தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (18)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (18)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (18)


PUBLISHED ON : செப் 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உண்மையில், எஸ்.வி.சேகர் உலகம், அன்பு மயமானது.

நாடகத்தின் மூலம், எஸ்.வி.சேகருக்கு அறிமுகமாகிறவர்கள், கொஞ்ச நாட்களில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாகி விடுவர்.

நட்பை போற்றுபவர், அவர்.

50 ஆண்டுகளுக்கு முன், அவர் பள்ளியில் படித்த போது பழகிய நண்பர்களை தேடிப்பிடித்து, குடும்பத்துடன் அதே பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் சங்கமிக்க வைத்து நடத்திய, பொன் விழாவிற்கு வந்தவர்கள் மகிழ்ந்ததை விட, நெகிழ்ந்தது அதிகம்.

'வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம், நானும், சேகரும் ஒண்ணாப் படிச்சவங்க என்று சொன்னால், நான் ஏதோ கதை விடுவதாக எண்ணி ஏளனமாக பார்ப்பர். ஆனால், அது அத்தனையும் நிஜம் என்பதை, இதோ என் முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்...' என்று, விழாவில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

அந்த விழாவை, வெறும் சந்திப்பு விருந்து என்று முடித்து விடாமல், அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியப் பெருமக்களை வரவழைத்து கவுரவப்படுத்தி, பரிசு வழங்கி, மகிழ்வித்தனர்; படித்த பள்ளிக்கும் நிதி வழங்கினர்.

நண்பர்களிடம் மட்டுமல்ல, உறவுகளிடமும், நட்பு அடிப்படையில் தான் பழகுவார். அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்த நேரம்; ஆவியே உன்னை ஆராதிக்கிறேன் என்ற நாடகத்திற்கு, வருங்கால மாமனார் குடும்பத்தை அழைத்திருந்தார்.

காட்சிப்படி, அமானுஷ்ய சக்தியால் எல்லாரையும் படுத்திக் கொண்டிருப்பான், நாடகத்தின் நாயகன். அவனது அப்பாவாக நடித்தவர், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல், 'டேய்... நீ இப்படியிருந்தா யாருடா உனக்கு பெண் கொடுப்பர்?' என்று, வேதனையோடு வசனம் பேசுவார்.

அந்த நேரம், சற்றும் எதிர்பாராமல் மாமனார் குடும்பம் அமர்ந்திருந்த பகுதியில் இருந்து, 'நாங்க கொடுக்கிறோம்... நாங்க கொடுக்கிறோம்...' என்று, கோரசாக சத்தம் கொடுத்தனர். பார்வையாளர் பகுதியில் இருந்து வந்த வசனத்தைக் கேட்டதும், மேடையில் இருந்த நாடக குழுவினர், தங்களை மறந்து சிரித்து விட்டனர்.

'சக மனிதனை மனிதனாக மதிக்க தெரிந்தால் போதும்; மதிப்பு கூடும். அப்படித்தான் மாமனார் குடும்பத்தினர் என்னிடம் அன்பு பாராட்டினர். முடியும் என்றால் முடியும், முடியாவிட்டால் முடியாது தான். இதுதான் என் பாலிசி.

'இப்படித்தான் என்னை, மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது, இதை, 'டிவி'யில் பார்த்த என் மனைவி, எனக்கு போன் செய்தார். 'என்னங்க... உடனே காரை முதல்வர் வீட்டிற்கு விடுங்கள்...' என்றார்.

'நான், 'ஏன்... அவ்வளவு வேகமா நன்றி சொல்லணுமா...' என்று கேட்டேன். 'அதில்லீங்க... உங்களுக்கு, எம்.எல்.ஏ., வேலை எல்லாம் செட்டாகாது. உடனே போய், 'எனக்கு, 'சீட்' வேண்டாம்...' என்று சொல்லிட்டு வந்துடுங்க...' என்றார்.

'ஒரு வகையில், தொகுதியில் செலவழிப்பதற்கு என்னிடம் பணமும் கிடையாது. ஆகவே, ஆளை விடுங்கள் என்று சொல்லி விடுவோம். நாமும் தப்பித்துக் கொள்வோம், மனைவியும் சந்தோஷப்படுவார் என்ற முடிவோடு, முதல்வரை பார்த்தேன். 'என்னிடம் செலவழிக்க பணம் இல்லை. நான் எம்.எல்.ஏ., சீட் கேட்கவே இல்லை...' என்றேன்.

'ஆனால், அவரோ, 'பணத்தை பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க... நாங்க பார்த்துக்குவோம்... நீங்க நிக்கிறீங்க... ஜெயிக்கறீங்க...' என்று சொல்லி, என்னை அரசியலுக்கு கொண்டு வந்தார்...' என்றார்.

இவரை பற்றி அவர்

இவரை, சினிமா, டிராமாவில் பார்க்கிறதுக்கும், நேரில் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. வீட்டிலும் கலகலப்பான மூடில் தான் இருப்பார். பக்தி அதிகம். ஒழுக்கத்தை ரொம்ப எதிர்பார்ப்பார். தன் குழந்தைகளில் ஆரம்பித்து, பேரன், பேத்தி வரையிலான அவரது உலகம், பாசத்தாலானது. எனக்கு அவரிடம் பிடித்த குணம், மற்றவர்களுக்கு, தன்னால் முடிந்த உதவி செய்வது. இவரது பல நல்ல குணங்களால், என் அப்பா மற்றும் உறவினர்களிடம் எனக்கு எப்போதுமே மதிப்பு அதிகம்.

உமா எஸ்.வி.சேகர்

தொடரும்

எல். முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us