தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

அலுவலக மதிய உணவு இடைவேளை...

சந்திரயான் - 3, நிலவின் தென் துருவ பகுதியில் இறங்கி, ரோவர் மூலம், நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து, நாளுக்கு ஒரு தகவல் அனுப்பி வருவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர், உதவி ஆசிரியர்கள்.

இடையில் புகுந்த ஒரு உதவி ஆசிரியை, மூத்த செய்தியாளரிடம், 'நிலவில், காற்று இல்லாததால், எந்தவித சத்தமும் இருக்காது அல்லவா! விண்வெளி வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதும் கேட்காது. பூமியில் வசிக்கும் நமக்கு, குழந்தை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை, ஓசை என்பது, வாழ்க்கையில் பின்னி பிணைந்துள்ளது.

'ஆனால், பேசும் திறன் அற்ற, பறவை மற்றும் விலங்குகள், தங்களுக்குள் எப்படி தகவல் பரிமாறிக் கொள்ளும்?' என்று, கேட்டார்.

'இது பற்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி செய்துள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகள் தங்கள் இணையை தேட, விதவிதமாக சத்தம் எழுப்பும். ஆபத்து காலத்திலும், இப்படி சத்தம் எழுப்பி, எச்சரிக்கை செய்யும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

'கடலில் வாழும் மீன்கள் கூட, ஒலி எழுப்பும் என்று, எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் தான் கண்டுபிடித்தனர்...' என்றார், மூத்த செய்தியாளர்.

'அப்படியா... அதுபற்றி சொல்லுங்களேன்...' என்று, உ.ஆ., கேட்டதும், கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்:

இரண்டாவது உலகப் போர் நடந்துக் கிட்டிருந்த சமயம்...

ஜெர்மானிய கடற்படையில், 'யு-போட்'ங்கிற நீர்மூழ்கி கப்பல்கள் இருந்தன. அந்த கப்பல்கள் இருக்கிற இடத்தை ரகசியமா கண்டுபிடிக்கிறதுக்காக, ஹைட்ரோ போன்-ங்கிற கருவியை உபயோகப்படுத்திச்சு, அமெரிக்கக் கடற்படை.

மைக்ரோ போன்னு சொல்றோம்ல, அது மாதிரி தண்ணிக்குள்ளே உபயோகப்படற, 'மைக்' தான், ஹைட்ரோ போன். இந்த கருவியை கடலுக்குள் இறக்கி ஆராய்ந்துக்கிட்டு இருந்தப்ப, எதிர்பாராத சில சத்தங்கள் பதிவானதாம்.

எங்கேயிருந்து வருது இந்த சத்தம்ன்னு, மேற்கொண்டு ஆராய்ந்தனர். அப்போது, கடல்ல உள்ள சில மீன்கள் போடற சத்தம்ங்கிறது, தெரிந்துள்ளது.

இன்னும் கொஞ்சம் நுணுக்கமா ஆராய்ச்சி பண்ணிப் பார்த்திருக்காங்க. அதுக்கப்புறம் தான் அதெல்லாம் வெறும் சத்தம் இல்ல, சங்கீதம்-ங்கிறது புரிந்துள்ளது.

ஆமாம், சங்கீதம்-ங்கிறது ஏதோ மனுஷனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சங்கதின்னு, நாம நினைச்சுகிட்டு இருந்தோம். பறவைகளுக்கும், மீன்களுக்கும் பாடத் தெரியும் என்பது, இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நல்லா பாடக் கூடிய பறவை, இந்திய வானம்பாடி-. சில பறவைகள் பேசும்; -பாடவும் செய்யும்.

மணிப்பறவைன்னு ஒண்ணு, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகள்ல இது அதிகம். அது பாடுற பாட்டு சத்தம், ரொம்ப துாரத்துக்கு கேட்குமாம். ஐரோப்பாவில் உள்ள- தேன் சிட்டு மற்றும் ஆஸ்திரேலியாவுல உள்ள,- லயர் பறவையும் நல்லா பாடுமாம்.

இமயமலைப் பகுதியில், ஒரு வகைப் பறவை விசிலடிக்குமாம். அங்கே உள்ள, 'பார்பட்'ங்கிற பறவை, தன்னுடைய குரலை தானே கேட்டு, ரசிக்குமாம்.

மீன்களைப் பொறுத்தவரைக்கும், -டாம்செல், காட் மற்றும் ஹேடாக் இன மீன்கள் பெரிதாக சத்தம் போடும். ஹேடாக் மீன் போடற சத்தம், மோட்டார் சைக்கிள் சத்தம் மாதிரி இருக்குமாம். அது, அந்த மீனின் காதல் பாடல் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

காட் மீனின் ஒலி, முனகல் ஒலி மாதிரி கேட்குமாம்.

