PUBLISHED ON : மார் 27, 2022

இப்படி ஓர் ஏமாற்று!
எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி, வெளியூரிலுள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாள்.
அவள் பணிபுரியும் மருத்துவமனைக்கு, இரண்டு மூன்று முறை, வயதான அப்பா, அம்மாவை சிகிச்சைக்கு அழைத்து வந்து போன இளைஞனின் காதல் பேச்சில் மயங்கி, அவனைக் காதலிக்கத் துவங்கியிருக்கிறாள்.
சமீபத்தில், அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகி, வேறு பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளேன். பெருந்தொகை செலவிட வேண்டியுள்ளதால், கையிருப்பு, சேமிப்பு போக, பற்றாக்குறையாகும் ஒரு லட்ச ரூபாயை தந்து உதவுமாறு, இவளிடம் கேட்டிருக்கிறான்.
அவளும், காதல் மோகத்தில், கணவராகப் போகிறவன் தானே என்று, தன் கழுத்திலிருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியைக் கழட்டித் தந்திருக்கிறாள். அதை வாங்கிச் சென்ற பின், அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை; மொபைல் எண்ணும் பயன்பாட்டிலில்லை என்று வந்ததால், அவன் வீட்டிற்கே சென்றிருக்கிறாள்.
அங்கு சென்ற பிறகே, அவனது ஏமாற்று வேலை தெரிந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் தான், அந்த வடமாநில இளைஞன், இங்கு வாடகைக்கு குடி வந்திருக்கிறான். அந்த வீட்டின் உரிமையாளர்களான வயதான தம்பதியரை, 'அப்பா, அம்மா' என்று, உறவுமுறை சொல்லி அழைத்து, பாசமாகப் பழகுவது போல் நடித்திருக்கிறான்.
அதை வைத்தே, அவர்களின் மகன் போல காட்டி, அவளை காதலித்து ஏமாற்றி, நகையோடு தலைமறைவாகி இருக்கிறான்.
வாசகர்களே... முன்பின் அறியாதவர்களை தீர விசாரிக்காமல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், குறிப்பாக, அறிமுகமில்லாதவர்களை காதலிக்கும் விஷயத்தில், பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள்!
-மு.நாவம்மா, விழுப்புரம்.
சேமிப்பின் அருமை!
நான், மகன், மருமகள், பேரன் அடங்கியது, எங்கள் குடும்பம். சென்னை புறநகர் பகுதியிலுள்ள, மூன்று படுக்கையறை கொண்ட, அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் வசிக்கிறோம்.
மகனும், பேரனும் வேலைக்கு செல்கின்றனர். எனக்கு வயது, 80க்கு மேலாகி விட்டது. வீட்டில் வேலைக்காரி இல்லாத நிலையில், நானும், மருமகளும் சேர்ந்து எல்லா வேலைகளையும் செய்வோம்.
மகனும், பேரனும் ஆபீஸ் போய் வருவதால், வீட்டில் ஒரு துரும்பை கூட நகர்த்த மாட்டார்கள். இந்நிலையில், 'நாங்கள் வேலைக்கு போனால், வீட்டில் உங்களுக்கு என்ன வேலை; ஓய்வு தான்...' என்ற, 'கமென்ட்' வேறு.
இதை கேட்ட நான், 'வீட்டை பெருக்கி, துடைக்க மட்டும், 2,000 ரூபாய். மேலும், பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க தலா, 1,000 ரூபாய் வாங்குகின்றனர். எனக்கு தான் இந்த வயதில் பணம் தேவையில்லையே. அதனால், பெருக்கி, துடைக்க மட்டும், மாதம், 2,000 ரூபாய் கொடு...' என, மகனிடம் வாங்கினேன். அதை, தபால் அலுவலகத்தில், மருமகள், பேரன் பெயரில், ஆர்.டி.,யாக போட ஆரம்பித்தேன்.
விளையாட்டு போல் ஆரம்பித்த இந்த சேமிப்பு, தற்போது ஐந்து ஆண்டுகளில் வட்டியுடன் கணிசமான தொகையாக சேர்ந்திருந்தது. தவிர, சேமிப்பின் அருமையையும், இல்லத்தரசிகளின் பெருமையையும் என் வீட்டு மக்கள் புரிந்து கொண்டனர்; நீங்களும் புரிந்து கொள்வீர்கள்தானே!
சாவித்திரி, சென்னை.
இப்படி கெடுக்கலாமா?
சமீபத்தில் திருப்பூருக்கு சென்றிருந்தபோது, பின்னலாடை கம்பெனி ஒன்றின் விளம்பரம் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
அதில், 'கட்டிங் மாஸ்டர் தேவை. வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களுக்கு, மூன்று, 'குவாட்டர்' இலவசம்...' என, இருந்தது. ஏற்கனவே, 'குடிமகன்'களால் சமூகம் கெட்டு சீரழிந்து உள்ளது. இந்த லட்சணத்தில், சமுதாயத்தை குட்டிச்சுவர் ஆக்கும் விதமாக இதுபோன்ற, 'குவாட்டர்' கலாசார விளம்பரங்கள், அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது.
படித்து, பிறருக்கு வேலை தரும் அளவிற்கு திறமையும், பணமும் படைத்தவர்கள், இப்படி தவறான வழிகாட்டி, ஆட்களை வேலைக்கு அழைப்பது சரியா?
மாறாக, வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம் அல்லது சிறிய அளவிலான சமையலறை உபகரணம் தருவதாக அறிவிக்கலாமே!
'குவாட்டர் தருகிறோம்... தொட்டுக் கொள்ள ஊறுகாய் தருகிறோம்...' என, அறிவிக்கும் விளம்பரம், தமிழகத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது. இப்படிப்பட்ட அறிவிப்புகள், ஒரு தனி நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தையும் சேர்த்து கெடுப்பதாக இருக்கிறது.
பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து, திருத்திக் கொள்ளுங்கள்.
—எ. மகேஷ், கோவை.
