தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (20)

நான் வந்த பாதை! (20)

நான் வந்த பாதை! (20)


PUBLISHED ON : செப் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

ஒருநாள், கருணாநிதி என்னிடம், 'பூம்புகார் படம், விலை போகவில்லை. 'டிஸ்டிரிபியூஷன்' கொடுக்கலாம் என்றால், உங்களுக்காக, எஸ்.எஸ்.ஆர்., ஜாயின்ட் கையெழுத்து போடுவாரா என கேட்கின்றனர், விநியோகஸ்தர்கள்.

'இந்த நிலையிலிருந்து என்னை மீட்பதற்காக, எனக்காக, ஜாயின்ட் கையெழுத்து நீங்கள் போட வேண்டும்...' என, என் கையை பிடித்துக் கொண்டார்.

அவருக்காக நான், ஜாயின்ட் கையெழுத்து போட்டால், பிறகு, கருணாநிதியால் பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுக்க முடியவில்லை என்றால், சட்டப்படி நீதிமன்றம் சென்று, மீதி பணத்தை என்னிடம் வசூல் செய்து விடுவர்.

இவைகளையெல்லாம் நன்கு அறிந்தும், 'இன்றே ஜாயின்ட் கையெழுத்து போடுகிறேன். படத்தை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்...' என்றேன்.

அதன்பின், பூம்புகார் படம் வெளியிட ஏற்பாடானது. ஆனால், சென்னையில் வெளியிட எவரும் முன்வரவில்லை. நானே, எஸ்.எஸ்.ஆர்., பிக்சர்ஸ் சார்பில், சென்னையில் தியேட்டர்களை முடிவு செய்து, படத்தை வெளியிட்டேன்.

பூம்புகார் படம் திரையிடப்பட்டு, மாபெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஏகோபித்த பாராட்டுதலை பெற்றது. பிறகு, போட்டி போட்டு, நல்ல விலை கொடுத்து படத்தை விலைக்கு வாங்கினர். அனைவரின் நடிப்பும் மிக பொருத்தமாக அமைந்தது.

கே.பி.சுந்தராம்பாளின் பாட்டும், வேடப் பொருத்தமும் மிகச் சிறப்பாக அமைந்தது.

எனக்கு, நீண்ட நாளாக ஒரு ஆசை. முற்றிலும் திராவிட இயக்க கொள்கைகளை பரப்பும் கதை அமைப்போடு, ஒரு படம் தயாரித்து வெளியிட வேண்டும். அதனால், மக்கள் இன்னும் தெளிவு பெற வேண்டும். வளர்ந்து கொண்டிருந்த அந்த சமயத்தில், நான் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

வேறு பட அதிபர்களிடம், 'புரட்சிகரமான கதையை எடுங்கள், நான் நடிக்கிறேன்...' என, வற்புறுத்த முடியாது. ஏனெனில், இந்த புரட்சிகரமான கதையை எடுக்க அச்சமயத்தில் மற்றவர்களுக்கு துணிவு வராது. ஆகவே, எஸ்.எஸ்.ஆர்., பிக்சர்ஸ் சார்பிலேயே, தங்கரத்தினம் என்ற புரட்சி கருத்து கொண்ட படத்தை தயாரிப்பது என, முடிவு செய்தோம்.

வேறு இயக்குனரை போட்டால், நான் எதிர்பார்க்கிற கருத்துக்கள் முழுமையாக படத்தில் கிடைக்காது என, நானே இயக்கினேன். திரைக்கதை, வசனம் எழுதியவர், என் குடும்ப நண்பரும்,

நாவல், தொடர்கதைகளை எழுதி, மக்களிடம் அறிமுகமானவருமான, கே.ஜி.ராதாமணாளன்.

படத் துவக்கத்தில் முதன் முதலில், தி.மு.க., இரு வண்ண கொடியை காட்டி, எஸ்.எஸ்.ஆர்., பிக்சர்ஸ் தயாரிக்கும், தங்கரத்தினம் என்று காட்டப்படும். பிறகு தான் மற்ற பெயர்கள். அந்த சமயத்தில், கட்சி கொடியை காட்ட அதிக துணிச்சல் வேண்டும்.

