PUBLISHED ON : செப் 19, 2021

உழைக்க, ஊனம் ஒரு தடையில்லை!
எங்கள் குடியிருப்பிலுள்ள, வசதியான குடும்பத்தினர், வீட்டு வேலைகள் செய்ய பணிப்பெண்ணை தேடி வந்தனர். விபரம் அறிந்து, இளம்பெண் ஒருவர், வேலை கேட்டு போயிருக்கிறார். ஒரு கால் விந்தி விந்தி நடந்து வந்த அப்பெண்ணை பார்த்ததுமே, 'உனக்கு வேலை தர முடியாது...' என, கூறிவிட்டனர்.
உடனே அப்பெண், 'உழைப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நம்புங்கள்; எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். என் வேலைகளை பார்த்துவிட்டு, சரி வராது என உங்களுக்கு தோன்றினால், என்னை அனுப்பி விடுங்கள்...' என்று ஆர்வத்தோடும், உறுதியோடும் கூறியிருக்கிறாள்.
வேறு ஆள் கிடைக்கும் வரை அவளை வைத்திருந்து பார்க்கலாம் என்று, அரைகுறை மனதோடு வேலைக்கு சேர்த்துக் கொண்டனர். அவள் சொன்னது போலவே வேலையில் காட்டும் சுறுசுறுப்பையும், நேர்மையையும் பார்த்து, அப்பெண்ணே போதும் என்ற முடிவுக்கு வந்தனர்.
எந்த வேலையிலும், ஊனமில்லாத நபர்களுக்கே முன்னுரிமை தருகின்றனர், பெரும்பாலோர். அப்படியில்லாமல், ஊனத்தை கருத்தில்கொண்டு, அவர்களை புறக்கணிக்காமல் முதலில் வாய்ப்பளிப்போம். அவர்கள், தங்கள் திறமையை நிரூபிப்பர்!
- எஸ். நாகராணி, மதுரை.
சபாஷ் தோழி!
விடுமுறை நாளன்று, தோழியை பார்க்க அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். மாமனார் - மாமியார், தனித்தனியாக அமர்ந்து, கையில் ஒரு பேப்பரும், பேனாவும் வைத்து எதையோ எழுதிக் கொண்டிருந்தனர். அவளின் இரண்டு மகள்களும் தனித்தனியே எழுதிக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட நான் அவளிடம், 'எல்லாரும் பரீட்சை எதுவும் எழுதுகின்றனரா...' என்று கிண்டலாக கேட்டேன். 'கொரோனா நேரம், வீட்டில் பொழுது போகாமல் போரடித்துக் கொண்டிருப்பதால், பல பத்திரிகைகளில் வெளியான, குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் வேறு சில புதிர்களை தனித்தனியாக, 'கட்' செய்தேன். மாமனார் - மாமியாருக்கு, குறுக்கெழுத்து போட்டியையும், பிள்ளைகளுக்கு, புதிர் போட்டி மற்றும் வண்ணமிடுதல் போன்றவற்றை கொடுத்தேன்.
'இது, அவர்களுக்கு பிடித்து போக, பொழுதுபோக்காகவே மாற்றிக் கொண்டனர். இதனால், அவர்களது பொது அறிவு வளர்வதாக, மாமனார் - மாமியார் கூறுகின்றனர். இதே முறையை பயன்படுத்தி, என் பிள்ளைகளுக்கு, 'ஆன்லைன்' வகுப்பில் நடக்கும் பாடங்களை, புதிர் வடிவில் அமைத்து கற்றுத் தருகிறேன்...' என்றாள். தோழிக்கு, 'சபாஷ்' போட்டு வந்தேன்.
என். குர்ஷித், நெல்லை.
மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளலாமே!
எங்கள் ஏரியாவில் தினமும் குப்பை சேகரிக்கும் பெண் ஒருவர், வழக்கத்திற்கு மாறாக கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார். கை விரலில் கட்டு போடப்பட்டிருந்தது. குப்பை சேகரிக்கும் வண்டியில், குப்பைகளை கொட்டிய பின், கையில் உள்ள கட்டு பற்றி கேட்டேன்.
ஒரு வீட்டில் உடைந்த பல்பை, குப்பைகளுடன் கலந்து தந்துள்ளனர். குப்பைகளை பிரிக்கும்போது, உடைந்த பல்பின் துண்டு, விரலை நன்றாக பதம் பார்த்துள்ளது. பின், மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துள்ளார்.
அவர்கள் வாங்கும் சொற்ப வருமானமும், சகிப்புத் தன்மையுடன் செய்யும் இந்த பணியையும், நாம் பெருமைப்படுத்த வேண்டும். இதுபோன்ற உடைந்த பொருட்களை தனியாக எடுத்து வைத்து, அவர்களிடம் சொல்லி தர வேண்டும்.
சிறு செயல்களிலும் மனிதாபிமானத்துடனும், கவனமுடனும் நடக்க முயற்சிப்போம்!
ஜி. சாந்தி, துாத்துக்குடி.
