தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிலவுக்கும் நெருப்பென்று பேர் (11)

நிலவுக்கும் நெருப்பென்று பேர் (11)

நிலவுக்கும் நெருப்பென்று பேர் (11)


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: ஜோஷ் மற்றும் இக்பால் தான் முகிலாவை கடத்தி இருப்பர் என, புவனேஷ் கூற, அதிர்ச்சியடைந்தான், தருண். இந்நிலையில், முகிலா பற்றிய அதிர்ச்சியான தகவல் தெரிய வந்ததாக, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனிடம் தெரிவித்தாள், நேத்ரா.

'சைபர் க்ரைம் செல்!'

இன்டர்வென்ஷன் ஆபீசர் நேத்ராவுக்கு முன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உட்கார்ந்திருந்தார்.

பக்கவாட்டு நாற்காலியில், 'இன்பர்மேஷன் ஷேரிங் அண்ட் அனாலிசிஸ் சென்டர்' பிரிவைச் சேர்ந்த, அதிகாரி லலித்குமார் சற்றே கவலை தோய்ந்த குரலில், ''சார்... முகிலாவோட மொபைல் போனை கண்டுபிடிக்கிற முயற்சியில், 'ஜீரோ எப்.ஐ.ஆரை' பதிவு பண்ணி, அதன் அடிப்படையில், தேடும் பணியை நடத்திகிட்டு இருந்தோம்.

''நேத்ரா மேடமும், நானும், ஆபீசர் சத்யனும், ஒரு நிமிஷம் கூட இடைவிடாம, முகிலாவோட விஷயத்தை மட்டும் மாறி மாறி பேசிட்டிருந்தோம்.

''மொபைல் போனின், ஐ.எம்.ஈ.ஐ., அடையாள எண் இருந்ததால, ஜி.பி.எஸ்., மூலமா போன் இருக்கிற இடத்தை எப்படியும் கண்டுபிடிச்சுடலாம்ன்னு நினைச்சோம். ஆனா, அந்த முயற்சியில் வெற்றி கிடைக்காததால, எம்.ஏ.சி., அட்ரசை வெச்சு முயற்சி பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டது.''

புருவங்களை உயர்த்திய முத்துக்குமரன், ''எம்.ஏ.சி., அட்ரசா... அப்படீன்னா?'' என்றார்.

''இது ஒரு, 'யூனிக் ஐடென்டிபையர்' சார். இந்த எழுத்துக்களின் விரிவாக்கம், 'மீடியா அக்செஸ் கன்ட்ரோல்' அட்ரஸ். இது, என்.ஐ.சி., என்ற, 'இன்டர்பேஸ் கன்ட்ரோலர்' உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

''முகிலாவோட மொபைல் போன், 'வைபை நெட்வொர்க்'கின் தொடர்பில் இருந்திருந்தா, மொபைல் போன் இருக்கிற இடத்தை சுலபமாய், கண்டுபிடிச்சுலாம்ன்னு நினைச்சு, அதற்குள்ளும் நுழைஞ்சு பார்த்துட்டோம். ஆனா, மொபைல் போனை கண்டுபிடிக்க முடியலை,'' என்றார், லலித்குமார்.

அதே கவலையான தொனியில், ''எம்.ஏ.சி., மூலமா முயற்சி பண்ணியும் முடியாததால, ஏ.டி.எம்., என்ற, 'ஆன்ட்ராய்ட் டிவைஸ் மானேஜர் ஆப்'பின் உதவியோடு தேட ஆரம்பிச்சோம். முகிலாவோட மொபைல் போன் எந்த இடத்தில் இருந்தாலும், அது, 'சைலன்ட் மோடில்' இருந்தாலும் கூட, இந்த, 'ஆப்'பின் மூலமா, போனை, 'ரிங்' செய்ய வைக்க முடியும்.

''ஆனா, அந்த முயற்சியிலும் எங்களுக்குக் கிடைச்சது, தோல்வி தான். இப்படி எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும், முகிலாவோட மொபைல் போனை கண்டுபிடிக்கவே முடியலை. அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்க டில்லியில் இருக்கிற, 'ஹையர் சைபர் க்ரைம் பிராஞ்ச் அதாரிட்டி'யை தொடர்பு கொண்டோம்.

