின் அயோக்கியத்தனம்!

உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக, ஸ்கூட்டியில் சென்றேன். அப்போது, நெடுஞ்சாலையின் ஓரிடத்திலிருந்த, வேக தடையின் முன்னும் பின்னும், ஒரு நபர், ஏதோ பொருளை போட்டுப் போவதை கவனித்தேன். அருகே சென்று பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தேன்.

சிறியதும் பெரியதுமான, கூரான இரும்பு ஆணிகள் போட்டிருந்தார். ஏன் இப்படி செய்கிறார் என்ற குழப்பத்தோடு, அருகிலிருந்தவரிடம் விசாரித்த போது, அந்த நபர், சற்று தொலைவில், 'பஞ்சர்' கடை வைத்திருப்பது தெரிந்தது.

அவசர வேலையாக செல்பவர்களின் நேரம் விரயமாவதோடு, சில சமயங்களில் விபத்து ஏற்படவும் வாய்ப்பு அதிகம் என்பதையும் புறந்தள்ளி, தன் சுயலாபத்திற்காக, அந்த, 'பஞ்சர்' கடைக்காரர், இப்படியொரு அயோக்கியத்தனம் செய்வதை அறிந்து, மனம் நொந்தேன்.

இதுபோன்ற நபர்கள், தாமாக திருந்த வேண்டும். அதே நேரத்தில், இப்படிப்பட்ட சுயநல, 'பஞ்சர்' கடைக்காரர்களும் ஆங்காங்கே இருக்கக்கூடும் என்றுணர்ந்து, வேக தடைகள் உள்ள இடங்களில், நாமும் கவனமாக இருக்க வேண்டும்!

- கே.கல்யாணி, விக்கிரவாண்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us