PUBLISHED ON : ஆக 28, 2022

ஏவி.எம்.சரவணன் - வைரமுத்து - நான்!
ஆங்கிலத்தில், 'கோ இன்சிடெண்ட்ஸ்' என்று சொல்வர். இந்த வகையில் நடந்த நிகழ்ச்சி இது.
ஏவி.எம்.சரவணன், 'ஹலோ மெட்ராஸ்' என்ற மாத இதழை நடத்தி வந்தார். 'டூரிசம் பிரமோஷனு'க்காக நடத்தப்பட்டது. அதுபற்றி சரவணனை பேட்டி கண்டு எழுதும்படி, என்னிடம் சொன்னார், 'குமுதம்' இதழ் ஆசிரியர்.
சரவணனை சந்திக்க, ஏவி.எம்., ஸ்டுடியோ அடுத்து இருந்த, அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது தான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து, 48 ஆண்டுகளாக எங்கள் நட்பு இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
'ஹலோ மெட்ராஸ்' என்று பெயர் வைக்க ஐடியா கொடுத்தவர், அவரது சகோதரர் ஏவி.எம்.குமரன். 'ஹலோ மெட்ராஸ்' இதழ் வெளிவந்தவுடன் இதை முழுவதும் படித்து ஏதாவது திருத்தங்கள் இருந்தால், ஏவி.எம்.செட்டியார் உடனே குறிப்பு அனுப்புவார். அவரது புகைப்படமும், அரைப்பக்கம் பேட்டியும், 'குமுதம்' இதழில் வெளிவந்தது.
'சினிமாத் துறையில் மிகவும் பிரபலமாக இருக்கும் என்னை, முதல் முறையாக பேட்டி கண்டு, என் படத்தை, 'குமுதம்' இதழில் போட்டது ரஜத் தான்...' என்று, பல இடங்களில் சரவணன் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதேபோல, 1975ம் ஆண்டு, 'குமுதம்' தீபாவளி மலரில், 'சாம்பியன்ஸ்' என்று ஒரு பகுதி ஆரம்பித்தனர். பல கல்லுாரிகளை சேர்ந்த சாம்பியன்கள் பற்றி புகைப்படத்துடன் குறிப்பு வெளியிடப் பட்டது.
அப்போது பச்சையப்பன் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த வைரமுத்து என்ற இளைஞரின் படத்தை காண்பித்து, பேச்சுப் போட்டியில் சாம்பியன் என்றனர். அவரைப் பற்றி நான் எடுத்த பேட்டி கட்டுரை, டிச., 18, 1975, 'குமுதம்' இதழில், வைரமுத்து படத்துடன் இடம்பெற்றது. வைரமுத்துவின் படமும், அவரைப் பற்றிய தகவலும் பத்திரிகையில் வருவதும் அது தான் முதல் முறை என்று அறிந்தேன்.
கலைத்துறையில் இரு பெரிய சிகரங்களை பற்றி, முதன்முதலாக எழுதிய பெருமை எனக்கு கிடைத்தது.
பேயின் உருவம்!
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தவிர, தமிழ்நாடு காவல்துறை முதல்முறையாக, பெண்களை போலீஸ் அதிகாரிகளாக நியமித்த சமயம். பெண் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட உஷா என்பவரை, என் சகோதரர் உத்ரா, 'குமுதம்' இதழ் அட்டைக்காக படம் எடுத்தார்.
உஷாவின் தங்கை அவருக்கு காபி கொடுப்பது போல படம் அமைந்திருந்தது. இந்த அட்டை தாங்கிய, 'குமுதம்' வெளிவர சில நாட்களே இருந்த சமயத்தில், உஷாவும், அவரது தந்தையும், 'இந்த அட்டைப் படத்தை நிறுத்தி விடுங்கள்...' என்றனர்.
'என்னம்மா இது முதலில் ஓ.கே., சொல்லிட்டு, இப்போது வேண்டாம் என்று சொல்கிறீர்களே...' என்று கேட்டோம். ஏதோ குழப்பம் உள்ளது என்று, எங்களுக்கு புரிந்தது. அப்போது, சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஷெனாய் என்பவர் இருந்தார். அவரை சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என்று, அவரை சந்தித்தேன்.
'ஒருவரின் தங்கை அவருக்கு காபி கொடுப்பது எப்படி தவறாகும்? தயவுசெய்து அட்டைப் படத்தை ஓ.கே., பண்ணுங்கள்...' என்று கேட்டேன். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. 'இந்த அறையில் அசிஸ்டன்ட் கமிஷனர்கள், டெப்டி கமிஷனர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் இதற்கு ஓ.கே., என்றால் கூட, உங்களுக்கு நான் அனுமதி கொடுக்கிறேன்...' என்றார்.
'மன்னிக்க வேண்டும் சார். இவர்கள் அனைவரும் உங்கள் கீழ் பணிபுரிபவர்கள். அப்படி இருக்கும்போது, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்தாக எப்படி சொல்ல முடியும். அட்டைப்படம் அச்சாகி விட்டது ஓ.கே., பண்ணுங்கள்...' என்று மீண்டும் வற்புறுத்தினேன். அப்போதும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
போலீஸ் கமிஷனர் சந்திப்பை பற்றி, எஸ்.ஏ.பி.,யிடம் தெரிவித்தேன். 'ஆலோசித்து முடிவெடுக்கலாம்...' என்று சொன்னார். ஆசிரியர் குழுவில் விவாதத்துக்கு பின், ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரி உஷாவின் படத்தை போடுவதற்கு தானே, கமிஷனர் உத்தரவு வேண்டும். உஷாவின் தங்கையின் படத்தை போட, அவரது தந்தையின் அனுமதி போதுமே. அட்டை படத்தில் உஷாவின் உருவத்தை முழுவதுமாக வெள்ளையடித்த மாதிரி செய்து விட்டார்.
காபி கோப்பையுடன் ஒரு பெண் இருப்பது போலவும், அருகே நிழல் வடிவில் ஒருவர் இருப்பது போலவும் தெரியும். மாறுபட்ட அட்டை படத்துடன், அந்த வார, 'குமுதம்' வெளிவந்தது. அட்டைப்படம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமும் இருந்ததாக, பின்னர் அறிந்தேன்.
நிர்வாண ஓவியர் சாவித்திரியுடன் ஒரு பேட்டி...
— தொடரும்
எஸ். ரஜத்