தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

என்னுடைய அதி தீவிர வாசகி அவர். சட்டக்கல்லுாரி மாணவியாக இருந்த போதே அறிமுகம் ஆனவர். கேள்வி பதில் மற்றும் பா.கே.ப., பகுதியை படித்து, அக்குவேறு ஆணிவேறாக விமர்சிப்பார். தற்சமயம் படிப்பு முடிந்து, பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக சேர்ந்துள்ளார். அவ்வப்போது போன் செய்வார். அன்று நேரில் சந்திக்க வந்திருந்தார்.

'எப்படி போயிட்டிருக்கு வக்கீல் பணி?' என்றேன்.

'அதை ஏன் கேட்கிற மணி... நாளுக்கு ஒரு கடத்தல், குத்து, கொலை, அடிதடின்னு பார்த்துட்டு வர்றேன். சிறு வயதில், ஆல்பிரட் ஹீட்ச்காக் மற்றும் அகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாவல்களை படித்துள்ளேன். அதில் வருவது போல் எவ்வளவு சாமர்த்தியமாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் தெரியுமா!'

'ஏதோ பெயர்களை கூறினாயே... அவர்கள் யார்?' என்றேன்.

'ஐயோ மணி... அவர்கள் எல்லாம் பிரபல ஆங்கில துப்பறியும் நாவலாசிரியர்கள்...'

'எனக்கு நம்மூர் தமிழ்வாணன், ராஜேஷ்குமார் போன்றோர் எழுதிய மர்ம நாவல்கள் தான் பரிச்சயம்...' என்றேன்.

'ஐயோடா போதுமே... உன் தன்னடக்கத்துக்கு அளவே இல்லியா மணி...' என்றவர் தொடர்ந்து, 'முன்பு எப்போதே நடந்த ஒரு கொலை வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்காத பட்சத்தில் அப்போதிருந்த நீதிபதி, துல்லியமாக குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்கிய கதையை அடிக்கடி சொல்வார், என் சீனியர்...' என்றார்.

'அப்படியா... எனக்கும் சொல்லேன்...' என்றேன்.

கூற ஆரம்பித்தார், வாசகி:

ஒருவர் திடீரென்று காணாமல் போய் விட்டார். எங்கெங்கோ தேடினர். பத்திரிகைகளில் புகைப்படம் வெளியிட்டு விளம்பரம் செய்தனர். சுவர்கள், பேருந்து நிறுத்தம், பூங்கா, மின்சார ரயில் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் நோட்டீஸ் அடித்து ஒட்டினர்.

ஆனாலும், அவரைப் பற்றி எந்த தகவலுமே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களாகியும், அவர் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில், அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்படி ஒருவரை கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தியது, போலீஸ்.

அவர் மீதான வழக்கு, விசாரணைக்கு வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சார்பாக, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வாதாடினார்.

அப்போது அவர், 'கனம் நீதிபதி அவர்களே... யாரை இவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளதோ, அப்படி கொலை செய்யப்பட்ட நபர், இன்னும் சற்று நேரத்தில் இந்த நீதிமன்றத்திற்கு உயிருடன் வரப்போகிறார். அந்த காட்சியை பார்த்த பிறகு, என் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்ற உண்மை தெரிய வரும்...' என்றார்.

நீதிபதி உட்பட அங்கிருந்த அனைவருக்குமே இது அதிர்ச்சியாக இருந்தது. எல்லாரும் நீதிமன்ற வாசலையே வெகு ஆர்வத்துடன் பார்த்தனர்.

பத்து நிமிடங்களுக்கு மேலாகியும், காணாமல் போனவர் அங்கே வரவில்லை. இதனால், அனைவரும் அலுத்துப் போயினர்.

'கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டவர், வருவார் என்று சொன்னீர்களே... யாரையும் காணோமே...' என்று சந்தேகத்துடன், வழக்கறிஞரிடம் கேட்டார், நீதிபதி.

'மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே... காணாமல் போனவர், கொலை தான் செய்யப்பட்டார் என்பதை, நீங்கள் உட்பட யாருமே நம்பவில்லை. அதனால் தான் எல்லாரும், ஒருவித எதிர்பார்ப்புடன் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் இருக்கும் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய வேண்டும்...' என்று வாதாடினார், வழக்கறிஞர்.

இந்த வாதம் சரியானது தான் என்று, நீதிமன்றத்திலிருந்த அனைவருமே ஒத்துக்கொண்டனர்.

நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, பிற்பகலில் மீண்டும் கூடியது. அப்போது, தன் தீர்ப்பை வாசித்தார், நீதிபதி.

'குற்றம் சாட்டப்பட்டவர் தான் கொலை செய்தார் என்பது தெளிவாகி விட்டதால், அவருக்கு, ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது...' என்றார்.

இதைக்கேட்டதும், வழக்கறிஞர் பதறிப் போனார்.

'நீதிபதி அவர்களே...' என்று ஏதோ சொல்ல எழுந்தார்.

அவரை அமருமாறு சைகையால் உத்தரவிட்ட நீதிபதி, 'நாங்கள் அனைவருமே, காணாமல் போனவர் திரும்பி வரப்போகிறார் என்று வாசலையே ஆவலுடன் பார்த்தது, முழுக்க முழுக்க உண்மை தான். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தடவை கூட வாசலைப் பார்க்கவே இல்லை. தலைகுனிந்தவாறே இருந்தார்...' என்றார்.

அனைவரும், கொலை செய்யப்பட்டவர் திரும்பி வருவதிலேயே கவனமாக இருந்தபோது, நீதிபதி மட்டும், குற்றம் சாட்டப்பட்டவரை கவனித்திருக்கிறார்.

தீர்ப்பை கேட்டதும், குற்றம்சாட்டப்பட்டவர், எந்தவித மறுப்பும் கூறாமல் தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

வாசகி கூறி முடித்ததும், 'ஆஹா எவ்வளவு, 'அலர்ட்' ஆக இருந்திருக்கிறார், அந்த நீதிபதி...' என நினைத்து வியந்தேன்.



புத்தகங்கள் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்:

* நாயின் காது - புத்தகத்தை படிக்கும் போது, நாம் படிக்கும் பக்கத்தின் மூலையை மடித்து வைப்போம். இது, நாயின் காது என்று அழைக்கப்படுகிறது

* லிப்ரோகுபிகுலரிஸ்ட் - படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பவர்

* எபியோலாட்ரி - வார்த்தைகளை வணங்குபவர். ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் இனிமையை வெளிப்படுத்த முயற்சிப்பது. இது, முக்கியமாக மொழியியலாளர்களிடம் காணப்படுகிறது

* லோகோபில் - வார்த்தைகளில் மயங்குபவர்

* பிப்லியோஸ்மியா - பழைய புத்தகங்களின் வாசனை

* புத்தகம் பூத்தது - புத்தகங்கள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதவர்

* சர்வ வல்லமை படைத்தவர் - அனைத்து வகையான புத்தகங்களையும் ஆராயாமல் படிப்பவர்

* பாலிகம்பர் - பாதி படித்த புத்தகங்கள்

* சுண்டோகு - இது, ஒரு ஜப்பானிய வார்த்தை. அதற்கு சமமான ஆங்கில வார்த்தை இல்லை. அதாவது, புதிதாக வாங்கிய புத்தகத்தை ஒருமுறை கூட புரட்டிப் பார்க்காதது என அர்த்தம்

* இளவரசர் - ஒரு புத்தகம் முதன் முதலில் அச்சிடப்பட்ட பிரதியை, 'பிரின்ஸ்ப்' என்று அழைப்பர்.

ஏப்ரல் 23, புத்தக தினமானதால், உங்களுக்காக...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us