தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவீன நைட்டிங்கேல்கள்!

ஒண்டிக்கட்டையாக ஊரில் தனித்திருந்த, வயது முதிர்ந்த என் உறவினர் ஒருவருக்கு, சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

வெளிநாட்டில் இருக்கும் அவருடைய மகனுக்கு தகவல் தர, அவனது வேண்டுகோளின்படி, அவன் வரும் வரை, உறவினரை மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு துணையாக உடனிருந்தேன்.

மருத்துவமனையில், அவரை பரிவோடு கவனித்துக் கொண்டனர், செவிலியர்கள். அத்துடன், அவரிடம் நேர்மறையான வார்த்தைகளையே எப்போதும் பேசியது, எனக்கு மன நிறைவாக இருந்தது.

மேலும், உறவினரை பார்க்க வருவோரிடமும், அவருடைய மன நிலையை குலைக்கும்படியான, எந்தவித எதிர்மறை வார்த்தைகளையும் பேசக் கூடாது என்று, கடுமையாக எச்சரித்த பிறகே, அவரை சந்திக்க அனுமதித்தனர்.

அவர் விழித்திருக்கும் போதெல்லாம், அவரருகே அமர்ந்து, ஆன்மிக மற்றும் தன்னம்பிக்கை கருத்துக்களைக் கொண்ட நுால்களையும் படித்துக் காட்டி உற்சாகப்படுத்தினர். இதன் காரணமாக, உறவினரும் சந்தோஷமாகி, நோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமானார்.

நோயாளிகளை, பணம் காய்க்கும் மரமாக கருதும் மருத்துவமனைகளுக்கு மத்தியில், உடல்நலன் விரைந்து தேறுவதற்கு உதவிய செவிலியர்களின் அர்ப்பணிப்பு, என்னை நெகிழச் செய்தது. அவர்களை மனதார வாழ்த்தினேன்!

- -எஸ்.விஜயன், கடலுார்.

திருநங்கையின் மறக்க முடியாத உதவி!

கோவையிலிருந்து சென்னைக்கு பயணம் செய்த ஆம்னி பேருந்தில், பெண்கள் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி, ஆண்கள் இருக்கையில், என் அருகில் இருந்த இடம் மட்டுமே காலியாக இருந்தது.

ஓர் இடத்தில், பொருட்கள் ஏற்ற பஸ் நின்றபோது, 'சென்னை செல்ல இடம் இருக்கிறதா...' என, பஸ் ஊழியரிடம் கேட்டார், திருநங்கை ஒருவர்.

'ஒரு நிமிடம்...' என சொல்லி, என்னிடம் வந்து, 'திருநங்கை ஒருவர், சென்னை செல்ல வேண்டுமாம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், டிக்கெட் போடுகிறோம்...' என்றார், ஊழியர்.

'தாராளமாக டிக்கெட் போடுங்கள்...' என்றேன். பஸ்சில் ஏறிய திருநங்கை, 'நன்றி...' கூறி, என் அருகில் அமர்ந்தார்.

சில நிமிடங்கள் என்னிடம் பேசியபின், இருவரும் துாங்கி விட்டோம்.

திடீரென என் உடம்பு வியர்த்து, லேசான மூச்சு திணறல் ஏற்பட்டதால், செய்வதறியாமல் தவித்தேன். என் படப்படப்பைக் கண்டு, பஸ் ஓட்டுனரிடம், வழியில் மருத்துவமனை இருந்தால், நிறுத்துமாறு கூறினார், திருநங்கை.

விருத்தாசலத்தில் ஒரு மருத்துவமனையில் பஸ் நிறுத்தப்பட்டதும், என்னுடன் துணைக்கு வந்தார், திருநங்கை.

உரிய சிகிச்சை பெற்று, மூன்று மணி நேரத்திற்கு பின் குணமானேன். அதுவரை காத்திருந்த திருநங்கை, என் போன் மற்றும் பணம், பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக திருப்பிக் கொடுத்தார்.

மருத்துவமனையில் சேர்ந்ததும், சென்னை, பெருங்களத்துாரில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருந்தேன்.

காரில் வந்த உறவினர்கள், திருநங்கையின் உதவிக்கு நன்றி கூறியதுடன், காரிலேயே அனைவரும் சென்னை திரும்பினோம். திருநங்கை செல்ல வேண்டிய இடத்தில் அவரை விட்டு விட்டு, அவரது போன் எண்ணையும் வாங்கிக் கொண்டோம்.

இப்போது அடிக்கடி போனில் அன்பு பாராட்டி வருவதோடு, எங்கள் இல்ல விசேஷங்களுக்கும், அவரை அழைத்து, பெருமைப்படுத்துகிறோம்.

இனிமேலாவது, திருநங்கை என்றால், கெட்டவர்கள், திருடர்கள், மோசமானவர்கள் என, தவறாக சொல்லும் எண்ணம் மாறுமா!— ப.சிதம்பரமணி, கோவை.

நண்பரின் நல்லெண்ணம்!

செக்யூரிட்டி ஏஜன்சி நடத்தி வருகிறார், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான, குடும்ப நண்பர்.

அதன் மூலம், வேலை தேடும் பல இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறார்.

அவரின் ஏஜன்சியில் பணிபுரியும் வேலையில்லா இளைஞர்களுக்கு, அரசு தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு வசதியாக, பயிற்சி நிலையங்களுக்கு சென்று வரும் வகையில், பணி நேரத்தை ஒதுக்கி, பேருதவி செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, தன் சொந்த செலவில், பயிற்சி கட்டணத்தை செலுத்துவதோடு, அவர்கள் பயிற்சி பெற தேவையான வழிகாட்டி கையேடுகளையும் வாங்கிக் கொடுத்து, உதவுகிறார்.

அவரிடம், செக்யூரிட்டி பணி செய்து கொண்டே, அரசு தேர்வுகளுக்கு பயிற்சி எடுத்த பல இளைஞர்கள், இப்போது, அரசு பணி கிடைத்து, நல்ல நிலையில் இருக்கின்றனர்.

இதுபற்றி அவரிடம் கேட்டால், 'நாம் வாழ்ந்து, அடுத்தவரையும் வாழ வைக்கலாமே தவிர, நாம் வாழ்வதற்காக, பிறரின் வாழ்க்கையை கெடுத்து விடக்கூடாது...' என்று சிம்பிளாக கூறினார்.

நல்லெண்ணத்தோடு செயல்படும் அவரை, அனைவருமே வாழ்த்துவோம்!

டி. பிரேமா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us