தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

ஐயாயிரம் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட, 'கார்வான்' ரேடியோ ஒன்றை, லென்ஸ் மாமாவுக்கு பரிசளித்திருந்தார், ஆசிரியர். அன்று மதிய இடைவேளையில் ஓய்வாக இருந்தபோது, அந்த ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.

சிவாஜி நடித்த, உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற, 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே, நண்பனே...' என்ற பாடல் ஒலிக்க, 'அருமையான பாட்டுப்பா மணி. கண்ணதாசன் என்னமா எழுதியிருக்கார் தெரியுமா?' என்று சிலாகித்தார், மாமா.

அப்போது, உள்ளே வந்த சினிமா பொன்னையாவும், ரேடியோ அருகில் அமர்ந்து, அந்த பாடலை ரசித்து கேட்க ஆரம்பித்தார்.

மேட்டர் கொடுக்க வந்த எழுத்தாளர் ஒருவர், பாடல் முடியும் வரை அமைதியாக இருந்தவர், 'மூன்று வித நண்பர்கள் பற்றி தெரியுமா?' என்று கேட்டார்.

கடுப்பான மாமா, 'ஓய்... திண்ணை நாராயணன் மாதிரி நீரும் தகவல் சொல்ல வந்துட்டீரா...' என்று அலுத்தபடி, ரேடியோ பெட்டியை துாக்கிக் கொண்டு, வேறு இடத்துக்கு சென்று விட்டார்.

அந்த மூன்று நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், எழுத்தாள நண்பரைப் பார்க்க, அவர் சொல்ல ஆரம்பித்தார்:

புத்தி கூர்மையுள்ள மன்னர் ஒருவர் இருந்தார்.

யாருக்காவது சந்தேகம் வந்தா, மன்னர்கிட்ட வந்து கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க. அதுமாதிரி கேட்டுத் தெரிஞ்சுக்கிறதுக்காக, ஒரு பெரியவர் வந்தார். அவர் கையில் மூன்று பொம்மைகள் இருந்தன. மூன்றும் ஒரே மாதிரியான பொம்மைகள், கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியல.

'ஏது இந்த பொம்மை?'ன்னு கேட்டார், மன்னர்.

'பொம்மை செய்யும் ஒருவரிடம், மூன்று பொம்மைகள் செஞ்சு கொடுக்கும்படி கேட்டேன். அவன் தான் இதை செஞ்சு கொடுத்தான். ஆனா, அதுல ஒரு சிக்கல்...' என்றார், பெரியவர்.

'என்ன பிரச்னை...'ன்னு கேட்டார், மன்னர்.

'நான், அவன்கிட்ட கேட்டது, மூன்று விதமான பொம்மைகள். அவன் என்னடான்னா, மூன்றையும் ஒரே மாதிரியா செஞ்சுக் கொடுத்துட்டான்...' என்றார்.

'அவன்கிட்ட கேட்கிறதுதானே...'ன்னார், மன்னர்.

'கேட்டேன், 'இந்த மூன்றும் ஒரே மாதிரி பொம்மை அல்ல. மூன்றும் மூன்று விதம், ஒண்ணுக்கொண்ணு வித்தியாசம் இருக்கு. இந்த மூன்று பொம்மையும், மூன்று விதமான நண்பர்களுக்கு உதாரணங்கள்'ன்னு சொன்னான். எனக்கு ஒண்ணும் புரியல, அதான் உங்ககிட்ட வந்தேன்...' என்றார்.

'சரி, அந்த பொம்மைகளை இப்படி கொடுங்க...'ன்னு வாங்கிக்கிட்டு உள்ளே போய், கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்தார், மன்னர்.

'அவன் சொன்னது சரிதான். மூன்றும் மூன்று விதம் தான். இதோ இருக்கே முதல் பொம்மை, இது உத்தமமான நண்பனுக்கு உதாரணம். இரண்டாவது பொம்மை, மத்தியமான நண்பனுக்கு உதாரணம். மூன்றாவது பொம்மை இருக்கே, இது மோசமான நண்பனுக்கு உதாரணம். இதைச் செஞ்சவன் உண்மையிலேயே பெரிய அறிவாளி தான்...' என்றார்.

வந்தவருக்கு ஒண்ணும் புரியல. பார்த்தா ஒண்ணும் வித்தியாசம் தெரியலையேன்னு அவர் குழம்பிப் போய் நின்றார்.

அந்த மூன்று பொம்மைகளையும் எடுத்து, ஒரு மேடை மீது வச்சார், மன்னர். ஒரு மெல்லிய கம்பியை எடுத்து, முதல் பொம்மை காதுல விட்டார். கொஞ்ச துாரம் உள்ளே போய் அப்படியே நின்னுட்டுது.

அப்புறம், இரண்டாவது பொம்மை காதுல கம்பியை விட்டார். அது, வாய் வழியா வெளியே வந்தது. மூன்றாவது பொம்மை காதுல கம்பியை செலுத்தினார். அது நேரா இன்னொரு காது வழியா வெளியில வந்தது.

