தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உள்ளூர் மக்களுக்கு உதவி!

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், வெளி மாவட்டங்களில் தனியார் தொழிற்சாலைகள், சுய தொழில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து வந்தனர்.

'கோவிட் - 19' பொது முடக்கத்தால், ஊரடங்கு, வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால், சொந்த ஊருக்கு வந்தனர். அவர்களில் சில இளைஞர்கள் ஒன்று கூடி, 'வாட்ஸ் - ஆப்' குழு அமைத்து, ஊரில், பொது காரியங்களில் ஈடுபட துவங்கினர்.

பல ஏக்கர் பரப்பளவில் வீணாகிப் போய் துார்ந்தும், சீமைக்கருவேல மரம் மற்றும் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த உள்ளூர் குளத்தை, உரிய அனுமதி பெற்று, சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சொந்த பணத்தை போட்டு, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, குளம் சீரமைப்பு பணி துவங்கினர். இதைக்கண்ட விவசாயிகள், ஆர்வலர்கள் மற்றும் சிலர், சிறு அளவில் பண உதவி செய்ய முன் வந்தனர். வேலை தடையின்றி நடைபெற்று, முடிந்தது.

பருவ மழை துவங்கும் அக்டோபர் மாதத்தில், குளக்கரையில் மரக்கன்று நடும் பணியும் செய்ய உள்ளனர். பல ஆண்டுகளாக, சும்மா கிடந்த குளத்திற்கு இளைஞர்களால் விடிவு பிறந்தது. சொந்த ஊருக்கு வரும் இளைஞர்கள், வீண் பொழுது போக்ககவும், ஓய்வு எடுக்க மட்டும் செல்லாமல், ஊர் பொது வேலைகளையும் செய்ய ஆர்வம் காட்டினால், அவரவர் கிராமமும் மேம்படுமே!

- எஸ். ராமு, திண்டுக்கல்.

கடிதம் எழுத கற்றுக்கொள்!

வேலை நிமித்தமாக நண்பர் வீட்டுக்கு சென்று, திரும்பும் போது, 'ஒரு கவர் தருகிறேன். போகும் வழியில் அதை கூரியரில் சேர்த்து விடு...' என்றவர், கல்லுாரியில் இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் மகனை அழைத்தார்.

அவனிடம், 'விசிட்டிங் கார்டு' ஒன்றை கொடுத்து, 'கடிதம் எழுதி, மேஜை மீது வைத்திருக்கிறேன். கவரின் முகப்பில், முகவரியை எழுதி வா...' என்றார். முகவரி எழுதிய கவரை எடுத்து வந்து கொடுத்தான், அவன்.

கவரை வாங்கியதும், குழப்பம் அடைந்தேன். ஏனெனில், அனுப்புனர், பெறுனர் என, எதுவும் குறிப்பிடாமல் கவரின் முகப்பில் கொட்டை எழுத்துக்களில் நண்பரது வீட்டு முகவரியும், கவரின் இடது புறம் கீழ் முனையில், கடிதம் போய் சேரவேண்டிய முகவரியும் எழுதப்பட்டிருந்தது.

'ஏன் இப்படி இடம் மாற்றி எழுதியிருக்கிறாய்...' என, கேட்டேன்.

'சரியாகத்தானே எழுதியிருக்கிறேன், அங்கிள். மொய் கவரிலெல்லாம் அப்பா இப்படித்தான் எழுதுவாங்க... அது மாதிரித்தான் நானும் எழுதியிருக்கிறேன்...' என, வெகுளியாக கூறினான். பள்ளியில், நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்றவன்.

மொய்க் கவர் மற்றும் கடிதங்கள் அனுப்பப்படும் கவருக்கு உள்ள வித்தியாசங்களை கூறி, கடிதங்களில் அனுப்புனர், பெறுனர் முகவரி எங்கே எதை எழுத வேண்டும் என, விளக்கினேன். அதன்பின், வேறு ஒரு கவரில் சரியாக எழுதித் தந்தான்.

தற்போது, 'இ - மெயில், வாட்ஸ் - ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' என, இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்துவதால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாமல் போனதே இதற்கு காரணம்.

— ப. சீனிவாசன், கோடிக்கரை.

உடல் எடை குறைப்பு... உஷார்!

அண்மையில், உடல்நலம் குன்றி, படுக்கையில் விழுந்து, உயிரிழந்த தோழியின் அனுபவம் இது: முழங்கால் வலி என, மருத்துவரை பார்க்க சென்றார்.

'உடல் எடை அதிகமாக உள்ளதால் தான் வலி; அதனால், எடை குறைய, மருந்து தருகிறேன். காலை - மாலை தண்ணீரில் கலந்து சாப்பிடுங்கள்...' என்றார்.

மேற்படி மருந்தை, தண்ணீரில் கரைத்து குடித்ததும், அன்று முழுதும் பசி இல்லை. எனவே, எதுவும் சாப்பிடாமல் இருந்து, தொடர்ந்து, குடித்து வர, 3 கிலோ எடை குறைந்ததில், ஒரே மகிழ்ச்சி.

ஒரு மாதத்திற்கு பின், பக்க விளைவுகளால் நடை தடுமாற்றம், பேச்சு குழறல் என, மெல்ல படுக்கையில் விழுந்தாள். நரம்பியல் மருத்துவரிடம் காட்டியதில், மூளை செயல்திறன் குறைந்து வருவதாக கண்டறிந்தனர்.

எடை குறைப்பு என்ற பெயரில், பசி உணர்வு ஏற்படா வண்ணம் எடுத்துக் கொண்ட மருந்தின் பக்க விளைவால், மிகவும் துன்புற்று உயிரிழந்தார். எனவே, எடை குறைப்பிற்காக, யார் எந்த மருத்துவம் சொன்னாலும் கேட்காமல், முறையான உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவு கட்டுப்பாடு தான் சிறந்த வழி என, கடைப்பிடித்தால் போதும்.

எடை குறைப்பு: ஒரு வாரத்தில், 10 கிலோ போன்ற விளம்பரங்கள் மற்றும் மருத்துவர்களை நம்பவே நம்பாதீர்; உஷார்!

-  எஸ். வெண்மதி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us