''முகிலாவோட மொபைல் போனின், ஐ.எம்.ஈ.ஐ., அடையாள நம்பரைக் குடுத்து விசாரிச்சோம். அந்த விசாரணையில் தான் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியே வந்தது,'' என்றாள், நேத்ரா.

முத்துக்குமரன் விழிகளில் மிரட்சி பரவ, நாற்காலியின் நுனிக்கு நகர்ந்தவர், ''என்ன தகவல்?'' என்றார்.

''முகிலாவின் மொபைல் போன், ஐ.எம்.ஈ.ஐ., அடையாள நம்பரை, எந்த ஒரு, 'ஹைடெக் டிவைஸ்' மற்றும் 'ஆப்'பால் கண்டுபிடிக்க முடியாமல் போனதுக்கான காரணம், அந்த நம்பர் மாற்றப்பட்டிருப்பது தான்,'' என்றாள், நேத்ரா.

''இப்படி மாத்தறது சாத்தியமா?'' என்றார், முத்துக்குமரன்.

''சாத்தியம் தான். 'ப்ளாஷர்' என்ற ஐ.டி., சம்பந்தப்பட்ட வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா சார்.''

''இல்ல... இன்னிக்குத்தான் கேள்விப்படறேன்.''

''ஒரு, 'சாப்ட்வேர்' பெயர் தான், 'ப்ளாஷர்!' அதை பயன்படுத்தி, ஐ.எம்.ஈ.ஐ., நம்பரை மாத்த முடியும். அதாவது, அந்த பழைய நம்பர் மேலேயே, ஒரு புது நம்பரை, 'சூப்பர் இம்போஸ்' பண்ணிடுவாங்க. அதுக்கப்புறம் அந்த பழைய, ஐ.எம்.ஈ.ஐ., நம்பரை வெச்சு மொபைல் போனை, 'டிரேஸ் - அவுட்' பண்ணி, கண்டுபிடிக்க முடியாது. இது ஒரு முன்னேறிய தொழில்நுட்பம்.''

''முகிலா, எதுக்காக தன் மொபைல் போனின் அடையாள எண்ணை மாத்தணும்?''

''முகிலா அதை மாத்தியிருக்க வாய்ப்பில்லை.''

''அப்புறம் யாரு மேடம்?''

''அவளை கடத்திட்டு போனவங்க தான், அந்த வேலையை செய்திருக்கணும்.''

''அவ கடத்தப்படலை மேடம்.''

''அது எப்படி உங்களுக்குத் தெரியும்?''

''சி.சி.டி.வி., வீடியோ காட்சி பதிவில், அவ பூ மார்க்கெட் கார்னரில் டாக்சியை விட்டு தனியா இறங்கி சூட்கேசோடு நடந்து போறது, தெளிவாய் பதிவாயிருக்கே.''

''அதுக்கப்புறமா ஏன் அவ கடத்தப்பட்டு இருக்கக் கூடாது... கொஞ்சம் ஆழமா யோசனை பண்ணிப் பாருங்க, சார்.''

''மேடம்... அந்தக் கோணத்துல இதுவரைக்கும் நான் யோசிச்சுப் பார்க்கவே இல்லை.''

''சார்... இது, ஒரு திட்டமிட்ட கடத்தல். முகிலாவை கடத்தின நபர்களுக்கு அவளைக் காட்டிலும் அவளோட மொபைல் போன் தான் முக்கியம். அந்த போனில் ரகசியமான முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விஷயங்கள் ஏதாவது இருக்க வாய்ப்பு அதிகம். அதனால தான், முகிலாவை மொபைல் போனோடு கடத்தியிருக்காங்க.

''அவள் கடத்தப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே, அந்த போனின், ஐ.எம்.ஈ.ஐ., அடையாள எண்ணை அழிச்சுட்டு, ஒரு புது எண்ணை, 'சூப்பர் இம்போஸ்' பண்ணியிருக்காங்க. அதனால தான் நம்மால கண்டுபிடிக்க முடியல.''

''மேடம்... ஏதாவது ஒரு, 'ஹை பை டெக்னிக்'கை உபயோகப்படுத்தி, முகிலாவோட மொபைல் போன் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கா?'' என, இடைமறித்தார், முத்துக்குமரன்.

