
காவல் நிலையம் போவது அவமானமா?
நண்பர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த, இரு சக்கர வாகனம் காணாமல் போனது. அவர், ஓரளவு வசதி படைத்தவர் என்பதால், அதை ஒரு பொருட்டாக கருதவில்லை. போலீசில் புகார் செய்தால், அலைச்சல் மற்றும் அவமானம் என நினைத்து, அதை அப்படியே மறந்தும் விட்டார்.
அண்மையில், அவர் வீட்டுக்கு வந்த காவலர்கள், காவல் நிலையம் வருமாறு சொல்ல, அதிர்ந்து போனார். அங்கு போய் காரணம் கேட்ட போது, பல திருட்டு சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதற்கு அவரது இரு சக்கர வாகனமே பயன்படுத்தப்பட்டிருப்பதாக, தலைமைக் காவலர் கூற, மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
'என் இரு சக்கர வாகனம் காணாமல் போய், இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது...' என்று, அவர் சொன்னதை, நம்ப மறுத்தனர், காவலர்கள். 'உடனே ஏன் புகார் செய்யவில்லை; நீங்களே ஆள் வைத்து, இரு சக்கர வாகனத்தை களவாடச் செய்து, பல வழிப்பறி மற்றும் திருட்டுகளை செய்திருக்கிறீர்கள்...' என்றதும், மிகவும் நொந்து போய் விட்டார்.
அலைச்சல், அவமானம் கருதாமல் உடனே காவல் நிலையம் சென்று ஒரு, எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருந்தால், இன்று, இந்த நிலைமை வந்திருக்காது என்று, அப்போது தான் அவருக்கு உறைத்தது. பிறகு, நிறைய செலவு செய்து, பல ஆதாரங்களை காட்டி, அதிலிருந்து அவர் மீண்டு வருவதற்குள், போதும் போதுமென்றாகி விட்டது.
எனவே, நண்பர்களே, உங்களது வாகனமோ, மொபைல் போனோ தொலைந்தால், உடனே, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, எப்.ஐ.ஆர்., காப்பி வாங்கி விடுங்கள். இல்லையென்றால், அதன்பின், இதுபோன்று பெரிய பிரச்னைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
- அ. பேச்சியப்பன், ராஜபாளையம்.
அரவணைப்பும் அவசியம்!
சமீபத்தில், சென்னையிலுள்ள என் தோழியின் குடியிருப்புக்கு சென்றிருந்தேன். அச்சமயம், அக்குடியிருப்பின் மைதானத்தில், விளையாட்டு போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. என்னவென்று தோழியிடம் விசாரித்தேன்.
'எங்கள் குடியிருப்பில் பணிபுரியும் வீட்டு பணியாளர்கள், சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், காவலாளிகள் என, பலதரப்பட்டவர்களுக்கும், ஆண்டுக்கு ஒருமுறை, இவ்வாறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, அவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறோம்...' என்றார்.
செய்யும் வேலைக்கு ஊதியம் வாங்குபவர்கள்தானே, அதற்கு மேல் அவர்களுக்கு என்ன செய்வது என்று எண்ணாமல், நமக்காக பணிபுரிபவர்கள் இயந்திரமல்ல, சக மனிதர்களே என, ஒன்று கூடி அவர்களை அரவணைக்கும், தோழியின் குடியிருப்புவாசிகளை, மனதார பாராட்டினேன்!
- டி. பிரேமா, மதுரை.
மருந்தே உன் விலை என்ன?
சமீபத்தில், ஓர் உடல் உபாதைக்காக, மருத்துவமனை சென்றிருந்தேன். பரிசோதித்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர், பிரத்யேக இன்ஜெக்ஷன் ஒன்றை பரிந்துரைத்தார். மருந்து கடையில் அதன் விலை, 25 ஆயிரம் ரூபாய் என்று கூறியதும், திடுக்கிட்டேன்.
மருந்தை அங்கு வாங்காமல், மருந்து தயாரிக்கும் கம்பெனியை மெயிலில் தொடர்பு கொண்டு, சலுகை விலையில், மருந்தை வழங்கும்படி கோரிக்கை வைத்தேன்.
பாதி விலைக்கான ரசீதுடன், என் வீட்டிற்கு வந்து மருந்தை கொடுத்து, ஆச்சரியத்தில் ஆழ்த்தினார், மருந்து கம்பெனியின் பிரதிநிதி. எனக்கு கொடுக்கப்பட்ட விலையில் தான், மருத்துவமனைகளுக்கு அந்த மருந்து வினியோகம் செய்யப்படுவதாக, அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.
மருத்துவமனையில் பாதிக்கு பாதி லாபம் வைத்து, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். எனவே, மருத்துவமனைகளில் உள்ள பார்மசிகளில் மருந்துகளை வாங்குவதற்கு முன், அதே மருந்து, நியாய விலையில் வெளியில் கிடைக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது, மிக அவசியம்!
- எஸ்.ராமன், சென்னை.
இப்படியும் செய்யலாமே!
புதிய அடுக்கு மாடி குடியிருப்பில், வீடு வாங்கியிருப்பதை பற்றி சொல்லி, அக்குடியிருப்பு செகரட்டரியையும் புகழ்ந்து தள்ளினார், நண்பர். 'அவர், அப்படி என்ன செய்து விட்டார்...' என்றேன்.
'எங்கள் குடியிருப்பில், சுமார், 300 வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பேர் வசிக்கின்றனர். அதில், 17 வயதுக்கு மேல், 55 வயதுக்கு கீழ் உள்ள நபர்களின் ரத்த பிரிவு மற்றும் தொலைபேசி எண்ணை சேகரித்து வைத்துள்ளார்.
'ராணுவத்தில், மருத்துவ பிரிவில் இருந்துள்ளார். ரத்த பிரிவு தெரியாதவர்கள், அவருக்கு தெரிந்த மருத்துவ நிலையம் சென்று பரிசோதிக்கவும், இதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு ஒரு கூட்டமும் ஏற்பாடு செய்தார்.
'விபத்தில் சிக்குபவர்கள் பலருக்கு, அவரவர் பிரிவு ரத்தம் கிடைப்பது சிரமமாக இருக்கும். மேலும் சிலருக்கு, அவர்கள் ரத்த பிரிவு என்ன என்று கூட தெரிவதில்லை. இதனால், சிகிச்சை தாமதமாவதுடன், மரணம் கூட சம்பவிக்கிறது.
'எனவே, 500 - 700 நபர்கள் இருக்கும் நம் குடியிருப்புகளில், யார் யார் எந்த ரத்த பிரிவு என்று கணினியில் போட்டு விட்டால், நம் இல்லத்தில் இருப்பவரே, மற்றவருக்கும் உதவலாம். சில மருத்துவமனைகளில், உறவினர்களையே ரத்தம் ஏற்பாடு செய்ய அலைய விடுகின்றனர்.
'இந்த திட்டத்தை செயல்படுத்தினால், உறவினர்களின் மன கஷ்டத்தை தவிர்க்கலாம். இந்த ரத்த விபரங்களை, அருகில் இருக்கும் மற்ற குடியிருப்புகளின் செகரட்டரிகளுடனும் பகிர்ந்து கொள்ளவும் முயற்சி செய்கிறார்...' என்றார். நல்ல திட்டம் தான். இதை, மற்ற குடியிருப்புவாசிகளும் செயல்படுத்தலாமே!
- வி. கணபதி, சென்னை