PUBLISHED ON : ஏப் 17, 2022

* வி.சி. கிருஷ்ணரத்தினம், சென்னை: 'தேசிய அளவில், தி.மு.க.,வுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கிறது...' என, முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே... இது, 2024 லோக்சபா தேர்தலுக்கு உதவுமா?
இவர் கட்சியின் பெயரே, திராவிடம் என்று இருக்கிறது... தேசிய அளவு எல்லாம் தமாஷ் தான்!
மு. கண்ணன், புதுச்சேரி: வாரமலர் கிடைக்காத ஊர்களில் இருந்தும் வாசகர்கள், அர்ச்சனை கடிதம் எழுதுகின்றனரே... எப்படி?
உலகம் முழுதும், நம் நாளிதழ் மற்றும் இணைப்புகளை பார்க்க ஏதுவாக, 'நெட்' வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளதே நிர்வாகம்... அதனால் தான்!
வெ. சென்னப்பன், தருமபுரி: 'மத்திய அரசு நிபந்தனையால் தான், சொத்து வரியை உயர்த்தியுள்ளோம்...' என, அமைச்சர் கே.என்.நேரு சொல்கிறாரே...
எல்லாம் நொண்டி சாக்கு... மத்திய அரசு என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலைக்கு, திராவிட மாடல் அரசு வந்து விட்டதாகத் தான் தெரிகிறது!
ஆ. தருண்ராஜா, பாப்பான்குளம்: காபி குடிக்கும்போது, கூடவே சாப்பிட, வடை, சுண்டல், பிஸ்கட்... எது நன்றாக இருக்கும்?
பெரும்பாலானவர்கள், வடையுடனே சாப்பிடுவர்... நான் காபி குடிக்கும்போது, அதன் சூடை குறைக்க, 'டவரா'வில் ஊற்றி, சூடை குறைத்து, காபியின் சுவையை அனுபவிப்பேன்!
ரா.சா. சந்திரசேகர், சென்னை: பத்திரிகைகளை அச்சிடும், 'நியூஸ் பிரின்ட்' காகித விலை ஏற்றத்தால், தினசரிகளின் விலை ஏறுமா?
ஒரு, 'சிங்கிள் - டீ'யின் விலையே, 12 ரூபாய் ஆகி விட்டது... 'நியூஸ் பிரின்ட்டின்' விலை, 10 மாதங்களில், 450 டாலரிலிருந்து, 950 டாலராகி விட்டது... இதுவே, ஜூன் மாதத்தில், 1,100 டாலராகப் போகிறது. ஒரு டாலரின் இந்திய மதிப்பு, 75.54 ரூபாய்... கணக்கிட்டுக் கொள்ளுங்கள்... பத்திரிகைகளின் விலை கூடும்! வாசகர்களின் ஆதரவு தேவை!
* கி. மூர்த்தி, தென்காசி: பா.ஜ., சின்னமும், 'தினமலர்' சின்னமும் தாமரையாக இருக்கிறதே... அப்போது, உங்கள் பத்திரிகை, அக்கட்சிக்கு ஆதரவானது தானே!
மூர்த்தி... நம் பத்திரிகை, 1951ல் ஆரம்பிக்கப்பட்டது... அப்போது முதலே தாமரை சின்னம் தான்! முன்னாள் பிரதமர் வாஜ்பாயால், 1980ல் தான் பா.ஜ.,துவக்கப்பட்டது... இப்போது புரிகிறதா?
வி. கவிதா, திருச்சி: என் வயது 24; திருமணமாகவில்லை. முதியோரின் அறிவுரைகள் எனக்கு பிடிக்கவில்லையே...
தவறு! அவர்களின் அனுபவங்கள் நம் லட்சிய வெற்றிகளுக்கு படிக்கட்டுகளாய் அமையும். நாம் செல்ல எண்ணும் பாதைகளுக்கு எளிதாய் செல்லலாம்!
