PUBLISHED ON : ஜூலை 24, 2011

ஜூலை 30 - ஆடி அமாவாசை!
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள்.
முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.
அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்...
குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன். 'போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்...' எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், 'பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி...' என்றார்.
துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப்பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர். 'நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா?' என்றனர்.
அதற்கு கிருஷ்ணன், 'இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை...' என, சமயோசிதமாக பதில் சொல்லி விட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.
ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, 'நித்ய அமாவாசை தலம்' என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.
ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் பிடித்து, சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து, 4 கி.மீ., தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில், சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்று வாருங்கள்.
***
தி. செல்லப்பா
