தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹெல்மெட்' அணிவதற்கு முன்...

இரு சக்கர வாகனத்தை, 'பார்க்கிங்'கில் வைத்து விட்டு, உறவினர் திருமணத்திற்கு சென்றேன். திருமணம் முடிந்து, ஊர் திரும்ப, 'பார்க்கிங்'கிலிருந்து வாகனத்தை எடுத்து சிறிது துாரம் வந்ததும், தலையில் அணிந்திருந்த, 'ஹெல்மெட்'டுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது.

உடனே, வாகனத்தை ஓரம் கட்டி, 'ஹெல்மெட்'டை கழற்றினேன். அதற்குள் தலையில் ஏதோ கடித்து விட்ட உணர்வு. பதட்டமடைந்து, 'ஹெல்மெட்'டை பார்த்த போது, சிறிய தேள் ஒன்று அதற்குள் இருந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்தேன்.

உடனே, மருத்துவமனைக்கு சென்று, ஊசி போட்டுக் கொண்டேன்.

'ஹெல்மெட்'டின், உள் பக்க துணி கிழிந்திருந்ததால், அந்த ஓட்டைக்குள், தேள் புகுந்திருக்கிறது. 'ஹெல்மெட்'டை தலையில் மாட்டியதும், அழுத்தம் ஏற்பட்டு அது வெளியே வந்து கடித்துள்ளது.

வெயில் காலம் துவங்கி விட்ட நிலையில், வெப்பம் தாங்காமல் புழு, பூச்சி, வண்டு போன்ற விஷ ஜந்துக்கள், இதுபோன்ற வெயில் படாத இடங்களில் ஒளிந்து கொள்கின்றன.

ஆகவே, இரு சக்கர வாகனங்களை வெளியே விட்டு எடுத்துச் செல்லும் முன், 'ஹெல்மெட்'டை, ஒரு முறைக்கு இரண்டு முறை, நன்கு சோதித்த பின்னரே பயன்படுத்துங்கள்!

ம. காவியா, கோவை.

மாறுபட்ட அனுபவம்!

அண்மையில், ஒரு ஆட்டோவில் பயணித்தபோது, சொற்பொழிவாளர் ஒருவரின் பேச்சை, ஒலிக்க விட்டார், ஆட்டோக்காரர். சிந்தனையைத் துாண்டும் குட்டிக் கதைகள் அடங்கிய அந்த சொற்பொழிவு, என்னை மிகவும் கவர்ந்தது.

இதுபற்றி அவரிடம் கேட்டதும், 'என் வண்டியில் ஏறுபவர்களுக்கு, பயணம் போரடிக்காமல் இருக்கவும், வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ளவும், 'யூடியூபில்' இருந்து, இதுபோன்ற நல்ல விஷயங்களை தேடி, 'பென் டிரைவில்' பதிவிறக்கம் செய்து, ஆட்டோவில் ஒலிபரப்புவேன்...' என்றார்.

திரைப்பட குத்துப் பாடல்களை மிக சத்தமாக ஒலிக்கச் செய்து வரும் பிற ஆட்டோக்காரர்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமாக தெரிந்த, இவரின் முயற்சியை பாராட்டினேன்.

- சு. லெட்சுமணசுவாமி, மதுரை.

ஊருக்கு போறீங்களா?

சமீபத்தில், பழனிக்கு சென்றேன். பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், ஒரு ஆள் ஓடி வந்து, 'சார்... லாட்ஜ் வேணுமா...' என்றார். நள்ளிரவு, 1:00 மணியை தாண்டி விட்டதால், வேறு இடம் தேட சிரமப்பட்டு, 'சரி...' என்றேன்.

ஒரு சந்து வழியாக அழைத்துச் சென்றவர், தேவையில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்.'இருங்க சார், ஒரு டீ சாப்பிடலாம். இந்த கடையில டீ நல்லா இருக்கும்...' என்றவர், இரண்டு டீ போடச் சொல்லி, 'சார்... டீக்கு, 30 ரூபா கொடுங்க...' என்றார்.

கொடுத்தேன். டீ குடித்த பின், மீண்டும் நடந்தோம். எதிரே ஒரு பையன் வந்தான். 'சாரை கூட்டிக்கிட்டு போடா...' என்று அவனோடு என்னை அனுப்பிவிட்டு, மீண்டும் அவர் பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

லாட்ஜில் விட்டு விட்டு, 'சார்... ஒரு, 100 ரூபா எனக்கு கொடுங்க...' என்று உரிமையோடு கேட்டான், அந்த பையன். வேறு வழியின்றி கொடுத்தேன்.

'அறை வாடகை, 1,500 ரூபாய்...' என, மேனேஜர் கூற, இரவு நேரம் ஆகிவிட்டதால், எதுவும் சொல்ல முடியாமல், அறை எடுத்து தங்கினேன். மறுநாள் குளித்து முடித்து, மேனேஜரிடம் வந்து, 'சார், அறையை காலி செய்கிறேன்...' என்றேன்.

'சார், நீங்க அப்பாவியா தெரியறீங்க... இனிமே, இந்த ஊருக்கு வந்தா, நேரா இங்க வந்துடுங்க; புரோக்கர்கிட்ட போகாதீங்க...' என்றார். 'என்னது, அவங்க புரோக்கர்களா... உங்க லாட்ஜ்ல வேலை செய்யுறவங்க இல்லையா?' என்றேன்.

'இல்ல சார், அவங்க எல்லாம் புரோக்கர்ங்க. நீங்க தங்கின அறை வாடகை, 800 ரூபா தான். புரோக்கருக்கு கமிஷன் தர வேண்டும் என்பதால், 1,500 ரூபா வாங்கினேன். அதுமட்டுமல்ல, புரோக்கர்ன்னு சொல்லிட்டு சிலர், நள்ளிரவுல வர்றவங்ககிட்ட வழிப்பறியும் செய்வாங்க.

'அதனால, இனிமே நீங்க இங்க வந்தா, யாராவது கூப்பிட்டா, 'இல்ல, எனக்கு தெரிஞ்ச லாட்ஜ் இருக்கு. போன்ல, 'புக்' பண்ணிட்டேன்'னு சொல்லிடுங்க. உங்களுக்கு பணமும் மிச்சம், பாதுகாப்பும் கூட...' என்றார். அவர் சொன்னது நியாயமாக பட்டது. இனி, நீங்களும் இதை பின்பற்றுங்களேன்.

- சி. ரகுமுருகன், விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us