PUBLISHED ON : மே 14, 2023

வலிய சென்று வலையில் விழலாமா?
போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும், நண்பர் மகனை பார்த்து வர, ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன்.
அங்கிருந்த கம்ப்யூட்டரில், அவன் வயதொத்த ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தில் இருந்து, அவளுடைய தலையை மட்டும் வெட்டியெடுத்து, வெவ்வேறு இளம்பெண்களின் உடல்களில் ஒட்டிக் கொண்டிருந்தான். இதை கவனித்து, அதுபற்றி அவனிடம் விசாரித்தேன்.
'எனக்கு தெரிந்த பெண், அவளுடைய புகைப்படங்களை அடிக்கடி அனுப்பி, 'மார்பிங்' செய்து தருமாறு கேட்பாள். பின், அப்புகைப்படங்களை, 'வாட்ஸ்- ஆப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டா'வில் பயன்படுத்திக் கொள்வாள். அதற்காக அவளிடம் கட்டணம் பெற்றுக் கொள்வேன்...' என கூறியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.
நமக்கு நெருக்கமானவர்களில், நல்லவர்கள் என நம்புபவர்களிலேயே சிலர், எப்போ, எப்படி மாறுவர் என்று தெரியாது. நிலைமை இப்படி இருக்க, ஒரு பெண், தனக்கு தெரிந்தவன் என்ற வகையில், அவனிடம் தன் புகைப்படங்களைத் தந்து, 'மார்பிங்' செய்து தர கோருவது, வலிய சென்று, வலையில் வீழ்வது ஆகாதா?
நாளையே அவன், பணத்தாசையில் மோசமானவனாக மாறி, 'பிளாக்-மெயில்' செய்தால், பெண்ணின் நிலை என்னாகும்!
நண்பரின் மகனுக்கு அறிவுரை கூறியதோடு, நண்பரிடமும் எச்சரிக்கை செய்து வந்தேன்.
-சி.அருள்மொழி, கோவை.
இப்படியும் ஒரு வேலை வாய்ப்பு!
நான் காவல்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்று, தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்கிறேன்.
'நீங்கள், எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த, 'செக்யூரிட்டி' ஊழியர்கள் யாராவது இருந்தால், என் வீட்டுக்கு, நான்கு நாட்களுக்கு, இரவு பாதுகாப்பு தரவேண்டும். அதற்கு உண்டான சம்பளம் கொடுத்து விடுகிறேன்...' என்றார், நிறுவன பணியாளர் ஒருவர்.
உடனே, எனக்கு தெரிந்த உறவினரிடம், 'வீட்டை பார்த்துக் கொள்ள, இரவு பணிக்கு மட்டும் ஆள் வேண்டும்...' என்றேன்.
படித்து, வேலையில்லாமல் இருக்கும் இளைஞனை ஏற்பாடு செய்தார். நான்கு நாட்கள் இரவில் வீட்டை பாதுகாத்தவருக்கு, 2,400 ரூபாய் கிடைத்தது; வேலையில்லா அந்த இளைஞனுக்கு பேருதவியாக இருந்தது.
இந்த தகவல் அக்கம்பக்கம் கசிய, பல இடங்களில் இருந்தும், 'நாங்களும் அடிக்கடி ஊருக்கு செல்கிறோம். இரவில் திருட்டு நடக்காமல், வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும்...' என்றனர்.
இச்செய்தி, பல இடங்களுக்கு பரவி, வெளியூர் செல்வோர், என்னிடம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.
படித்து, வேலையில்லா இளைஞர்களுக்கு, சிறு வருமானம் என்று துவங்கி, இன்று இரவு நேரத்தில் வீட்டை மட்டும் பாதுகாக்க, இளைஞர்கள் குழுவை உருவாக்கியுள்ளேன். 150 இளைஞர்களை, 'வாட்ஸ் குரூப்'பில் இணைத்து, வெளியூர் செல்பவர்களின் வீடுகளுக்கு அவர்களை அனுப்பி, இரவு பாதுகாப்பு வழங்கி வருகிறேன்.
இதனால், திருட்டும் குறைந்துள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கும் வருமானம் கிடைத்து வருகிறது.
உங்கள் பகுதியிலும் இது போன்று செய்தால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும், திருட்டும் குறையுமே!
- தே.மாதவராஜ், கோவை.
புதுவித திருட்டு... உஷார்!
என்னுடன் பணிபுரியும் நண்பர், வீட்டிலிருந்து, 15 கி.மீ., தொலைவிலுள்ள எங்கள் நிறுவனத்திற்கு, தினமும் அவரின், 'டூ வீலரில்' வருவது வழக்கம்.
சமீபத்தில் ஒருநாள், பணிக்கு வரும் வழியில், சாலை ஓரம் நின்று கை காட்டி, 'டூ வீலரை' நிறுத்த சொல்லியுள்ளார், லாரி கிளீனர்.
என்னவென விசாரிக்க, 'லாரி, 'ஸ்டார்ட்டிங் டிரபிளால்' நின்று விட்டது. என்னுடன் வந்து லாரியை தள்ளிவிட உதவினால் கிளம்பிடும்...' என வேண்டியுள்ளார், கிளீனர்.
சிறு உதவி தானே என, வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு, கிளீனரோடு சென்று லாரியை தள்ளியிருக்கிறார், நண்பர்.
சிறு தொலைவு தள்ளியதும், லாரி கிளம்பி விட, நண்பருக்கு நன்றி கூறி, லாரியில் ஏறி விட்டார், கிளீனர்.
அதன்பின் திரும்பிப் பார்த்த நண்பர், அதிர்ச்சியானார். நிறுத்தியிருந்த, 'டூ வீலரை' காணவில்லை.
லாரியை தள்ளி விட சொல்லி, கவனத்தை திசை திருப்பி, கூட்டணியாக, 'டூ வீலரை' திருடிச் சென்றுள்ளதை, தாமதமாக உணர்ந்திருக்கிறார், நண்பர். இந்த புதுவித திருட்டு சம்பந்தமாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
வாசகர்களே... உஷாராக இல்லையென்றால், திருட்டு மற்றும் மோசடி கும்பல்களிடம் தப்ப இயலாது.
எஸ். விஜயன், கடலுார்.
