தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

பெங்களூரில் பிறந்து, வளர்ந்து, அரசு பணியிலிருந்து ஓய்வுப்பெற்றவர், அவர். பெங்களூருவாசி ஆனாலும், தமிழில் நல்ல பரிட்சயம் உண்டு. பணி ஓய்வு பெற்று, ஏழு ஆண்டுகள் ஆயிற்று. தற்சமயம், சென்னையில், தன் மகனுடன் வசித்து வருகிறார். நடைபயிற்சி, யோகா என, சுறுசுறுப்பாக இருப்பார்.

'தினமலர் - வாரமலர்' இதழுக்கு அவ்வப்போது, படைப்புகளையும் எழுதி அனுப்புவார்; என் வாசகரும் கூட. எப்போவாவது அலுவலகத்திற்கும் வருவார். சமீபத்தில் அலுவலகம் வந்திருந்தார்.

சூடாக காபி கலந்து கொடுத்தபடி, 'என்ன சார் திடீரென இந்த பக்கம்...' என்றேன்.

'வீட்டிலேயே அடைந்து கிடக்க பிடிக்கலே. அதான் உங்களையெல்லாம் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். லென்ஸ் மாமா, நாராயணன் யாரும் இல்லையா?' என்றார்.

'இப்ப வந்துடுவாங்க. ஏதாவது விஷயம் உண்டா?' என்றேன்.

அவர் வாயை கிளறினால், நிச்சயம் ஏதாவது மேட்டர் கிடைக்குமே என்று தான், துாண்டில் போட்டேன்.

'ஏன் இல்லாம...' என்றபடி, கூற ஆரம்பித்தார்:

நான், அப்ப மைசூர் மாவட்டத்துல, நஞ்சன்குடா தாலுகாவில் வருவாய் துறை அதிகாரியாக இருந்தேன். எனக்கு சீனியராக இருந்த பலர், அங்கு நடந்த விஷயங்களை பற்றி, அடிக்கடி கூறுவது வழக்கம். அப்படி அவர்கள் கூறிய ஒரு விஷயம், இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

நஞ்சன்குடா தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், தாலுகாவின் உதவி ஆய்வாளரிடம், ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில், 'இங்கு குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கு. எங்க வாழைத் தோட்டத்தில் புகுந்து, நாசம் செஞ்சிடுச்சு... எங்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும்...' என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

விசாரித்து, ஆவன செய்வதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்துள்ளார், உதவி ஆய்வாளர்.

உடனே தாசில்தாரை அழைத்து, விவசாயிகளின் புகார் பற்றி கூறி, 'உங்கள் தாலுகாவில் எத்தனை குரங்குகள் உள்ளன என்று, எனக்கு தெரிவிக்க வேண்டும்...' என்று உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தாருக்கு அதிர்ச்சி. நாசமான வாழைப் பயிர்களை கணக்கெடுத்து தானே, நஷ்டஈடு வழங்க வேண்டும். எதற்கு குரங்குகளை கணக்கிட வேண்டும். மேலும், குரங்களை எப்படி எண்ணுவது என்றும் குழம்பியுள்ளார். உதவி ஆய்வாளர் உத்தரவாயிற்றே... மீற முடியுமா?

தன் கீழ் பணிபுரிந்தவர்களை அழைத்து, 'நம் தாலுகாவில் இருக்கும் குரங்குகளை கணக்கிட்டு, நான்கு நாட்களுக்குள் தகவல் தரணும்...' என, கட்டளை இட்டார், தாசில்தார்.

நான்கு நாட்களுக்கு பின், அவர்களை அழைத்து விசாரித்தார். அனைவரும் திருதிருவென விழிக்க, ஒருவர் மட்டும், 'மொத்தம், 3,553 குரங்குகள் உள்ளன, சார்...' என்றார்.

எப்படி இவன் சரியாக எண்ணியிருப்பான் என்று, தாசில்தாருக்கு ஆச்சரியம். கூடவே, இன்னொரு சந்தேகமும் வந்தது.

நமக்கு தெரியாமல், உதவி ஆய்வாளர், வேறு யார் மூலமாவது குரங்குகளை கணக்கெடுத்து சொல்லப் போக, அது, நாம் சொல்லும் எண்ணிக்கைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் என்ன செய்வது! அந்த பணியாளரிடமே அந்த சந்தேகத்தை கூறினார்.

அவனோ, 'அப்படியே கணக் கெடுத்திருந்தாலும், 'நான் சொல்லும் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்தால், வேறு தாலுகாவிலிருந்து இங்கு வந்திருக்கும்; குறைவாக இருந்தால், இங்கிருந்த குரங்குகள், அடுத்த தாலுகாவிற்கு சென்று விட்டிருக்கும்' என்று கூறுங்கள்...' என்றான்.

