தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டே- ஜீரோ!

டே- ஜீரோ!

டே- ஜீரோ!


PUBLISHED ON : ஏப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகியவற்றில், மனிதன் வாழும் நிலப்பகுதியை அடுத்து நீரே முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோடை காலமான தற்சமயத்தில், நீரின் முக்கியத்துவத்தையும், அதை எப்படி முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதை, ஏற்கனவே உலகை பாதித்த நிகழ்வுகளைக் கொண்டு எச்சரிக்கை கட்டுரை இது:

நீரின் முக்கியர்த்துவதை உணர்த்த, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தபடி, ஆண்டு தோறும் மார்ச் 22ம் நாள், உலகெங்கும், உலக தண்ணீர் தினம் கொண்டாடப் படுகிறது.

நீரின்றி அமையாது உலகு, சிறுதுளி பெரு வெள்ளம் - இவை வார்த்தையோடு நின்று விடுகிறது. மாறி வரும் காலநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல், காடுகள் அழிப்பு, மனித இனத்தின் கவனக்குறைவு ஆகிய பல்வேறு காரணிகளால், பூமியின் நீர்நிலைகள் வற்றி வருகின்றன.

உலகம் நீரின்றி எவ்வளவு துாரம் அழிவை நோக்கி சென்றுள்ளது என்பதை, 'டே ஜீரோ' நிகழ்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

'டே ஜீரோ' என்பது, ஒரு நகரத்தின் முழு நீரும் வற்றிய நிலையில், ஒரு குவளை குடிநீருக்காக மக்கள் வரிசையில் நின்று, ஒரு குறிப்பிட்ட அளவு நீரை அரசிடம் பெற்றுக் கொள்வதாகும்.

இந்தியா, பிரேசில், சீனா இன்னும் பிற நாடுகள் இந்த, 'டே ஜீரோ' நிலைக்கு தள்ளப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலையை, 2016 முதல் 2018 வரை, உலகின் முதல், முழுவதும் நீர் வற்றிய இடமாக, தெற்கு ஆப்ரிக்காவின் கேப்டவுன் மாகாணம் எதிர்கொண்டது. இதனால், 40 லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கடந்த, 2015ம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட குறைந்த மழைப்பொழிவின் காரணமாகவும், நகர மயமாக்கல், முறையான நீர் மேலாண்மை இல்லாமை, பருவமழை பொய்த்தல், நீர் சேமிப்பு மற்றும் சிக்கனம் இல்லாமையே, கேப்டவுன் நகரம், 'டே ஜீரோ' நிலையை அடைய காரணம்.

கேப்டவுனில், 1995ன், மக்கள் தொகை, 2015ல், இரண்டு மடங்காக பெருகியது. ஆனால், மக்கள் தொகைக்கு தகுந்தவாறு நீர் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் சட்டம் அரசால் இயற்றப்படவில்லை.

முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், ஆப்ரிக்காவின், தீவாட்டர்ஸ்க்ளோவ்ப் அணை, வறண்டது. 2017ன் பிற்பகுதியில், அணையின் நீர்மட்டம், 10 சதவீதத்திற்கு கீழ் சென்று விட்டதும், 'டே ஜீரோ' அவசர கால நீர் பற்றாக்குறையை அறிவித்தது, அரசு. அப்போது, பல்வேறு விதிமுறைகளை மக்களுக்கு விதித்தது.



அவை முறையே...


* வீட்டிலும், வெளிப்புறங்களில் தேவையில்லாமல் நீரை பயன்படுத்த கூடாது

* ஏற்கனவே உபயோகித்த கழிவு நீரையே கழிப்பறைக்கு பயன்படுத்த வேண்டும்

* தனி மனிதனுக்கு, ஒரு நாளைக்கு, 25 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்படும்.

இதுபோன்று மேலும் பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது, அரசு.

இதனால், 37 ஆயிரத்துக்கும் மேலானோர், வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர். விவசாயம், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

இதே நிலை நமக்கும் ஏற்படாமல் இருக்க, அரசும், பொதுமக்களும், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே, அடுத்த தலைமுறைக்கும் நாம் நீர்மேலாண்மையின் முக்கியத்துவத்தை கொண்டு செல்லலாம்.

அரசால் ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகள்...

* எதிர்கால மக்கள் தொகை மற்றும் நகர மயமாக்கல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீர்மேலாண்மை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்

* நீர்நிலைகளில் உண்டான ஆக்கிரமிப்புகளை அகற்றி, தக்க பாதுகாப்பு வேலிகளை அமைத்து, தனியார் மற்றும் அரசு அமைப்புகளின் மூலம் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

* கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும்

* நீர்நிலைகளை பாதுகாப்பது பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

* தொழிற்சாலை கழிவுநீர், நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க தக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* நீரை சேமிக்க போதிய அணைகள் கட்ட வேண்டும்

* அனைவருக்கும் முறையான நீர் பங்கீடு குறித்து ஆய்வு செய்து, அமல்படுத்த வேண்டும்

* அனைத்து இடங்களிலும், மழைநீர் சேமிப்பை உறுதிப்படுத்த வேண்டும்

* விவசாயத்திற்காக கொடுக்கப்படும் நீரை, நல்ல முறையில் உபயோகப்படுத்த செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்

* பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில், நீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை...

* நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பில், பொது மக்கள், அரசுடன் இணைந்து சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்

* வீடுகளில் அன்றாட உபயோகத்திற்கு நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

* கோடை காலங்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது

* மழைக் காலங்களில், மழை நீரை மழைநீர்த் தொட்டிகளில் சேமித்து வைத்து, நீர் பற்றாக்குறை காலங்களில் உபயோகப் படுத்தலாம்

* முடிந்தவரை துணிகளை கைகளால் துவைப்பது நல்லது

* நீர் அதிகமாக செலவாகும் மேற்கத்திய கழிப்பறைகளை விடுத்து, இந்திய கழிப்பறைகளை பயன்படுத்த முடிந்தவரை பழகிக்கொள்ள வேண்டும்

* வீடுகளிலும், பொது இடங்களிலும் உள்ள குடிநீர் குழாய்களில் நீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ளலாம்

* வெளி இடங்களில் பாட்டில் குடிநீரை உபயோகப் படுதாமலும், அதை வீணாக்காமலும் இருப்பது நல்லது

* குப்பை மற்றும் மருத்துவ கழிவுகளை, நீர் நிலைகளில் கொட்டாமல் இருப்பது நன்மை பயக்கும்.

நீருக்கு ஆதாரம் மழை. அந்த மழையே நிலத்தடி நீருக்கான ஆதாரமாக விளங்குகிறது. நிலத்தடி நீரை சேமிக்க, மரம் நடுதல், கிணறு, ஆறு, ஏரி, குளம், குட்டையை துார் வாரி பாதுகாத்தல் ஆகியவை, பொதுமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை.

அரசு எவ்வளவு தான் சட்டம் போட்டாலும், பொதுமக்களாகிய நாமும், அடுத்த தலைமுறைக்கும் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க, நீர் சேமிப்பின் அவசியம், நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, நீர் வீணாவதை தடுத்தல் ஆகியவற்றில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், கேப்டவுன் எதிர்கொண்ட, 'டே ஜீரோ' நிலையை நாமும் அடைவோம்.

பா. கவுசல்யா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us