தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (1)

நான் வந்த பாதை! (1)

நான் வந்த பாதை! (1)


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

விபரமறிந்த நாள் முதல், என் நினைவுக்கு வந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான், இத்தொடர். இதை, வரிசையாகத் தேதியிட்டு எழுதாவிட்டாலும், பிறப்பு, வளர்ப்பு, பள்ளிப் படிப்பு, நாடகக் கலையில் ஈடுபாடு, சினிமா மற்றும் அரசியல் என, என் வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் இந்தத் தொகுப்பு அமையும் என, கருதுகிறேன்.

-எஸ்.எஸ்.ராஜேந்திரன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி கிராமம் தான், என் சொந்த ஊர். என் அப்பா, ஏ.சூரியநாராயண தேவர். பெரும் வசதியுள்ள விவசாயக் குடும்பம், எங்களது. சேடப்பட்டி ஆரம்பப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரையும், மதுரை, பசுமலையில் மேற்கொண்டு படித்தார், அப்பா. அப்போது, அவருடன் படித்தவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விட, வயதில் மூத்தவர், அப்பா. இருவரும் அண்ணன், தம்பியாகவே இணைந்து, பழகி வந்தனர்.

படித்து முடித்து, திருமங்கலம் உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்த அப்பா, ஆதிலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். என் பெற்றோருக்கு, முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். இருந்தாலும், நல்ல அறிவு படைத்தவள், புத்திசாலிக் குழந்தை.

அக்காலத்தில், வாரத்தில் சனிக்கிழமை மதியம் வரை, அப்பாவுக்கு பள்ளியில் வேலை இருக்கும். பிறகு சேடப்பட்டிக்கு வந்து விடுவார். அன்றும், ஞாயிற்றுக்கிழமையும் ஊரில் இருந்துவிட்டு, திங்கட் கிழமை காலை, திருமங்கலம் சென்று விடுவார்.

இரண்டாவதாக கர்ப்பம் தரித்திருந்த அம்மா, தனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக, மருத்துவச்சியிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவின் வயிற்றைத் தடவி பரிசோதித்து விட்டு, 'இது இரட்டைக் குழந்தையாக தான் இருக்கும் போலிருக்கு. அப்படியே குழந்தைகள் பிறந்தாலும், தாயார் உயிர் பிழைப்பது சந்தேகம் தான்...' என, முடிவாக கூறிவிட்டாள், மருத்துவச்சி.

இதனால், என் பாட்டிக்கு பயம் வந்துவிட்டது.

'குழந்தைகள் போனாலும் போகட்டும், தாய் பிழைத்தால் போதும். அடுத்தபடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம். நீ ஏதாவது மருந்து கொடுத்து கர்ப்பத்தைக் கலைத்து விடு...' என்று மருத்துவச்சியிடம் சொல்லியிருக்கிறார், பாட்டி.

'வரும் வெள்ளிக்கிழமை நல்ல நாள். அன்று மாலையே இந்த வேலையை செய்து விடலாம்...' என சொல்லி, சென்று விட்டாள், மருத்துவச்சி.

வழக்கமாக, திருமங்கலத்திலிருந்து சனிக்கிழமை மதியத்திற்கு மேல் ஊருக்கு வரும் அப்பா, உடல்நிலை சரியில்லையென்று, விடுப்பு எடுத்து, வெள்ளிக்கிழமை காலையிலேயே சேடப்பட்டிக்கு வந்து விட்டார். ஆகவே, குழந்தையைக் கலைக்க மருந்து கொண்டு வந்த மருத்துவச்சியை கண்டித்து, திருப்பி அனுப்பிவிட்டார்.

திருமங்கலத்திலிருந்து ஒரு டாக்டரை அழைத்து வந்து காட்டியிருக்கிறார், அப்பா.