''சாரி... வாய்ப்பில்லை. இனிமேல் முழுக்க முழுக்க உங்க விசாரணை மூலமாகத் தான் முகிலாவைப் பற்றின உண்மைகள் வெளியே வரணும். அப்புறம், முகிலா ஏதோ ஒரு கம்பெனியில், 'ரிசப்ஷனிஷ்டா' வேலை பார்த்துட்டு இருந்ததாய் சொன்னீங்க... அது என்ன கம்பெனி?''

''ஸ்டீல் பேப்ரிகேஷன்ங்கிற ஒரு கம்பெனி.''

''அது எங்கே இருக்கு?''

''பாப்பநாயக்கன் பாளையத்துல.''

''முகிலாவை கல்யாணம் பண்ணிக்க இருந்த புவனேஷும் அதே கம்பெனியில் தான், 'அசிஸ்டென்ட் இன்ஜினியராய்' வேலை பார்த்து வந்திருக்கார் இல்லையா, சார்?''

''ஆமா மேடம்.''

''ரெண்டு பேரின் குடும்பத்தினரையும் வரவழைச்சு விசாரணை பண்ணீங்களா?''

''ம்... பண்ணிட்டேன். ரெண்டு பேர் வீட்லேயும் இவங்க காதலுக்கு ஒரு சின்ன எதிர்ப்பு கூட இல்லை. ஆனா, இவங்க தான் பயந்துகிட்டு யாருக்கும் தெரியாம, விநாயகர் கோவில்ல வெச்சு கல்யாணத்தை நடத்தத் திட்டம் போட்டிருக்காங்க.

''இதை தெரிஞ்சுகிட்ட யாரோ, அந்த விடியற்காலையில் முகிலா பயணித்த காரை பின்தொடர்ந்து, அவளைக் கடத்தி இருக்கணும். எனக்கு இருக்கிற ஒரு சந்தேகம் இதுதான் மேடம்... விநாயகர் கோவிலுக்கு போக வேண்டிய முகிலா, அதுக்கு முன்னாடி, பூ மார்க்கெட் கார்னர்ல லக்கேஜை எடுத்துட்டு ஏன் இறங்கணும்?''

''அங்கே யாரையாவது சந்திக்க போயிருக்கலாம்,'' என்றாள், நேத்ரா.

''யாரை?''

''சார்... இந்த முகிலா வழக்கில் என், 'டியூட்டி' முடிஞ்சுது. இனி, நீங்க தான் கண்டுபிடிக்கணும்.''

''எஸ் மேடம்... இப்ப, ஐ.சி.யூ.,வில் இருக்கிற புவனேஷ், நார்மலாகி சாதாரண வார்டுக்கு வந்ததும், ஒரு துல்லியமான விசாரணையை தொடங்கி, வழக்கை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போயிடணும்.''

முத்துக்குமரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய மொபைல் போன் வெளிச்சம் பிடித்து, 'ரிங்டோனை' வெளியிட்டது. எடுத்து, அழைப்பது யாரென்று பார்த்தார். 'டிஸ்ப்ளே'யின் திரையில், தருண் பெயர் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தது. காதுக்கு ஒற்றி, ''சொல்லுங்க தருண்,'' என்றார்.

''சார்... நீங்க ஹாஸ்பிடலுக்கு மறுபடியும் எப்ப வருவீங்க?''

''ஏன் என்ன விஷயம்?''

''நான் வேலை பார்க்கிற வங்கியில ஒரு பிரச்னை சார்... அதை தீர்த்து வைக்கணும்னா நான் நேர்ல போயாகணும். 'சைபர் க்ரைம் பிராஞ்சி'லிருந்து எப்ப நீங்க திரும்புவீங்கன்னு தெரிஞ்சுட்டா பரவாயில்லை.''

''நோ ப்ராப்ளம் தருண்... ஹாஸ்பிடலில் இருக்கும் புவனேஷை பார்த்துக்க அவரோட அண்ணன், அண்ணி இருக்காங்க. இனி நீங்க, ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்க வேலையைப் பாருங்க. நாளைக்கு நாம மறுபடியும் சந்திப்போம்.''

''தேங்க்யூ சார்,'' என்ற தருண், தயக்கமான குரலில், ''சார்... 'சைபர் க்ரைம் பிராஞ்ச்' மூலமா முகிலாவைப் பத்தின தகவல் கிடைச்சுதா?''

''எஸ்... ஒரு முக்கியமான தகவல் கிடைச்சிருக்கு. நாளைக்கு நாம நேர்ல சந்திக்கும்போது சொல்றேன். நான் இப்ப, 'மீட்டிங்'ல இருக்கேன்.''