நல்லா பாடக் கூடியது, திமிங்கலம்.

அமெரிக்காவில் ரெண்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், திமிங்கலம் போடற சத்தத்தைப் பதிவு பண்ணினாங்க.

வட பசிபிக் பெருங்கடல்ல, 460 திமிங்கலங்களின் சத்தம்... அட்லாண்டிக் பெருங்கடல்ல, 88 திமிங்கலங்களின் சத்தம்... இது எல்லாத்தையும் பதிவு பண்ணி, கம்ப்யூட்டர்ல போட்டு பார்த்திருக்காங்க.

அப்புறம் தான், அதுலயெல்லாம் ஒரு தாள லயம் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஒரு அணியில் உள்ள திமிங்கலங்கள் எல்லாம், ஒரே பாடலைத்தான் பாடுதாம். காலப் போக்கில் அந்தப் பாடல், கொஞ்சம் கொஞ்சமா மாறி வருதுங்கறதையும் கண்டுபிடிச்சு இருக்காங்க.

அதனால, மனுஷங்க, நமக்கு தான் பாடத் தெரியும்ன்னு மார் தட்டிக்க வேணாம்.

சாதா மீனுக்கும் பாடத் தெரியும்; திமிங்கலத்துக்கும் பாடத் தெரியும்!

இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது. பூமியில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் ஒலி சொந்தம் என்று நினைத்து விட வேண்டாம். நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமிக்குமே ஒலி சொந்தம்.

அதாவது, பூமி சுழலும்போது, 'கும்' என்ற பேரிரைச்சல் எழுமாம். 'ஓம்' என்ற ஓசை கேட்பதாகவும் சொல்வர்.

நம்முடைய கேட்கும் திறன், சில, 'டெசிபல்' அளவு மட்டுமே.

பூமி சுழலும்போது வெளிப் படும் பேரிரைச்சலை ஒருவேளை கேட்க நேர்ந்தால், காது ஜவ்வு கிழிந்து விடும் என்று, எப்போதோ படித்த ஞாபகம். உண்மையா என்று தெரியவில்லை...

- இவ்வாறு கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.

அட... பூமி சுழலும்போது சத்தம் எழுமா? இதென்ன புது தகவலா இருக்கே! இதைப் பற்றி தெரிந்தவர்கள் எனக்கு எழுதலாமே!



பள்ளிக்கூட ஆண்டு விழாவின்போது, 'பாஞ்சாலி சபதம்' நாடகம் நடத்த முடிவு செய்தனர்.

அது, ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம் என்பதால், பாஞ்சாலியாக நடிக்க, அழகான பையனை தேர்ந்தெடுத்தனர். துச்சாதனனாக நடிக்க, குண்டாக ஒரு பையனை தேர்ந்தெடுத்தனர்.

அந்த இரண்டு மாணவர்களும் சண்டையிட்டு, பல நாட்களாக பேசாமல் இருக்கிற விஷயம், ஆசிரியர்களுக்கு தெரியாமல் போயிற்று. அதன் விளைவு, மேடையில் தெரிந்தது.

'பாஞ்சாலியாக நடிக்கும் பையனின் உடம்பில் நிறைய சேலைகளை சுற்றி வைத்திருப்போம். கொஞ்சம் கொஞ்சமாக, நீ மெதுவாக அந்த சேலைகளை இழுக்க வேண்டும்...' என்று சொல்லியிருந்தார், ஆசிரியர்.

ஆனால், துச்சாதனனாக நடித்த குண்டு பையன், பாஞ்சாலியாக நடித்த பையன் மேல் இருந்த கோபத்தில், விறுவிறுவென்று சேலைகளை இழுத்துப் போட்டு, தன் கைவரிசையை காட்டி விட்டான்.

மேடையில் பாஞ்சாலி வேடமிட்ட பையன், கால் சட்டையோடு நிற்க வேண்டியதாயிற்று.

எனினும், உடனே, 'கண்ணா, கருணை மன்னா... நிறைய சேலைகள் கொடுத்து, என் மானத்தை காப்பாற்றுவாய் என நினைத்தேன். பரவாயில்லை, கால் சட்டை போட்ட ஆணாகவே மாற்றி, என்னையும், என் கற்பையும் காப்பாற்றி விட்டாய். மிக்க நன்றி...' எனக் கூறி சமாளித்தான், பாஞ்சாலி வேடமிட்ட பையன்.

இந்த சமாளிப்பை ஆரவாரம் செய்து பாராட்டினர், சபையினர்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us