தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊர் கூடித் தேர்... (20)

ஊர் கூடித் தேர்... (20)

ஊர் கூடித் தேர்... (20)


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'போட்டிப் பத்திரிகைகளிலும் எழுதலாமா?' என்று, நான் தயங்கியபடி கேட்க, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், 'தாராளமாய்... ஆனால், தரம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று பச்சைக் கொடி காட்டினார், 'வாரமலர்' இதழ் பொறுப்பாசிரியர்.

குவைத்தில் நல்ல சம்பளத்தில், எனக்கு வேலை கிடைத்தபோது, போகலாமா... போனால் எழுத முடியுமா, என்ற குழப்பம் ஏற்பட, பொறுப்பாசிரியரை அணுகினேன்.

'உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எழுதலாம்; அதனால், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுங்க...' என்று, வாழ்த்தி அனுப்பினார்.

வளரும் போதே நான் பல எழுத்தாளர்களை, இவரிடம் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அவர்கள், தங்கள் கஷ்டங்களைச் சொல்ல, படைப்புகளை அனுப்ப சொல்லி, அது வெளியாகும் முன்பே சன்மானத்தை அனுப்பிய சம்பவங்களும் உண்டு.

'வாரமலர்' இதழில் தொடர் எழுதும்போது, வாசகர்களுடன் நம்மை ஐக்கியப்படுத்தி விடுவது, இவரது இன்னொரு சிறப்பு.

தொடர்கதை வரும்போது, வாசகர் எழுதும் விமர்சன கடிதங்கள் வாரா வாரம் நம்மிடம் சேர்க்கப்படும். இதையெல்லாம் வேறு எந்த பத்திரிகையிலும் எதிர்பார்க்க முடியாது.

இவரால் படைப்பாளிகள் மட்டுமின்றி, பிற பத்திரிகைகளில் பணியாற்றும் எத்தனையோ பேர், என்னிடம், 'வாரமலர் இதழ் பொறுப்பாசிரியர் என் குரு; அவரிடம் தான் தொழில் கற்றேன். அவரால் தான் செதுக்கப்பட்டேன்...' என்று விசுவாசத்துடன் சொல்லும்போது, மனம் நெகிழும்.

அதுமட்டுமின்றி, குவைத்தில் பல ஆண்டுகளாக சிறப்பாக தொண்டு செய்து வரும், 'இந்தியன் பிரன்ட்லைனர்ஸ்' அமைப்பின் வளர்ச்சியில், இவரது ஊக்கத்திற்கும், ஆசிர்வாதத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. எங்களது செயல்பாடுகளுக்கு, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து, 'மீடியா ஸ்பான்சர்' ஆக இருந்து, உதவி வந்திருக்கிறது.

இங்கே, நம் ஒவ்வொரு செயலுக்கும், நாம் மட்டுமே காரணம் என்று உரிமை கொண்டாட முடியுமா?

நிச்சயம் முடியாது. அந்த தருணத்தில், சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப, சுற்றி இருப்பவர்கள் நம்மை இயக்குகின்றனர். அதே போல், நாம் பிறரை இயக்குகிறோம். அந்த வகையில் உருவானது தான், குவைத், 'தி இந்தியன் பிரன்ட்லைனர்ஸ்' சேவை அமைப்பும்; அதன் சேவைக்கு வயது 25!

எழுதுகிறோம் என்றால், அது, முழுக்க முழுக்க நம் திறமை, முயற்சி, உழைப்பு எல்லாம் நமக்கே உரியது எனக் கொண்டாடலாம். ஆனால், 'பிரன்ட்லைனர்ஸ்' சேவையில், பலரும் அந்தந்த தருணத்தில் வசதி வாய்ப்பு, நேரம் அனுசரித்து, தங்களின் சொந்த வேலையை ஒதுக்கி, பங்களிப்பை அளித்திருக்கின்றனர்.

இவற்றில் இரண்டு முக்கியமானவை. முதலாவது, புத்தகக் குழு. அடுத்தது, சேவை குழு.

'பிரன்ட்லைனர்சின்' ஆரம்பமும், அடிப்படையும் இந்திய சாதனையாளர்களின் தொகுப்பு புத்தகங்கள் தான். அது, இதுவரை, 22 தொகுதிகள் வந்துள்ளன. புத்தகத்தின் தொடர்ச்சியாக, www.iflkuwait.com மூலம் சேவை தொடர்கிறது. குவைத்திலுள்ள இந்தியர்களுக்கான இதன் பணி மகத்தானது.

இப்போதும், இந்தியாவிலிருந்தே இந்த வெப்சைட் மற்றும் துாதரக தொடர்புகள், சேவைகளையும் சுணக்கமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

யாருக்காவது வேலை, மருத்துவ விசா, சட்டம், பயணம், மரணம், உடல் அனுப்புதல் போன்ற பிரச்னைகள் பார்வைக்கு வரும்போது, துாதரகத்தில் சொல்லி, எங்கள் குழுவிடம் தெரிவிப்பேன்.

அடுத்தவர்களின் உழைப்பில் குளிர் காய்பவர்கள் அநேகர் உண்டு. இங்கே அப்படி இல்லை. அடியேன் தான் முதல் தொண்டன். ஒவ்வொரு துளியிலும் என் பங்கு இருக்கும். அப்புறம், பொறுப்பேற்றவருக்கு இயலவில்லை என்றால், அதை முடிக்க மாற்று ஏற்பாடு தயாராய் வைத்திருக்க வேண்டும்.

எங்களது சேவை இதோடு மட்டும் முடிவதில்லை. தேசிய அளவில், எந்த பேரிடர் என்றாலும் அது, கார்கில், சுனாமி, வெள்ளம், பூகம்பம், வறட்சி மற்றும் 'கொரோனா' என, எல்லாவற்றிலும் உண்டு.

இதற்காக, இந்திய துாதர் சிபி ஜார்ஜ், என்னை கவுரவித்துள்ளார்.

உலக அளவில் இதுவரை, எந்த இந்திய துாதரகத்திலும், தனி நபர் எவருக்கும் கிடைக்காத சிறப்பு இது. இதில், அடியேன் முதல்வன் என்பதில் பெருமிதம் உண்டு.

முக்கியமாக, எழுத்திற்கு உயிர் கொடுத்தது மட்டுமல்ல; என் வளம், பெயர், பெருமை, புகழ், என் சமூக சேவைக்காக குவைத் இந்திய துாதரகத்தில் எனக்கு கிடைத்த கவுரவம் என, எல்லாம் பொறுப்பாசிரியருக்கு சமர்ப்பணம்!

- முற்றும் -

என். சி. மோகன்தாஸ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us