தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெண் குழந்தை வேண்டும்!

பெண் குழந்தை வேண்டும்!

பெண் குழந்தை வேண்டும்!


PUBLISHED ON : செப் 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண் குழந்தைகளை ஒரு சாரார் விரும்பினாலும், ஆண்களை மட்டுமே பெற்ற பெற்றோரில் பலர், தங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என விரும்புகின்றனர். இக்கால சமுதாயப் பார்வையில் ஆண் குழந்தைகள், தங்கள் பெற்றோரை கவனிப்பது குறைந்து வருகிறது. இதனால், தங்களுக்கு ஒரு பெண் இருக்கட்டுமே என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது.

சரி... பெண் குழந்தை வேண்டுமென்றால், ஆன்மிகம் ஏதாவது வழி சொல்கிறதா என்றால், நிச்சயமாக பாதை காட்டுகிறது. புரட்டாசி மாதத்தில், மஹாளய பட்சம் எனும், 15 நாள் முன்னோர் வழிபாடு நிகழ்ச்சி வருகிறது. இக்காலத்தில், மறைந்த நம் முன்னோர் ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம்.

மஹாளயம் என்ற சொல்லுக்கு, 'மொத்தமாக கூடுதல்' என, பொருள். ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியன்று (இவ்வாண்டு செப்., 21) மஹாளய பட்சம் ஆரம்பமாகும். இதையடுத்து, செப்., 24 சதுர்த்தி திதியில், மகாபரணி எனும் விசேஷ நிகழ்வு வருகிறது. புரட்டாசி மாத பரணி நட்சத்திரம், முன்னோரை வழிபட சிறந்த மாதம். பரணியில் பிறந்தால், தரணி ஆளலாம் என்பர்.

மகாபரணி நட்சத்திரத்தன்று, தங்கள் முன்னோரை வழிபடுபவர்களுக்கே இது சாத்தியமாகிறது. ஏனெனில், இந்த நாளில் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். வியாபாரம், தொழில் போட்டியாளர்களை சமாளிக்கும் திறமை கிடைக்கும்.

இதையடுத்து, செப்., 28ல் வரும் மஹாவியதி, மஹாளய பட்சத்தில் மற்றொரு முக்கிய நாள். 'வியதி' என்றால் 'பேரழிவு!' பேராசை காரணமாக சிலர் நஷ்டப்படுகின்றனர். இதற்கு காரணம் முன்னோர் வாழ்ந்த காலத்தில், அவர்களை சிரமப்படுத்தியதால் தான். இந்த நஷ்டத்தில் இருந்து விடுபட, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், தீர்வு கிடைக்கும்.

செப்., 30ல் வரும் அவிதவா நவமி திதி தான், பெண் குழந்தைகள் பிறப்பதற்காக செய்யப்படும் தர்ப்பண நாள். அவிதவா என்றால், சுமங்கலி. அன்று, தங்கள் வீட்டு ஆண்கள், தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்து முடிக்கும் வரை, பால், டீ, காபி அருந்தக் கூடாது.

அன்று, முன்னோரின் படங்களுக்கு மாலையிட்டு, பலகாரங்கள் படைத்து, வழிபட வேண்டும். சுமங்கலிகளுக்கு, புடவைகளை தானமாக வழங்க வேண்டும். ஒரு சுமங்கலிக்கு வழங்கினாலும் போதும். மனப்பூர்வமாக செய்யும் இந்த தானத்தால், பெண் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அந்தக் குழந்தை புத்திசாலித்தனமாக இருக்கும்.

இந்நாளில் செய்யும் சடங்கை, பாபநாசம் (திருநெல்வேலி), ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம் காவிரி மற்றும் முக்கிய தீர்த்தக்கரைகளில் செய்வது, உடனடி பலன் தரும்.

பெண் குழந்தைகளை, மகாலட்சுமி என்பர். நம் வீட்டிற்கும் மகாலட்சுமி வர, அவிதவா நவமி விரதத்தை அனுஷ்டியுங்கள்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us