தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சபாஷ் முயற்சி!

எங்கள் வீட்டில் திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. ஆனால், மற்ற வீடுகளில் மின்சாரம் இருந்தது. பழுதை கண்டுபிடித்து சரி செய்ய, எலக்ட்ரீஷியன் தான் வரவேண்டும்.

நாங்கள் அந்த பகுதிக்கு புதிது என்பதால், அருகில் உள்ளவரிடம் விசாரித்தோம்.

ஒரு போன் எண் தந்து, 'ஊர், நுால் நிலையத்தில், பதிவேடு ஒன்று இருக்கிறது. அதில் உங்கள் பெயர், முகவரி எழுதி, அங்கிருந்து போன் செய்யுங்கள். பத்து நிமிடத்தில், ஒருவர் வந்து சரி செய்வார்...' என்றார்.

'இது என்ன புதுசா இருக்கே...' என நினைத்து, அவரிடம், அது குறித்து கேட்டேன்.

'அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஒன்று கூடி, அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர். மின்சாரம், பிளம்பிங், டூ வீலர் மெக்கானிக், தோட்ட பராமரிப்பு என, பல்வேறு பணி செய்பவர்களை, இந்த அமைப்பில் சேர்த்துள்ளனர்.

'வீட்டில் சும்மா இருந்தால், உடல் மற்றும் மனநலம் கெட்டுப் போகும். மேலும், மற்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம் என எண்ணி, இந்த அமைப்பை உருவாக்கி, இதுபோன்ற சேவையை செய்து வருகின்றனர்.

'சுமார், 600 வீடுகள் இருக்கும் இப்பகுதியில், அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்காக, கட்டாய கட்டணம் எதுவும் கிடையாது. மேலும், இவர்கள் பணி செய்த விபரம், நுால் நிலைய பதிவேட்டில் பதியப்பட்டிருப்பதால், திருவிழாவின்போது, அவர்களை அழைத்து கவுரவித்து, ஊர் சார்பாக அன்பளிப்பு தொகையை தருவர்...' என்றார்.

நான் போன் செய்த, பத்தாவது நிமிடம், ஒரு நபர் வந்து, பழுதை சரி செய்து சென்றார்.

அவசர வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிப்போருக்கு உதவும், இவர்களது சேவையை பாராட்டினேன்.

இதுபோன்ற அமைப்பை, மற்ற ஊர்களில் இருக்கும் தொழில் தெரிந்த நபர்களும் துவங்கலாமே!

ம. காவியா, கோவை.

'ஹெல்மெட்' வாங்க போகிறீர்களா?

சமீபத்தில், 'ஹெல்மெட்' வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். என் தலைக்கு பொருந்தும், 'ஹெல்மெட்'டை தேர்ந்தெடுத்து, என்னுடைய ரத்த வகையை கேட்டார், கடையின் முதலாளி.

'எதற்கு...' என கேட்டேன்.

'என்னிடம், 'ஹெல்மெட்' வாங்கினால், 'ஸ்டிக்கரில்' அவரது ரத்த வகையைக் குறிப்பிட்டு, அதில் ஒட்டி விடுவேன்.

'இன்னொரு ஸ்டிக்கரில், குடும்ப உறுப்பினர் ரத்த வகையும் எழுதி ஒட்டி விடுவேன். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த தகவல் உதவும்...' என்றார்.

அவரது அக்கறை, என்னை கவர்ந்தது.

மற்ற, 'ஹெல்மெட்' கடைக்காரர்களும் இதை பின்பற்றினால் மிகவும் நல்லது. அல்லது நீங்களும் இதுபோன்ற தகவல்கள் அடங்கிய, 'ஸ்டிக்கரை' தயார் செய்து, 'ஹெல்மெட்'டில் ஒட்டி வைக்கலாம்.

பி. ஸ்ரீநிவாசன், சென்னை.

மாம்பழ பிரியர்களே... உஷார்!

சமீபத்தில், எங்கள் வீட்டிற்கு, உறவினரின் குழந்தைகள் வந்திருந்தனர். மதிய உணவுக்கு பின், மாம்பழத்தை ஒரு கட்டு கட்டினர். குழந்தைகள் தானே, சாப்பிடட்டும் என்று நாங்களும் கண்டு கொள்ளவில்லை.

மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீருக்கு பதில், 'கூல் டிரிங்ஸ்' அருந்தினர். சிறிது நேரத்தில், வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்தனர். அருகிலிருந்த டாக்டரை வரவழைத்து, சிகிச்சை அளித்தோம்.

'மாம்பழம் சாப்பிட்ட பின், உடனடியாக குளிர்பானம் அருந்தக் கூடாது. மாம்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலமும், குளிர்பானத்தில் உள்ள ஆர்கானிக் அமிலமும் இணையும்போது, அது விஷமாகி விடும். நல்லவேளை, குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை...' என்று கூறி, முதல் உதவி அளித்தார், டாக்டர்.

இது மற்றவர்களுக்கும் ஒரு பாடம் தான். மாம்பழம் சாப்பிட்ட பிறகு உடனடியாக குளிர்பானம் குடிப்பதை தவிர்க்கவும். தேவைப்பட்டால் சாதாரண தண்ணீர் குடிக்கலாம்.

எம்.ஏ,நிவேதா, திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us