PUBLISHED ON : மே 14, 2023

எத்தனையோ சிவாலயங்களில் லிங்க வடிவில், சிவனை தரிசித்திருந்தாலும், வெள்ளை நிறத்தில் சிவலிங்கம் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இதைத் தரிசிக்க வேண்டுமானால், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சோமேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
தற்காலத்தில், ஒருவனுக்கு ஒருத்தி என்ற அளவில் தான், குடும்ப வாழ்க்கை செல்கிறது. அக்காலத்தில், அவ்வாறான கட்டுப்பாடு இல்லை. ஒருவனே பலரை மணப்பது அனுமதிக்கப் பட்டிருந்தது.
இதன்படி, நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரன், தட்சன் என்ற அரசனின், 27 பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். சந்திரனின் அழகு அந்தப் பெண்களைக் கவர, எல்லாருமே அவனை கணவனாக அடைந்ததில் மகிழ்ந்தனர்.
ஆனால், சந்திரன் எல்லார் மீதும் ஒரே மாதிரியான அன்பைக் கொண்டிருக்கவில்லை. கார்த்திகை, ரோகிணி என்பவர்கள் மீது மட்டும் அதிக அன்பைப் பொழிந்தான். இது மற்ற, 25 பேரையும் எரிச்சலடைய செய்தது.
அவர்கள் இதுபற்றி, சிவனிடம் முறையிட்டனர். அழகு என்ற ஒன்று இருக்கும் மமதையில் தானே, சந்திரன் இவ்வாறு செய்கிறான். எனவே, அவனது அழகைக் குலைக்க, அவனுக்கு வெண்குஷ்டம் வருமாறு செய்து விட்டார், சிவன்; சந்திரனின் அகந்தை அழிந்தது.
தவறை உணர்ந்த அவன், அகத்தியரின் ஆலோசனைப்படி, சிவலிங்கம் வடித்து பூஜை செய்தான். சந்திரனை மன்னித்த சிவன், அவனது வெண்குஷ்டத்தை ஏற்று, அவனுக்கு நோய் நிவாரணம் தந்தார். இதனால், இத்தலத்து சிவன், வெள்ளை நிறத்தில் இருக்கிறார்.
மேலும், சந்திரனின் பெயர்களில் ஒன்றான சோமனை தனக்கும் சூட்டி, சோமேஸ்வரர் என, பெயர் பெற்றார். ஒரு குடும்பத்தில் பல உறுப்பினர்கள் இருப்பர். எல்லார் மீதும் சம அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே, இப்புராணக்கதை உணர்த்தும் தத்துவம்.
இங்கு ஒரு தீர்த்தம் அமைத்து, அதில் நீராடுவோருக்கு நோய் நிவாரணம் கிடைக்க வேண்டிக் கொண்டான், சந்திரன். அது, சந்திர தீர்த்தம் எனப்படுகிறது.
ஆனந்தமயமாக இருப்பதால், ஆனந்தவல்லி என பெயர் பெற்றிருக்கிறாள், இங்குள்ள அம்பிகை. நவக்கிரகங்களில் இது சந்திரன் ஸ்தலமாகக் கருதப்படுகிறது.
மருதுபாண்டிய மன்னர்கள் இந்த கோவிலைக் கட்டியதில், ஒரு விசேஷம் உண்டு. அவர்கள், காளையார்கோவில் என்ற ஊரில், சிவாலயம் ஒன்றைக் கட்டினர். மிக உயரமான கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
இக்கோவில் பணிக்கு கற்கள் கொண்டு சென்ற போது, ஒவ்வொரு நடைக்கும் ஒரு கல் வீதம், மானாமதுரையில் இறக்க உத்தரவிடப்பட்டது. அந்தக் கற்களைக் கொண்டு இந்தக் கோவிலை எழுப்பினர். ஐந்து நிலை ராஜகோபுரமும் இக்கோவிலில் உள்ளது.
மதுரை - ராமேஸ்வரம் சாலையில், 46 கி.மீ., துாரத்தில் மானாமதுரை உள்ளது.
தி. செல்லப்பா
