தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்படித்தான் இருக்கணும் பெண்!

என் உறவினர் மகளை, பெண் பார்க்க வந்தனர், மாப்பிள்ளை வீட்டார்.

பெண் பிடித்துப் போக, பையன், அரசு வேலையில் இருப்பதால், 30 சவரன் நகை, பாத்திர பண்டங்கள், பைக், கட்டில், மெத்தை, பீரோ இத்யாதிகள் என, ஒரு பெரிய சீர் வரிசை பட்டியல் போட்டனர்.

உறவினருக்கு ஒரே பெண் என்பதால், எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்தார்.

அத்துடன் நிறுத்தாமல், 'திருமணத்தை பெண் வீட்டாரே நடத்த வேண்டும். மாப்பிள்ளைக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கின்றனர் என்பதால், 'பேச்சுலர் பார்ட்டி'க்கு என, தனியாக இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும்...' என்று, மாப்பிள்ளை வீட்டார் கூற, அனைவரும் அதிர்ந்தோம்.

அதுவரை அமைதியாக இருந்த உறவினர் மகள், பொறுமை இழந்து, 'வரதட்சணை கேட்கறதே தப்பு; அரசு வேலை செய்யிறவர், அடுக்கடுக்கா வரதட்சணை கேட்கறது, நல்லாவா இருக்கு?

'பெண் வீட்டார்கிட்ட, கல்யாண செலவை ஏத்துக்க சொல்றதைப் பார்த்திருக்கேன். இப்படி வாய் கூசாம,'மது பார்ட்டி'க்கு லட்சக் கணக்குல பணம் கேட்கற வரனை, முதல் முறையா இப்ப தான் கேள்விப்படறேன்.

'குடிகார நண்பர்களோட சகவாசம் வச்சிருக்கிறவர், அவர் மட்டும் எப்படி உத்தம சீலரா இருப்பார்... நல்லவேளை, கல்யாணத்துக்கு முன்பே, வரனோட சுயரூபம் தெரிஞ்சுது. எனக்கு, இந்த சம்பந்தத்துல இஷ்டமில்ல...' என்று, மாப்பிள்ளை வீட்டாரிடம் பொரிந்து தள்ளி விட்டாள்.

அவள் பேச்சில் அரண்டு போன மாப்பிள்ளை வீட்டார், 'திமிர் பிடித்தவள்' என்ற பட்டத்தை வழங்கி, கிளம்பிச் சென்றனர்.

ஆனால், நாங்கள், 'புரட்சிப் பெண்' என்ற பட்டத்தை வழங்கி, 'இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்...' என்று, அவளை வாழ்த்தினோம்.

- வி. முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

இப்படியும் சம்பாதிக்கலாமே!

வெளியூரிலிருந்து பணி மாற்றலாகி வந்திருந்த என் தோழிக்கு, வாடகைக்கு வீடு தேவைப்பட்டது. வீட்டு புரோக்கர் மூலம் தேட முடிவெடுத்தோம்.

பக்கத்து வீட்டு பெண்மணியிடம், தரகர் யாராவது இருந்தால் சொல்லுமாறு கூறியதும், ஒரு மொபைல் போன் எண்ணை கொடுத்தார்.

நாங்கள் அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, எதிர்முனையில் ஒரு பெண்மணியின் குரல். விலாசத்தை வாங்கிய பெண்மணி, சிறிது நேரத்தில் நேரில் வருவதாக தெரிவித்தார்.

நேரில் வந்தவரை பார்த்ததும், எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனெனில், அவர், தள்ளுவண்டியில் எங்களுக்கு காய்கறி விற்கும் பெண்மணி.

ஆச்சரியத்துடன், 'நீங்கள் எப்படி இங்கே?' எனக் கேட்டேன்.

'நான் வியாபாரத்திற்கு செல்லும் இடங்களில் இருக்கும் காலியாக உள்ள வீட்டை பற்றிய விபரங்களை கேட்டு, தகவல்களை சேகரிப்பேன். யாராவது என்னிடம், 'வீடு காலி இருக்கிறதா...' என கேட்டால், அந்த வீட்டை காட்டி, நியாயமான கமிஷன் வாங்கிக் கொள்வேன்.

'காலையில், காய்கறி விற்கும் வேலை. மாலையில், யாராவது வீடு கேட்டால், அவர்களை அழைத்துச் சென்று வீட்டை காண்பிப்பேன். இந்த இரு வேலைகளுமே ஒன்றுக்கொன்று பாதிப்பின்றி, குறிப்பிட்ட வருமானத்தை தருவதால், என் குடும்பத்தின் நிலையை உயர்த்திக் கொள்ள முடிகிறது...' என்றார்.

முயற்சி இருந்தால், எவ்வகையிலும் சம்பாதிக்கலாம் என்பதை, சொல்லாமல் சொல்லி விட்டார், அப்பெண்மணி.

ம. வசந்தி, திண்டிவனம்.

விளம்பரம் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வேலை

குறைந்த சேதாரம் என்ற, 'டிவி' விளம்பரத்தை பார்த்து, செயின் மற்றும் மோதிரம் வாங்க திட்டமிட்டு, பிரபல நகை கடைக்கு, தோழியுடன் சென்றேன்.

செயின் மற்றும் மோதிரம் காட்டும்படி கடை ஊழியரிடம் சொல்ல, குறைந்தளவே டிசைன்களை காட்டினார். அதில், தோழிக்கு பிடித்த செயின் மற்றும் மோதிரத்தை வாங்கி, 'பில்'லுக்கான பணத்தை செலுத்தி, ஊர் வந்து சேர்ந்தோம்.

நகையின் தரத்தை சோதிக்க, எங்கள் ஊரில் அனுபவம் நிறைந்த, திறமையான பொற்கொல்லரிடம் காட்டினோம்.

நகையை சோதித்தவர், தரம் குறைவாக உள்ளதாக சொல்லவும், எங்களுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

மேலும், அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை தந்தன.

'இதுபோன்ற பிரபலமான நகை கடைகள், பழைய நகைகளை மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை, 'பாலீஷ்' செய்து, புது நகைகள் போல் விற்கும் மோசடி நடக்கிறது. கடையில் கொடுத்த, 'பில்'லை காட்டுங்கள்...' என்றார்.

அதிலிருந்த, 'நகையை திரும்ப வாங்க மாட்டோம்...' என்ற வாசகத்தை சுட்டிக்காட்டி, 'இனிமேலாவது விளம்பரத்தை பார்த்து ஏமாறாதீர்கள்...' என்று புத்திமதி சொல்லி அனுப்பினார்.

வாசகர்களே... விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஏமாற்றுபவர்களிடமிருந்து,

உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.

-  எஸ். ஜமுனா ராஜமோகன், விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us