கதையில் என் பெயர், தங்கம், கதாநாயகியின் பெயர், ரத்தினம்.

ஒரு பெரும் பணக்காரன். ஜாதி வெறி பிடித்தவன். மூட நம்பிக்கை உள்ளவன் என்பதை எந்த நேரத்திலும் காட்டிக் கொள்ளத் தவறாதவன். பணக்காரன் வேடத்தில், வி.கே.ராமசாமி சிறப்பாக நடித்திருந்தார்.

அவருடைய மகன், அவருக்கு முற்றிலும் எதிரான கருத்துள்ளவன், தங்கம்.

ஈ.வெ.ரா., - அண்ணாதுரை கொள்கை கொண்டவன். அந்த வேடத்தில் நடித்தேனா, அந்த பாத்திரமாகவே மாறினேன்.

தங்கரத்தினம் படத்துக்கு பாடல் எழுதியவர், கவிஞர் மருதகாசி. காட்சிக்கு தகுந்தவாறு சிறப்பாக பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.

படத்தை போட்டுப் பார்த்த சினிமா உலக நண்பர்கள், 'எவ்வளவு துணிச்சல் இருந்தால், படத்தை இப்படி எடுத்திருப்பீர்கள். 'சென்சாரில்' மீண்டு படம் வெளி வருமா?

'சென்சார் போர்டு அதிகாரி மிகக் கடுமையானவர். அவருக்கு பிடிக்காத பகுதிகளை வெட்டி விடுவார். எவ்விதமான சமாதான பேச்சுக்கும் இடம் கொடுக்க மாட்டார். மொத்தத்தில் அவர் சிரிக்கவே மாட்டார்...' என்றெல்லாம் என்னிடம் கூறினர்.

ஆனால், நடந்தது வேறு...

-தொடரும்.

எஸ்.எஸ்.ஆரிடம் எனக்கு மிகவும் பிடிச்சது, அவரோட அச்சரம் பிசகாத தமிழ் உச்சரிப்பு. தமிழை மிக அழகாக பேசுவார். 'மைக்'கே தேவையில்லை. அவரின் கம்பீரமான குரல், நாடக அரங்கம் முழுக்க தெளிவாக ஒலிக்கும்.

'ஓடி விளையாடு பாப்பா, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், மணப்பந்தல், ஆலயமணி, பாசமும் நேசமும்' மற்றும் 'குலவிளக்கு' என, எஸ்.எஸ்.ஆருடன் ஜோடி சேர்ந்து நான் நடித்தவை ஏராளம்.

அன்றும், இன்றும், என்றும் எனக்கு எஸ்.எஸ்.ஆரிடம் நான் கண்டு வியக்கும் ஒரு குணம், அவரது சிரித்த முகம். துளி கூட கோபமே வராது. எப்பவும் ஜோக் அடிச்சு சிரிச்சுக்கிட்டே இருப்பார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்ப கூட எதுக்கும், 'டென்ஷன்' ஆக மாட்டார்.

அவருடைய சுத்த தமிழ் முன், என்னுடைய கொஞ்சல் தமிழ் என்ன கிண்டலுக்கு உள்ளாகி இருக்கும் என, நீங்களே யூகிச்சுக்குங்க.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மைங்கிற படத்தில், அவர் கதாநாயகன், கதாநாயகியா நான் நடிச்சேன். கூடி வாழ்ந்தால் கோடி குழந்தைகள்ன்னு நான் தமாஷ் செய்வேன். என் மழலை பேச்சை மிகவும் ரசிப்பார்.

அவர், என்னை, சரோஜா என்று கூப்பிடுவார். நான் அவரை, எஸ்.எஸ்.ஆர்., என்பேன். சில சமயம், சிவாஜி அவரை அழைப்பது போல, ராஜு என்பேன்.

சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., இருந்தால், அந்த இடமே பிரகாசமாகி விடும். சிவாஜியிடம் நகைச்சுவையாக பேசிக் கொண்டே இருப்பார், எஸ்.எஸ்.ஆர்., வெடிச் சிரிப்புகளுக்கு பஞ்சமே இருக்காது.

இப்படி ஒரு பேட்டியில் கூறியிருந்தார், சரோஜாதேவி.

- எஸ்.எஸ்.ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us