'முதல் வகை பொம்மை மாதிரியான, நண்பர்கள் குணம் என்ன தெரியுமா?

'நம் கஷ்டத்தை அவங்ககிட்ட சொன்னா, பேசாம கேட்டுக்குவாங்க. வெளியில அதை யாருகிட்டயும் சொல்ல மாட்டாங்க; வெளியில தெரியாம உதவி செய்வாங்க. செஞ்சுட்டு, அதை நான் தான் செஞ்சேன்னு சொல்லிக்கிட்டிருக்க மாட்டாங்க. அதுதான் கம்பி, ஒரு காது வழியா போயி உள்ளேயே நின்னுது.

'இரண்டாவது பொம்மையில கம்பி ஒரு காது வழியா போய், வாய் வழியா வெளியே வருது. இது மாதிரியான நண்பர்கள்கிட்ட நம்ம கஷ்டத்தை சொன்னா, அதை அவங்க நாலு பேரிடம் சொல்லி, நமக்காக உதவி கேட்பாங்க; நமக்குன்னு கேட்டு வாங்கி நமக்கு கொடுப்பாங்க. இவர்கள் மத்தியமான நண்பர்கள்.

'மூன்றாவது பொம்மையில, ஒரு காது வழியா செலுத்தற கம்பி, இன்னொரு காது வழியா வெளியில வந்துடுது. இது மாதிரியான நண்பர்கள்கிட்ட நம்ம கஷ்டத்தை சொன்னா, காது குடுத்து கேட்கறது மாதிரி நடிப்பான். அப்படியே இன்னொரு காது வழியா வெளியே விட்டுடுவான்; அதைப்பற்றி கவலைப்பட மாட்டான்.

'இதுதான் இந்த பொம்மைகளுக்குள்ள இருக்கிற வித்தியாசம்...' என்று விளக்கம் கொடுத்தார், மன்னர்.

எழுத்தாள நண்பர் கூறியதை அசை போட்டபடி, லென்ஸ் மாமாவை சமாதானப்படுத்தி அழைத்து வர சென்றேன்.



சுய முன்னேற்ற நுால் ஒன்றில் படித்தது:

வேலைக்கு போகிற சிலரை விசாரிச்சு பாருங்க, 'ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்ன்னு இருக்கு...'ன்னு சொல்லி அலுத்துப்பாங்க.

'ஒருத்தனுக்கு பிடித்தமான பொழுதுபோக்கே, அவனுடைய தொழிலா இருந்துட்டுதுன்னா... அவனை மாதிரி கொடுத்து வச்சவன் வேற யாரும் கிடையாது...' என்று கூறியுள்ளார், அறிஞர் பெர்னாட்ஷா.

நீங்க ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சரி... தனியார் நிறுவனத்துல வேலை பார்த்தாலும் சரி... ஒரு முதலாளிகிட்ட வேலை பார்த்தாலும் சரி... உங்கள் துறையில வெற்றிகரமா இருக்கிற சிலரை பார்த்து, 'உங்க வெற்றியின் ரகசியம் என்ன...'ன்னு கேட்டுப் பாருங்க.

அனேகமா எல்லாரும் சொல்ற பதில் என்ன தெரியுமா?

நான் செய்யிற வேலை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்கறது தான்.

சரி, அது மாதிரி மற்றவங்களாலேயும் வெற்றிகரமா செயல்பட முடியுமா?

முடியும்ங்கிறாங்க நிபுணர்கள்.

முதல்ல, உங்க மேலதிகாரி அல்லது முதலாளி எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி, உங்க வேலை இருக்கா, இல்லையாங்கிறதை பாருங்க. அப்படி இல்லேன்னா அதை சரி பண்ணுங்க.

அடுத்தபடியா, உங்களுக்கு மேல பணிபுரிகிறவர்கள், உங்களுக்கு கீழே பணிபுரிகிறவர்கள் எல்லார்கிட்டயும், உங்க பழக்க வழக்கம் நல்லபடியா இருக்கான்னு பாருங்க. அப்படி இல்லைன்னா அதையும் சரி பண்ணுங்க.

உங்க பேர்ல மற்றவங்களுக்கு நம்பிக்கை ஏற்படணும். நீங்க எந்த முடிவு எடுத்தாலும், அது நல்ல முடிவா இருக்கும்ங்கிற எண்ணம், மத்தவங்களுக்கு வரணும். அது மாதிரி நீங்க நடந்துக்கணும்.

உங்க உடம்பும், மனசும் நல்லா இருக்கணும். இது ரெண்டும் ஆரோக்கியமா, அழகா இருக்கணும். மொத்தத்தில், உங்க தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

உங்களுடைய வேலை சூழலை கட்டுப்பாட்டில் வெச்சுக்கிறதுக்கு, இதெல்லாம் சிறந்த வழிகள்.

அருமையான யோசனைகளா இருக்குதானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us