PUBLISHED ON : ஜூன் 26, 2022

கிடைத்த வேலையை இன்முகத்துடன் செய்யலாமே!
நண்பர் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில், 'கேர் டேக்கர்' ஆக இருந்தவர் வேறு வேலைக்கு சென்று விட்டதால், என்னிடம், 'நல்ல ஆள் இருந்தால் சொல்லுங்கள்...' என்றார். 'கொரோனா' காலத்தில், வேலை இழந்த, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்த பையனை சிபாரிசு செய்தேன்.
நண்பர் சொசைட்டியின் செயலராகவும், நான் சொன்ன காரணத்தாலும் அந்த பையனுக்கு வேலை கிடைத்தது. என்னிடம் நன்றி சொல்ல வந்த அவனிடம், 'இந்த வேலை, உன் படிப்பிற்கு ஏற்ற வேலையாக இருக்காது. என்றாலும், வேறு வேலை கிடைக்கும் வரை பொறுப்பாக, பணிவுடன் நடந்து கொள்...' என்று சொல்லி அனுப்பினேன்.
ஐந்தாறு மாதங்களுக்கு பிறகு, என் நண்பரை பார்க்க சென்றிருந்தபோது, 'பையன் எப்படி ஒத்துப் போகிறானா...' என்றேன்.
'உண்மையிலேயே உனக்கு நன்றி சொல்லணும்ப்பா. சூப்பரான ஆளா அனுப்பியிருக்கே. இங்கு, குடியிருப்பு வேலைகளை தவிர, தேவைப்பட்டவர்களுக்கு, கணினி உதவியுடன் வீட்டு வரி, மின் கட்டணம், வருமான வரி கணக்கு பதிவு செய்வது, தபால் அலுவலகம், வங்கி சென்று வருவது, அவசர தேவை உள்ளவர்களுக்கு காய்கறி, மளிகை வாங்கித் தருவது என்று, எந்த வேலையாக இருந்தாலும், முகம் சுளிக்காமல் செய்கிறான்.
'கார் ஓட்ட தெரிவதால், குடியிருப்பில் உள்ள ஒரு சிலருக்கு வண்டியும் ஓட்டுகிறான். எந்த வேலையாக இருந்தாலும் இன்முகத்துடன் செய்கிறான். இதுபோன்ற வேலைகளில் போதிய வருமானம் வருகிறது. எனவே, அவனும் சந்தோஷமாக இருக்கிறான்...' என்றார், நண்பர்.
படித்த மற்றும் வேலை இல்லாத இளைஞர்களே... வேலை கொட்டிக் கிடக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் இன்முகத்துடன் செய்யப் பழகி, வருமானம் ஈட்டுங்களேன்!
- பூவை சுபாவாணன், கோவை.
தமிழர் பாரம்பரியம்!
சமீபத்தில், உடல்நிலை சரியில்லாத உறவினரை பார்க்க சென்றிருந்தேன். அவர், சாப்பிட்டு முடித்ததும், வெற்றிலை, பாக்கு போட்டார்.
'அம்மா, நீங்கள் வெற்றிலை போடுவது டாக்டருக்கு தெரிந்தால் திட்ட மாட்டாரா...' என்றேன்.
அருகில் இருந்த அவரது மகள், 'டாக்டர் சொல்லித்தான் வெற்றிலை போடுகிறோம் அக்கா...' என்றார்.
எனக்கோ ஆச்சரியம்...
விஷயம் இதுதான்:
வெற்றிலை சாப்பிட்டால் நம் உடம்பில் உள்ள நுண் கிருமிகள் அழியும். இதயம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் காக்கும். ரத்தக் கொதிப்பு வராது. நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். குழந்தைப் பேறு இலகுவாகும்.
பாக்கு - பித்தம், கபம் போக்கும். சுண்ணாம்பு - கால்சியம் சத்து நிறைந்தது. எலும்பு முறிவு, மூட்டு வலி, எலும்பு தேய்மானம், பல் தேய்மானம் போன்றவற்றிலிருந்து காக்கும்.
இதனால் தான், டாக்டரும் வெற்றிலை போட கூறியதாக சொன்னார்.
ஞாயிறு மட்டுமே அசைவ உணவிற்கு பின், வெற்றிலை போடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இனி, தினமும் வெற்றிலை - பாக்கு போடுவது என, முடிவு செய்து விட்டேன்.
என்ன நீங்களும் தானே?
- மு. சாந்தி ஜெயராணி, சென்னை.
'ஆன்லைன்' பண பரிவர்த்தனையா...உஷார்!
எங்கள் பக்கத்து வீட்டின் மேல் மாடி வீடு காலியாகவே, வீடு வாடகைக்கு என, 'போர்டு' வைத்ததுடன், வலைதளங்களிலும் விளம்பரம் செய்திருந்தார், வீட்டுக்காரர்.
வீடு பார்க்க வந்த ஒருவர், சுற்றி பார்த்து விட்டு, 'எனக்கு, வீடு மிகவும் பிடித்திருக்கிறது. மனைவி, குழந்தைகளை நாளை அழைத்து வருகிறேன். எல்லா, 'பார்மாலிட்டி'களையும் நாளைக்கே முடித்து விடுவோம். நான் வெளியூரில் வேலை பார்ப்பதால், உங்களுடைய மொபைல் போனுக்கு பணத்தை அனுப்பி விடுகிறேன்...' என்று சொல்லிச் சென்றுள்ளார்.
மறுநாள் அவர் போன் செய்து, 5 ரூபாய் அனுப்பி, பணம் வந்ததா என கேட்க, 'செக்' செய்து, பணம் வந்து விட்டதாக சொல்லியிருக்கிறார், வீட்டுக்காரர்.
'சரி, நான் இப்போது முழு அட்வான்ஸ் தொகையையும் அனுப்பி வைக்கிறேன். பார்த்து சொல்லுங்கள்...' என்று சொல்லி, போனை வைத்து விட்டார்.
இருப்பு தொகையை பார்த்துவிட்டு, 'பணம் இன்னும் வரவில்லை...' என, சொல்லியிருக்கிறார், வீட்டுக்காரர்.
'சரி, நான் அனுப்பி விட்டேன். உங்களுக்கு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. வங்கிக்கு சென்று பார்க்கிறேன்...' என்றவர், சிறிது நேரத்திற்கு பிறகு, ஒரு, 'லிங்க்'ஐ அனுப்பியுள்ளார்.
வீட்டுக்காரருக்கு போன் செய்து, 'நான் ஒரு, 'லிங்கை' அனுப்பியிருக்கிறேன். அதை எனக்கு திரும்ப அனுப்புங்கள், அப்போதுதான் முழு பணமும் உங்களுக்கு வரும் என, வங்கியில் கூறியுள்ளனர்...' என்று சொல்லியுள்ளார்.
வீட்டுக்காரரும் அந்த மொபைல், 'லிங்கை' திருப்பி அனுப்பியிருக்கிறார்.
பிறகு தான் தெரிந்தது, அந்த, 'லிங்க்' அனுப்பியவுடன், இவருடைய வங்கி கணக்கிலிருந்த மொத்த பணமும், வீடு பார்க்க வந்தவருக்கு சென்று விட்டது.
இப்போது வீடு பார்க்க யார் வந்தாலும், 'அட்வான்ஸ் தொகையை கையில் கொடுங்கள்...' என, சொல்லி விடுகிறார்.
'ஆன் - லைன்' பண பரிவர்த்தனையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது, இதன் மூலம் தெரிகிறது அல்லவா!
- எம். பவித்ரா, விழுப்புரம்