அவரோ நன்கு பரிசோதித்து, 'ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. சுகப்பிரசவமே நடக்கும்...' என, ஆறுதல் கூறிச் சென்றுள்ளார்.

சில நாட்கள் கழித்து கொழு கொழுவென்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தான், நான்.

என் அப்பா மட்டும் தக்க சமயத்தில், முன்கூட்டி வெள்ளிக்கிழமை காலையில் ஊருக்கு வராமல் இருந்திருந்தால்...

நான் வளர்ந்து பெரியவனாகி, சினிமா படங்களில் நடிப்பதைப் பார்த்து என் பாட்டி, 'உன்னைக் கொல்ல இருந்தேனடா இந்தப் பாவி...' என, சொல்லிச் சொல்லி அழுவார்.

மதுரை மாவட்டம் மேற்கு பகுதிகளுக்கு பொதுக்கூட்டம் அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு பசும்பொன் தேவர் வந்தால், சேடப்பட்டிக்கு வந்து, எங்கள் குடும்பத்தினரை சந்தித்து, நலம் விசாரிக்க தவறுவதில்லை.

அப்படி ஒரு சமயம் வந்தபோது, குழந்தையாக இருந்த என்னை துாக்கி, தன் மடியில் வைத்துக் கொஞ்சி, 'இவனுக்கு என்ன பெயர்?' என, கேட்டுள்ளார்.

'இன்னும் பெயர் சூட்டவில்லை, முத்து. நீயே அவனுக்கு ஒரு நல்ல பெயர் வைத்து விடு...' என்று சொல்லியிருக்கிறார், அப்பா.

தேவருக்கு ஜாதகம் பார்க்கும் ஆற்றலும் உண்டு.

'இவன், பிரபவ வருடம், மார்கழி 17, ஜனவரி 1, 1928ல் கன்னி ராசி, உத்திர நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான்...' என, கணித்தவர், 'தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனுக்கும் இதே ஜாதகம் தான். அவனை போலவே இவனும், தரணியெங்கும் ஏதாவது ஒரு துறையில் பெரும் புகழ் பெறுவான்.

'அவன், சோழ நாட்டைச் சேர்ந்தவன். இவன், பாண்டிய நாட்டிலே பிறந்திருக்கிறான். ஆகவே, இக்குழந்தைக்கு, ராஜேந்திர பாண்டியன் என பெயர் சூட்டுகிறேன்...' என்று வாழ்த்தியுள்ளார், முத்துராமலிங்க தேவர்.

நான் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார், அம்மா. அக்குழந்தையை செல்லமாக அனைவரும், பாப்பா பாப்பா என்று அழைப்பர். பிறகு அந்த பெயரே, பாப்பம்மாவாக மாறி விட்டது. நானும், என் தங்கையும், சேடப்பட்டியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் படிக்க ஆரம்பித்தோம்.

எங்கள் கிராமத்தில், ஒரு தீபாவளி அன்று நானும், என் பால்ய நண்பர்களும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்தோம். அங்கே, தெருவில் ஒரு கழுதை நின்று கொண்டிருந்தது.

'கழுதையின் வாலில் பட்டாசுகளைக் கட்டி வெடிக்க விட்டால், எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்...' என, நான் கூற, என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களும் ஒப்புக் கொண்டனர்.

அந்தக் கழுதையை, அசைய விடாமல், கால்களை பிடித்து அழுத்திக் கொண்டனர், நண்பர்கள். அந்த கழுதையின் வாலில், பட்டாசு சரம் ஒன்றை கச்சிதமாக கட்டி, நெருப்பை பற்ற வைத்தேன், நான்.

பட்டாசுகள் படபடவென வெடிக்கத் துவங்கின. கழுதை மிரண்டு போய், காள் காளென கத்தியபடி ஓடியது.

இதைப் பார்த்த கழுதைக்கு சொந்தக்காரன் என்ன செய்தான் தெரியுமா?

- தொடரும் எஸ். எஸ். ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us