
பா - கே
செஸ் ஒலிம்பியாட், சர்வதேச காற்றாடி திருவிழா, 75வது சுதந்திர தினம், சென்னை தினம் என, பல நாட்களாக, சென்னை மாநகரமே கோலாகலமாக இருந்தது. தற்சமயம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளை. 'பீச் மீட்டிங்'கில் நண்பர்கள் ஆஜராகி இருந்தனர்.
'அப்பாடா... இப்பத்தான், கெடுபிடி எதுவும் இல்லாமல், 'பீச்' பழையபடி இருக்கு...' என்றார், குப்பண்ணா.
'பெரிசு... அதற்குள் ஒரு முடிவுக்கு வந்துட்டா எப்படி? அடுத்து, வழக்கமா நடக்கும், ஊர்வலம், போராட்டம், மறியல் அது, இதுன்னு ஏகப்பட்டது இருக்கே... இதெல்லாம் நமக்கு புதுசா என்ன?' என்றார், லென்ஸ் மாமா.
'அட விடுங்கப்பா... இந்த சீனாக்காரன் அடங்கவே மாட்டானாப்பா... உளவு கப்பலை அனுப்புவது, உலக நாடுகளை சீண்டறதுன்னு, அவனது, 'அட்ராசிட்டி' ஓவரா போயிட்டிருக்கே...' என்றார் கோபமாக, 'திண்ணை' நாராயணன்.
'ரஷ்யா - உக்ரைன்' போரே எதற்கு நடக்குதுன்னு இன்னும் தெளிவாகல... அதற்குள் சீனா - தைவான் பிரச்னை... சீனாக்காரன் மேலதான் தப்பு இருக்கும். செத்த பாம்பை திங்கறவனுக்கு இவ்வளவு, 'கொரடால்' ஆகாதுப்பா...' என்று ராமசாமி அண்ணாச்சி கூறியதும், 'டென்ஷன்' ஆனார், லென்ஸ் மாமா.
'உமக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன் இங்கிலீஷில் பேசாதீரும் என்று. அது, 'கொரடால்' இல்ல, 'கொலஸ்ட்ரால்' - கொழுப்புன்னு தமிழில் சொல்றதுக்கென்ன...' என்றார், மாமா.
'சரி, அமைதி அமைதி... மணி, நீ தைவானுக்கு போயிருக்கிறதானே. அந்நாட்டை பற்றி சொல்லேன்...' என்றார், அன்வர்பாய்.
கூற ஆரம்பித்தேன்:
தைவானுக்கு போய் ரொம்ப வருஷமாச்சு. உலக வரைபடத்தில்,
கோழி ஒன்று உட்கார்ந்திருப்பது
போல் இருக்கும் நாடு, சீனா. அதன்முன் நெல்மணி போல் இருக்கும் குட்டி தீவு தான், தைவான்.
வரலாற்றை திருப்பிப் பார்த்தால், ஒரு காலத்தில், இரண்டும் ஒரே நாடாகதான் இருந்தது. 1949ல் நடந்த உள்நாட்டு போரின் முடிவில், தைவான், தனி நாடாக உருவானது. ஆனால், அதை ஒப்புக்கொள்ளாமல், 'எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனி மாகாணம் தான், தைவான்...' என கூறிக் கொண்டிருக்கிறது, சீனா.
பொருளாதாரத்தில் மிகவும் முன்னிலை வகிக்கும் நாடு, இது. இங்கு, இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம். இதனால், அன்னிய செலாவணியில் பலமாக உள்ள நாடு.
* எலெக்ட்ரானிக்ஸ் துறையில் மிக அதிகமாக தேவைப்படும், 'செமி கண்டக்டர் சிப்'பை, இந்த நாடு தான் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கிறது.