''ஓ.கே., சார்!''

தருண் மறுமுனையில் மொபைல் போனை அணைத்துவிட, முத்துக்குமரனும் தன் மொபைல் போனை மவுனமாக்கி, ''ஓ.கே., மேடம்... நான் புறப்படறேன்,'' என்றார்.

உக்கடம் -

இரவு, 8:00 மணி.

பைபாஸ் ரோட்டுக்கு உள்ளே தள்ளியிருந்த, அன்பு நகர் குடியிருப்பின் ஏழாவது தெருவில், சில கோடி ரூபாய்களை விழுங்கி, திடகாத்திரமாய் முளைத்திருந்தது, அந்த பங்களா; சுற்றிலும் மரங்கள்.

பங்களாவின் உள்ளே ஒரு சிறிய மைதானம் போல் தெரிந்த ஹாலின் மையத்தில் போடப்பட்டிருந்த, சோபாவில் தருண் சாய்ந்திருக்க, அவனுக்கு எதிரே, 30 லிருந்து 35க்குள் இடைப்பட்ட வயதுகளில் ஜோஷ், இக்பால் இருவரும் இறுகிய முகங்களோடு உட்கார்ந்திருந்தனர்.

தருண் கோபமாய் குரலை உயர்த்தி, ''முகிலாவை விளம்பரப் படத்தில் நடிக்க வெக்க முயற்சி பண்ண வேண்டாம்ன்னு நான் படிச்சு படிச்சு சொன்னேன். நீங்க ரெண்டு பேருமே அதை சீரியசாய் எடுத்துக்கலை. அதோட விளைவு, இப்ப ஒரு பிரச்னைக்குரிய விஷயமா மாறிடுச்சு.

''புவனேஷ், உங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேகப்படறான். நல்லவேளையாய் போலீஸ் இன்ஸ்பெக்டர்கிட்ட அவன் இந்த விஷயத்தை சொல்லலை. சொல்லியிருந்தா நிலைமை என்னவாகி இருக்கும்ன்னு யோசிச்சு பாருங்க.''

தன் தாடையில் பயிராகி இருந்த தாடியின் சொரசொரப்பை இடது கை விரல்களால் தேய்த்தபடி மெல்ல சிரித்த இக்பால், ''தருண்... நீ ரொம்பவும் பயப்படறே. போலீசுக்கெல்லாம் போக மாட்டான், புவனேஷ். அப்படி போகிற எண்ணம் இருந்தா, உன்னைக் கூப்பிட்டு விளம்பர விஷயத்தை சொல்லியிருக்க மாட்டான்.''

''இருந்தாலும், நாம கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கணும். முகிலாவோட விஷயத்துல நாம மாட்டிக்கக் கூடாது. நிலைமை நாம நினைக்கிற மாதிரி இல்லை,'' என்றான், தருண்.

''தருண்... நீயும் பயப்பட்டு எங்களையும் பயமுறுத்தாதே. இப்ப நாம, 'கோல்டன் டிராப்ஸ்' விஸ்கி சாப்பிட வேண்டிய நேரம். அதுல ஒரு, 'ஸ்மால்' உள்ளே போனாப் போதும், எவ்வளவு பெரிய பிரச்னையாய் இருந்தாலும் போய் விடும்,'' என்றபடி, சோபாவுக்கு பின்புறம் இருந்த பாட்டிலை எடுத்தான், ஜோஷ்.

''முகிலாவுக்கு, 'கான்ஷியஸ்' இருக்கா?'' கேட்டான், தருண்.

''இல்லை... மத்தியானம் போட்ட, 'இஞ்செக் ஷன்' கொஞ்சம் திறன் அதிகம். இன்னிக்கு நடு இரவுக்கு மேல் தான் நினைவு திரும்பும்.''

அதே விநாடி -

வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

மூவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

''யாரு?''

''இருங்க, நான் போய் பார்க்கிறேன்,'' என்ற தருண், தயக்க நடையோடு வாசற்கதவை நோக்கிப் போனான். கதவில் பொருத்தப்பட்டுள்ள லென்சில், ஒரு கண்ணை வைத்துப் பார்த்தான்.

வாசற்படியில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.

தொடரும்

ராஜேஷ்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us