PUBLISHED ON : நவ 12, 2023

பாட்டியின் சாமர்த்தியம்!
எனக்கு தெரிந்த பாட்டி ஒருவர், வீட்டில் டிபன் கடை நடத்துகிறார். தரமாகவும், ருசியாகவும் இருக்கும்.
அந்த தெருவில், தோல் பொருட்கள், 'பேக்கிங்' செய்யும் சிறு தொழில் நிறுவனம் உள்ளது. பாட்டியிடம், 'எங்கள் கம்பெனியில் வேலை செய்யும், 50 பேருக்கு, காலை டிபன் தயார் செய்ய முடியுமா?' என்று கேட்டனர். அந்நிறுவனத்தினர்.
ஒப்புக்கொண்டார், பாட்டி. மறுநாள் முதல், அந்த கடையில் இரண்டு பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
விசாரித்ததில், 'கைம்பெண் இருவரை வேலைக்கு வைத்துள்ளேன். காலை, 4:00 மணி முதல் 7:00 மணி வரை, என்னிடமும், 8:00 மணிக்கு, தோல் பொருட்கள், 'பேக்கிங்' செய்யும் கம்பெனிக்கு சென்று, வேலை செய்வர். கம்பெனிக்கு டிபன் தருவதில் வரும் வருமானத்தை, நாங்கள் பிரித்துக் கொள்கிறோம்.
'வயதான காலத்தில், எனக்கு டிபன் கடையில் வரும் வருமானமே போதும். ஆனால், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு, இரண்டு வருமானத்திற்கு வழி செய்துள்ளேன்.
'என்னிடம் டிபன் சாப்பிட வரும், வறுமையில் தள்ளாடும், ஆதரவற்ற நிலையிலுள்ள, 20 பெண்களை இதுவரை கம்பெனியில் சேர்த்துள்ளேன். ஆட்கள் அதிகமாக ஆக, டிபன் கடை வருமானமும், ஆதரவற்ற பெண்களுக்கு உதவி செய்த மன மகிழ்ச்சியும், என்னை, 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.
'இந்த மன நிறைவால், முன்பை விட அதிகமாக வேலை செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். என்னால் பலன் அடைந்த பெண்கள், என்னை, தாயை போல் பார்த்துக் கொள்கின்றனர்...' என்றார்.
மாற்றி யோசித்தால், வருமானத்தோடு, மன நிறைவும் ஏற்படும் என்பதை செயல் மூலம் உணர்த்தி விட்டார், பாட்டி.
- ம. வசந்தி, திண்டிவனம்.
பூ, பொட்டு, வளையல் தோல்வியின் அடையாளமா?
சமீபத்தில், திரைப்படம் ஒன்றை பார்த்தேன். அதில், நாயகனிடம் சண்டையிட்டு தோற்று விடுகிறான், வில்லன். அவனுக்கு, தலையில் பூ வைத்து, வளையல் அணிவித்து அவமானப் படுத்துவது போல் ஒரு காட்சி, என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
தோல்வி அடைந்தவர்கள் தலையில் பூ வைத்து, வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்றால், அவைகளை அணியும் பெண்ணினம் எதற்கும் தகுதியில்லாதது என்று அர்த்தமா? பல திரைப்படங்களில், இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்று வருவது, வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
சினிமாக்காரர்களே... சேலை கட்டுவது, பொட்டு வைப்பது, வளையல் அணிவிப்பது போன்ற, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை, தோல்வியின் அடையாளங்களாக சித்தரிக்காதீர்கள், ப்ளீஸ்!
பி. பூங்கோதை, காளையார்கோவில், சிவகங்கை.
நண்பரின் நல்ல முயற்சி!
சிறுதொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார், நண்பர். அதில், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் முடித்த, சுற்று வட்டார பகுதிகளிலுள்ள இளைஞர்களை வேலைக்கு வைத்துள்ளார்.
மாதா மாதம் சம்பள நாளன்று, அந்த இளைஞர்களின் அம்மா அல்லது மனைவியை வரவழைத்து, அவர்களிடம் சம்பள கவரை ஒப்படைத்து விடுவார்.
'அந்த இளைஞர்களிடமே சம்பளத்தை தரலாமே...' என்றேன்.
'இங்கேயே தங்கி, இவர்களை விட குறைவான ஊதியத்தில், கூடுதலான நேரம் பணிபுரிவதாக, வட மாநில இளைஞர்கள் பலர் வருகின்றனர். இருப்பினும், இங்குள்ள இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இவர்களுக்கு வேலை தந்தேன்.
'ஆனால், இவர்களில் பலர், அடிக்கடி விடுப்பு எடுப்பது, காரணம் கேட்டால், வேலையை விட்டு நின்று விடுவது, சம்பள பணத்தை குடிப்பதற்கு செலவிடுவது என, பொறுப்பின்றி இருந்தனர்.
'இதனால் தான் இவர்களின் அம்மா அல்லது மனைவியிடம், சம்பளத்தை தந்து விடுகிறேன். மேலும், இவர்கள் வேலைக்கு விடுப்பு எடுக்கும்போது, வீட்டுப் பெண்களுக்கு போனில் தகவல் தந்தால், அவர்களை, உடனே வேலைக்கு அனுப்பி விடுவர்.
'என் வேலையும் கெடாமல் நடக்க வேண்டும்; வேலை செய்பவர்களும், கெட்டு விடாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான், அப்படி செய்கிறேன்...' என்றார்.
நண்பரின் முயற்சிக்கு, 'சபாஷ்' சொன்னேன்!
ஆர். செந்தில்குமார், மதுரை.