இந்த பதிலில் திகைத்த தாசில்தார், அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சமாதானம் அடைந்து, உதவி ஆய்வாளரை சந்தித்து, குரங்குகளின் எண்ணிக்கையை கூறினார்.

உதவி ஆய்வாளரும், அதை பதிவு செய்து, தன் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். விவசாயிகளுக்கு நஷ்டஈடு கிடைத்ததா என்ற தகவல் இல்லை.

- இவ்வாறு அவர் கூறி முடித்ததும், அருகிலிருந்த உதவி ஆசிரியைகளின் சிரிப்பொலியால், அந்த இடமே கலகலப்பானது.

'அரசு இயந்திரத்தின் செயல்பாடு, எப்பவுமே, எல்லா இடத்திலும் இப்படித்தான் இருக்கும் போல் இருக்கிறது...' என்று, நான் நினைத்துக் கொண்டேன்.



மராட்டிய மாவீரன் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது:

சிவாஜிக்கு, குரு பக்தி அதிகம். குருவும் அவரை ரொம்பவே நேசித்தார்.

ஒருநாள், இருவரும் காட்டுப் பகுதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். வழியிலுள்ள ஆற்றை அவர்கள் கடந்து போயாக வேண்டும்.

ஆனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருந்ததால், சிறிது தயங்கினர். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்றாலும், வெள்ளத்தின் ஆவேசம், விநாடிக்கு விநாடி அதிகரித்து வந்ததால், அவர்களை யோசிக்க வைத்தது.

அப்போது, 'குருவே... நான் முதலில் நீந்திச் செல்கிறேன். நீங்கள் என்னை பின் தொடர்ந்து வாருங்கள்...' என்றார், சிவாஜி.

'அது முடியாது. நான் தான் முதலில் நீந்திச் செல்வேன். எப்போதும் என்னை பின்பற்றுகிறவன் தானே, நீ. இன்று ஏன் அதை மாற்றுகிறாய்...' என்றார், குரு.

'குருவே... இதுவரை உங்களின் பேச்சை கேட்டு நான் நடந்தேன். ஆனால், இன்று மட்டும் தயவுசெய்து, நீங்கள், என் பேச்சை கேட்க வேண்டும். நான் நீந்திக் கரையேறியதும், அதற்கான காரணம் என்னவென்று சொல்கிறேன்...' என்றார், சிவாஜி.

இருவரும் அப்படியே நீந்திச் சென்று கரையேறினர். கரையேறியதும், 'உன்னை பின்பற்ற சொன்னதன் காரணம் என்ன?' என்று கேட்டார், குரு.

'குருவே... ஆற்றில் இப்போது புது வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை நான் நீந்துகிற பகுதியில் சுழல் ஏதாவது இருந்து, அதில் சிக்கிக் கொண்டால், அதைப் பார்த்து நீங்கள் அதிலிருந்து விலகி சென்று, தப்பித்துக் கொள்ளலாமே... அதற்காக தான், நான் முதலில் நீந்துகிறேன் என்று சொன்னேன்...' என்றார், சிவாஜி.

'நான் முதலில் நீந்திச் செல்லும்போது, அப்படி ஒரு விபத்து ஏற்பட்டால், நீ தப்பித்துக் கொள்ளலாமே... மாணவனாகிய உன் பணி எனக்கு மிகவும் முக்கியமில்லையா...' என்றார், குரு.

'குருவே... மாணவன் என்பவன், மிக மிக சாதாரணமானவன். என்னைப் போல ஆயிரமாயிரம் மாணவர்கள் உங்களுக்கு கிடைப்பர். ஆனால், உங்களைப் போன்ற சிறந்த ஒரு குரு, எங்களுக்கு கிடைப்பது அரிது. அதற்காக தான் உங்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன்...' என்று சொன்னார், சிவாஜி.

அதைக்கேட்டு சிலிர்த்து போனார், குரு.

இப்போதுள்ள மாணவர்கள் அப்படியில்லையே.

தன் ஆசிரியரை, ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டான், ஒரு மாணவன்.

'என்ன விசேஷம்...' என்றார், ஆசிரியர்.

'வீட்டுக் காவலுக்காக, எங்கப்பா ஒரு நாய் வாங்கிட்டு வந்திருக்கார். அந்நியர் யாரும் வந்தா அது கடிக்குதான்னு பார்க்கணும். அதான் உங்களை கூப்பிடுகிறேன்...' என்றான், அந்த மாணவன்.

ஆசிரியரிடம் அவனுக்கு எவ்வளவு மரியாதை பாருங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us