PUBLISHED ON : அக் 08, 2023

ஓசி, 'சென்ட்'டால் வந்த வினை!
பெங்களூருவில் உள்ள, உறவினர் மகளின் குடும்ப விசேஷத்திற்கு, கணவரோடு சென்று கலந்து கொண்டு, ரயிலில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
வழியிலுள்ள ஒரு ஸ்டேஷனில், நடுத்தர வயது நபர், எங்கள் கம்பார்ட்மென்டில் ஏறி, ஆளுக்கொரு, 'சென்ட்' பாட்டிலை கொடுத்தார்.
'இது, கம்பெனி விளம்பரத்துக்காக இலவசமாக தரப்படுகிறது. வீட்டிற்கு சென்று பயன்படுத்தி பார்த்து, 'விசிட்டிங் கார்டில்' உள்ள எண்ணுக்கு தகவல் தந்தால், கூரியர் மூலம் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைப்போம்.
'உங்கள் கைக்கு, 'சென்ட்' பாட்டில் வந்த பின், 'ஆன்லைனில்' எங்களுக்கு பணம் செலுத்தலாம். உங்களுக்கு தேவையில்லை என்றால், உறவினர்கள், நண்பர்களுக்கு வாங்கி பரிசளியுங்கள்...' என்றார்.
அத்துடன், அவர் வைத்திருந்த, 'சென்ட்' பாட்டிலிலிருந்து, வலுக்கட்டாயமாக எல்லார் கையிலும், 'சென்ட்'டை பீய்ச்சி, வாசனையை முகர்ந்து பார்க்கச் சொன்னார்.
அனைவரும் முகர்ந்து பார்க்க, சென்ட் பாட்டிலில் மயக்க மருந்து கலந்திருக்கும் போல்! சுவாசித்ததில், மயங்கி விழுந்தோம்.
இரண்டு மணி நேரம் கழித்து, மயக்கம் தெளிந்த பிறகு தான், எங்களின் நகைகள், பணம் மற்றும் மொபைல்போன் உள்ளிட்ட உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்ட விஷயம் தெரிந்தது.
உடனே, ரயில்வே போலீசில் புகார் அளித்தோம். அவர்களும், 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, திருடனை பிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
வாசகர்களே... வெளியூர் பயணங்களின் போது, 'ஓசி'யைத் தவிருங்கள். எச்சரிக்கையோடு இருங்கள்.
டி. யாஷினி, திருப்பூர்.
சிறு துளி பெரு வெள்ளம்!
சமீபத்தில், உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நான், உள்ளே நுழைந்தபோது, உறவினரிடம், இரண்டு இளைஞர்கள் பணம் வாங்கிக் கொண்டு வெளியேறியதைப் பார்த்தேன்.
அதுபற்றி உறவினரிடம் விசாரித்ததில், 'அந்த இளைஞர்கள், எங்கள் பகுதியில் எலக்ட்ரீஷியன் மற்றும் ப்ளம்பர் வேலை செய்பவர்கள்.
'அந்த வேலை போக, தேவைப்படும் வீடுகளில், தண்ணீர் தொட்டி, பேன் உள்ளிட்ட மின் சாதன பொருட்களை சுத்தப்படுத்துவது என, சிறு சிறு வேலைகளை செய்வர். அதற்காக, நியாயமான தொகையை கூலியாக பெற்றுக் கொள்கின்றனர்...' என்றார்.
இதுபோல, எந்த ஒரு தொழிலிலும், அதை மட்டுமே செய்து வருமானம் ஈட்ட எண்ணாமல், அந்த தொழிலோடு இணைந்த சிறு சிறு வேலைகளையும், கவுரவம் பார்க்காமல் செய்யலாம். இவ்வாறு, விருப்பத்தோடு செய்யத் துவங்கினால், வாழ்க்கையில், விரைவாக முன்னேறலாம்.
'சிறு துளி பெரு வெள்ளம்...' என்று, சும்மாவா கூறினர்.
பொ. தினேஷ்குமார், செங்கல்பட்டு.
வங்கிகளின் மன மாற்றம்!
'கொரோனா' காலத்தில், ஊடகத்துறையிலிருந்து வெளியேறிய என் நண்பர், தன் இரு பெண்களுக்கும் மணம் முடித்தபின், ஓய்வில் இருந்தார்; மதுவுக்கும் அடிமையானார்.
இரு பெண்களும், தம் பெற்றோருக்கு மாதம், 1 லட்சம் வழங்க முன் வந்தபோதும், ஏற்கவில்லை, நண்பர். இந்நிலையில், அரசு வங்கியிலிருந்து நண்பருக்கு அழைப்பு வர, பணியில் சேர்ந்தார்.
ஒரு காலத்தில், வாராக் கடன்களை வசூல் செய்ய, தனியாக ஆட்களை வைத்து, ரவுடித்தனம் செய்தனர். இதனால், கடன் பெற்றவர்கள், துன்புறுத்தப்பட்டும், அவமானப் படுத்தப்பட்டும், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
இப்போது, வாராக் கடன்களை வசூலிக்க, கவுரவமான பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களை வங்கிகள் பயன்படுத்தி வருவதால், நல்ல பலன் கிடைத்துள்ளது. நேரடியாக, கடன் பெற்றவர்களின் இல்லம் சென்று, வங்கிகளின் நிலையை எடுத்துச் சொல்கின்றனர். இதனால், கடனை திருப்பிச் செலுத்த முன் வருகின்றனர், கடன் வாங்கியவர்கள்.
வங்கிகளின் இந்த மென்மையான போக்கால், வாராக்கடன்கள் வசூலிக்கப்பட்டு வருவதோடு, ஓய்வூதியர்களும் நிம்மதியாக வாழ்கின்றனர். கை நிறைய சம்பாதிக்கும் என் நண்பர், மது அருந்துவதையும் நிறுத்தி விட்டார்.
வங்கிகளும், தனியார் நிறுவனங்களும், ஓய்வூதியர்களை பயன்படுத்திக்கொள்ள முன் வந்திருப்பது, பாராட்டுக்குரியது!
ந. ராமசாமி, கரூர்.