கூடுதலாக துணிகள், சர்வீஸ் துறையிலும் கொடி கட்டி பறக்கிறது
* மற்ற மேற்கத்திய நாடுகள் போல், ஒரு காலத்தில், சீனாவும், தைவானில் காலுான்றியது. ஒரு கட்டத்தில், உள்ளூர்வாசிகளை விரட்டி விட்டு, தான் அமர்ந்து கொண்டது. பலன்... இன்று, தைவான் நாட்டில் உள்ளூர் மக்கள், 3 சதவீதம் மட்டுமே உள்ளனர். மீதமுள்ளவர்கள், சீனர்கள்
* தைவானின் ஜனத்தொகை, 2.30 கோடி. இதில் உள்ளூர் பகுதி மக்கள், 5 லட்சம் மட்டுமே. இவர்களில், 8 சதவீதத்தினர் மலை ஜாதி இனத்தினர். அவர்களிடையே, 26 மொழிகள் புழக்கத்தில் இருந்தன. சீன மொழியான, மான்டரின் நுழைந்ததால், உள்ளூர் மொழிகள் மறைந்து வருகின்றன
* தைவான் மக்கள், யாரையாவது தெருவில் கண்டால், 'சவுக்கியமா?' என கேட்க மாட்டார்கள். மாறாக, 'சாப்பிட்டீங்களா?' என்று தான் கேட்பர்
* நம்மூரில், 'கொரோனா' முன்னெச்சரிக்கை பாடல்களை ஒலிபரப்பியபடி குப்பை வண்டிகள் வருவதை பார்த்திருப்பீர்கள். தைவானில் எப்போதுமே, குப்பை வண்டிகள், பாடல்கள் ஒலித்தப்படி வந்து தான் குப்பைகளை அள்ளிச் செல்லும்
* இங்கு, இரவு மார்க்கெட் சகஜம். அவற்றில் உணவு வகைகள்தான் முதன்மையானதாக இருக்கும்
* இந்தியர்கள் மாதிரியே, மாமா, அத்தை, அண்ணா, அக்கா, பாட்டி மற்றும் தாத்தா என, அழைப்பதை பார்க்கலாம்
* நான்கு என்ற எண்ணை அறவே தவிர்ப்பர். லாட்ஜ் உட்பட பல இடங்களில் அந்த எண்ணையே காண முடியாது. 'போர்' என்ற ஆங்கில உச்சரிப்புக்கு அவங்க மொழியில், 'துர் அதிர்ஷ்டம்' என்று அர்த்தமாம். எனவே, அந்த சொல்லை தவிர்க்கின்றனர்
* கடிகாரங்களை அன்பளிப்பாக பெறுவதை வெறுப்பர். 'கிளாக்' என்ற சொல்லுக்கு அவங்க மொழியில், 'முடிந்தது, நீக்கப்பட்டது' என பொருள். யாராவது கடிகாரத்தை அன்பளிப்பாக கொடுத்தால், 'எங்களை முடிக்க தீர்மானித்து விட்டீர்களா...' என, குசும்பாக கேட்பர், சிலர்
* அன்பளிப்பை தந்தவர் முன், அதை பிரித்து பார்ப்பதை அநாகரிகமாக கருதுவர்
* தைவானியர்கள் ஜூலை 1 மற்றும் ஜூலை 31ஐ வெறுப்பர். காரணம், அது பாதாள உலகம் திறந்திருக்கும் நேரம் என நம்புகின்றனர். பாதாள உலகத்தில் வசிக்கும் பேய் மற்றும் ஆவி போன்றவைகள் இந்த சமயத்தில் வெளியே வந்து நடமாடுமாம். எனவே, அந்த மாதம் முழுவதும் புதிய நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கால்கள் உள்ளனவா என, கவனிக்க வேண்டும் என்பர்.
குறிப்பாக, இந்த மாதத்தில், நீச்சல் அடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே குளத்தில் இறங்கி, நீச்சல் தெரியாமல் மூழ்கியவர்கள், பேய்களாக உள்ளே நடமாடுவர். நீச்சல் தெரியாதவர்களை நீருக்குள் இழுத்து, அமுக்கி, தங்கள் உலகிற்கு கொண்டு சென்று விடுவர் என்ற நம்பிக்கையும் உள்ளது
* இதன் தலைநகரம் தைபே. ஒரு காலத்தில் பார்மோசா என அழைக்கப்பட்டது
* மரணம், மரண ஊர்வலங்களில் பெரும்பாலோர் வெள்ளாடை அணிவர். பெண்கள் கண்டிப்பாக அணிய வேண்டும்
* தைவான், அசப்பில் ஹவாய் தீவு மாதிரியே இருக்கும். சுத்தமான, தெளிவான நீர். பனை மற்றும் அன்னாசி பழ மரங்கள், ஆழமான, செங்குத்தான பள்ளத்தாக்குகள், ஒடுக்கமான, நீண்ட கரை மேடுகளை கொண்ட பூமி. நாட்டில், 50 சதவீதம் காடு. மீதமுள்ள இடங்களில் ஒடுக்கமான நீண்ட கரை மேடுகளில் தான், மக்கள் வசிக்கின்றனர்
* கோவில்கள் வண்ணமயமாக, தீ கக்கும் சீனாவின் டிராகன் விலங்கு சிற்பங்களுடன் ஜொலி ஜொலிக்கும்
* 40 சதவீதத்தினர் புத்த மதத்தினர். அதன் கொள்கைகள், பழக்க வழக்கங்களே பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு, நான் கூறி முடிக்கவும், 'இந்த குட்டி நாட்டுக்குள் இவ்வளவு விஷயம் இருக்கிறதா. தைவான் பற்றி என் பேரப்பசங்க கேட்டா, இப்ப தைரியமா இதையெல்லாம் சொல்வேன். நன்றி மணி...' என்றார், அன்வர்பாய்.