தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏமாற்றுவதில் இது புதுவிதம்!

உறவினர் வீட்டு திருமணத்தின்போது, திருமண மண்டபம் அருகிலிருக்கும் கோவிலிலிருந்து, பெண் அழைப்பு நடந்தது.

மணப்பெண்ணிற்கு, நலங்கு மற்றும் 21 தட்டு சீர்வரிசை வைக்கப்பட்டது.

'மண்டபத்திற்கு வருவோரை, வரவேற்க வேண்டியிருப்பதால், நீங்கள் அனைவரும் மேள தாளத்தோடு, மெதுவாக பெண்ணை அழைத்து வாருங்கள்...' என, கூறிச் சென்றனர், மாப்பிள்ளை வீட்டார்.

'ஹீல்ஸ்' செருப்பு அணிந்து, வழியும் வியர்வையை, 'மேக் - அப்' கலையாமல் ஒத்தியெடுத்தபடி, பெரிய ஜரிகை போட்ட பட்டுப் புடவையை ஒரு கையால் துாக்கிக் கொண்டும், ஒரு கையில், சீர்வரிசை தட்டை ஏந்தியபடியும், ஊர்வலத்தில் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தனர், பெண் வீட்டார். அச்சமயம், டெம்போ வேன் ஒன்று அவ்வழியே சென்றது.

கல்யாண ஊர்வலத்தில், பெண்கள் சிரமப்படுவதை கவனித்து, அவர்கள் அருகில் வண்டியை நிறுத்தி, 'வண்டி, சத்திரத்திற்கு தான் செல்கிறது. நீங்கள் வேண்டுமானால், சீர்வரிசை தட்டை வண்டியில் வையுங்கள். சத்திரத்திற்கு வந்ததும் பெற்றுக் கொள்ளுங்கள்...' எனக் கூறினார், டெம்போ டிரைவர்.

பெண்கள் அனைவரும், தங்கள் கையிலிருந்த சீர்வரிசை தட்டை மளமளவென டெம்போவில் வைத்தனர். பிறகு, நிம்மதியாக பெண்ணை அழைத்துக் கொண்டு திருமண மண்டபம் வந்தனர். ஆரத்தி தட்டுடன், மண்டப வாசலில் காத்திருந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம், 'சீர்வரிசை தட்டு எங்கே?' என்று கேட்டனர்.

'நீங்கள் அனுப்பிய டெம்போவில் சீர்வரிசை தட்டை வைத்துவிட்டு, நாங்கள், 'ப்ரீ'யாக நடந்து வந்தோம்...' என்று கூற, 'நாங்கள் எந்த டெம்போவும் அனுப்பவில்லையே...' என்றனர், மாப்பிள்ளை வீட்டார்.

டெம்போக்காரன், 21 தட்டு சீர்வரிசையுடன் மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர், பெண் வீட்டார். டெம்போ எண்ணையும் யாரும் கவனிக்காததால், எதுவும் செய்ய இயலாமல் போனது. அதன்பின், அவசர அவசரமாக, வேறு சீர்வரிசை தட்டுகள் தயார் செய்தது, வேறு விஷயம்.

ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்!

மகாலட்சுமி கோபி, சென்னை.

கனிவுடன் உதவலாமே!

சமீபத்தில், வங்கி கிளை ஒன்றில், பணம் எடுக்க சென்றபோது, முதியவர் ஒருவர், வங்கி கவுன்டரில் உள்ள ஊழியரிடம், கோவை, குறிச்சி கிளையின் தொலைபேசி எண் அல்லது மொபைல் போன் எண் வேண்டுமென கேட்டார்.

அந்த பெண் ஊழியர், சரியான முறையில் பதில் தராமல், 'எனக்கு தெரியாது...' என்று சொல்லி விட்டார். உடனே அந்த பெரியவர், 'ஏம்மா, உங்களது வங்கி கிளை எண் தெரியாது என்று சொல்கிறீர்களே...' என்று கேட்டார்.

அந்த பெண் சற்று கோபமாக, 'தெரியாது. வேண்டுமென்றால், 'இன்டர்நெட்'டில் பாருங்கள்...' என்று கூறினார். 'அம்மா, 'நெட்'டில் பார்த்து, அதிலுள்ள இரண்டு நம்பருக்கு போன் செய்த போது, உபயோகத்தில் இல்லை என்று பதில் வருகிறது. அதனால் தான், உங்களிடம் கேட்டேன்...' என்று பரிதாபமாக கூறினார்.

இன்றைய காலகட்டத்தில், பிரதமர், முதல்வரின் போன் எண்களையே, பொது வெளியில், மக்கள் பயன்பாட்டிற்கு தெரிவிக்கும்போது, வங்கி ஊழியர், உதவியிருக்கலாம். மேலும், உபயோகமில்லாத தொலைபேசி எண்களை நீக்கிவிட்டு, பயன்பாட்டில் உள்ள எண்களை, 'நெட்'டில் பதிவு செய்யலாமே!

எம். சம்பத்குமார், உடுமலைப்பேட்டை.

திறமையை காட்டுங்கள்!

'இ - சேவை' மையம் வைத்திருக்கும் இளைஞர் ஒருவர், நன்கு, 'மிமிக்ரி' செய்வார்.

அவரது சேவை மையத்தின் வாசலில், 'இங்கே வியாபாரம் தொடர்பான விளம்பரம், 'ரெக்கார்டு' செய்து தரப்படும்...' என, 'போர்டு' இருந்ததை பார்த்து, அவரிடம் விசாரித்தேன்.

'ஊருக்குள், டூ வீலரில் காய்கறி, மீன், கோலப்பொடி என, பலவகையான வியாபாரம் செய்வோருக்கு, 'ரெக்கார்டு' செய்து தருகிறேன். குறிப்பாக, அவர்கள் விற்பனை செய்யப்படும் பொருளின் தரம் மற்றும் பயன் போன்றவைகளை, ஆண் மற்றும் பெண் குரலில் பதிவு செய்ய, குறிப்பிட்ட தொகை வாங்குவேன்.

'மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், பொருட்கள் வாங்கியதும், 'வாட்ஸ் ஆப்'ல் தகவல் தருவர்; உடனே, 'ரெக்கார்டு' செய்து கொடுத்து விடுவேன்.

'குறிப்பாக, காய்கறி மற்றும் மீன் வியாபாரிகளுக்கு தினசரி வித்தியாசமாக, 'ரெக்கார்டு' செய்து தருவதால், வியாபாரம் நன்கு நடப்பதாக கூறுகின்றனர்...' என்றார். அவரது வித்தியாசமான முயற்சி மற்றும் திறமையை எண்ணி வியந்தேன்.

நம்மிடம் இருக்கும் தனித்துவமான திறமைகளை வெளி கொண்டு வந்தாலே, நாம் முன்னேறலாம் என்பதை, அந்த இளைஞர் மூலம் தெரிந்து கொண்டேன்.

ப.சிதம்பரமணி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us