PUBLISHED ON : ஜூலை 24, 2011

பரிசுப் பையில் சுய விளம்பரம்!
என் தோழியும், அவள் கணவரும், தங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளை, உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்து, வெகு விமரிசையாக கொண்டாடினர். வந்திருந்த அனைவருக்கும், விலை உயர்ந்த கைப்பை ஒன்றை பரிசளித்தனர். தரமானதாகவும், அழகானதாகவும் இருந்த அப்பையின் வெளிப்புறம், குழந்தையின் பெயருடன், முதல் பிறந்த நாள் விழா என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 'தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!' என்ற வாசகத்தோடு, தோழி மற்றும் கணவரின் பெயரை அச்சிட்டிருந்தனர். இப்படி வாசகங்கள் அச்சிடப்பட்ட பையை, வெளியில் எடுத்துச் செல்ல தயங்கிய நான், அதை வீட்டிலேயே போட்டு வைத்து விட்டேன். தரமானதாகவும், அழகானதாகவும் இருந்த அந்த பை, இப்போது எதற்கும் பயனற்றுக் கிடக்கிறது. தங்களின் இல்ல, அலுவலக விழாக்களுக்கு பரிசுப் பைகள் தருவோர், வெளியில் தெரியும் வகையில் விளம்பரம் செய்வதை தவிர்த்து, அதை பயன்படுத்தும் வகையில் கொடுத்தால் நல்லது. இல்லையேல், தரமும், அழகும் உடையதாக அது இருந்தாலும், பெரும்பாலும் பயனற்று, வீணாகி விடும். பரிசுப் பையர்களே... சிந்திப்பீரா?
— கு.வேதாச்சலம், அம்பாசமுத்திரம்.
புகையைத் தவிர்க்கலாமே!
இரவு நேர ரயிலில், சென்னையி லிருந்து, சேலம் செல்ல நேர்ந்தது. டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் பரிசோதனையை முடித்துச் சென்றதும், சிறுநீர் கழித்துவிட்டு வந்து, 'பர்த்'தில் படுக்கலாம் என நினைத்து, ரயில் பெட்டியிலிருந்த கழிவறைக்குச் சென்றேன். கழிவறை முழுவதும், சிகரெட் புகை நிரம்பியிருந்தது. அந்த நாற்றம், குமட்டிக் கொண்டு வந்தது. அந்தப் பகுதியில், எதிர், எதிரே இருந்த இரு கழிவறைகளிலும், இதே நிலைதான். படுக்கச் செல்லும் முன், பாத்ரூம் பயன்படுத்த பலதரப்பட்டவரும் வருவர் என்று தெரிந்தும், ரயில் பெட்டியில் புகைக்கத் தடை என்பதால், கழிவறையை புகையிடமாக்கிய ஜென்மங்களை என்ன சொல்வது? புகைப்பாளர்களே... போதுமான காற் றோட்ட வசதி இல்லாததாலும், பெண்கள், சிறுவர், ஆஸ்துமா நோயாளிகள் என, பலதரப்பட்டவர்களும் ஆத்திர அவசரத்துக்கு ரயில் கழிவறையை பயன்படுத்துவர். இதனால், அங்கு புகைப்பதை தவிர்க்கலாமே!
— ஆர்.அம்புஜவல்லி, பல்லாவரம்.
நல்ல பாலிசி!
சமீபத்தில், அலு வலக நண்பர் குழந்தை யின் பிறந்த நாள் விழா விற்கு சென்றிருந்தேன். விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலர், தங்க காசு, மோதிரம், செயின் என, மொய் எழுத முன் வந்த போது, நண்பர் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். 'நூறோ, இரு நூறோ அல்லது ஒரு ரூபாயாக இருந்தால் கூட போதும், காசாக கொடுங்கள்... சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்; தங்க நகைகள் எல்லாம் வேண்டாம்...' என்று கறாராக கூறியதைக் கண்டு, அனைவரும் திகைத்தனர். 'இந்நாட்டில், 1,500 கிலோ தங்கத்தை சேர்த்து வைத்துள்ள அரசு அதிகாரிகள் இருக்கையில், தங்கமே வேண்டாம் என்று சொல்பவரும் இருக்கிறாரே...' என்றெண்ணி வியந்தேன்.
ஒரு வேளை பணக்கஷ்டமாக இருக்கலாம். விழாவுக்கான செலவைக் கூட, சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலையில், பணமாக மொய் எழுதச் சொல்கிறார் போலும் என நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் அலுவலகம் வந்த நண்பரிடம், அது குறித்து விசாரித்தேன். 'இப்போது தங்க நகை மொய் எழுதுபவர்களின் வீடுகளில், பின்னர் நடக்கும் விழாக்களிலும், விசேஷங்களிலும் நாமும் அதே போல் தங்க நகை தான் மொய் எழுத வேண்டும்; அவர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பர். 'ஆனால், அப்போது தங்கம் என்ன விலை விற்கும் என்று சொல்ல முடியாது. தங்கம் வாங்குமளவுக்கு, நமக்கு அப்போது வசதி இருக்குமா என்பதும் தெரியாது. இப்போது அவர்கள் பணமாக மொய் எழுதினால், நூறோ, இரு நூறோ கூடுதலாக நாம் அப்போது மொய் எழுதி விடலாம்; யாருக்கும் எந்த மனஸ்தாபமும் ஏற்படாது...' என விளக்கினார். இது, நல்ல பாலிசி தானே!
— கு.கணேசன், மறைமலைநகர்.
