தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (2)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (2)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (2)


PUBLISHED ON : நவ 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசனாக நடித்த தியாகராஜனின் நடிப்பில் மெய்மறந்த ரசிகர்கள், காள கண்டராக நடித்த நடிகரை தாக்க முற்பட்டனர்.

அப்போது, மேடையில் தோன்றிய சபா உரிமையாளரான நடேசய்யர், 'மகா ஜனங்களே... இந்தப் பையன் பசியால் துடிக்கவில்லை; நாடகத்திற்காக வெறுமனே நடிக்கிறான். தயவுசெய்து அமருங்கள்...' என்று கதறிய பின்னரே, சூழ்நிலை அமைதியானது.

அது முதல், தியாகராஜன் நடிக்கும் நாடகம் என்றால், மக்களிடையே தனி மவுசு ஏற்பட்டு விட்டது. வளர்பிறையாக வாழ்க்கை, தியாகராஜனுக்கு அமையத் துவங்கியது.

பாட்டு மற்றும் நடிப்பில் மட்டுமே, அவருடைய முழு கவனமும் இருந்தது.

ஒவ்வொரு ஊராக நாடகம் நடத்த சென்றனர்.

ஒருமுறை, செட்டிநாட்டுக்கு நாடகம் நடத்த சென்றபோது, மானகிரிலேனா என்ற லட்சுமணன் செட்டியாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தியாகராஜனுக்கு, ஒரு நாளைக்கு, 50 ரூபாய் என்று பேசி, 50 நாடகங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார், லட்சுமணன். அந்த அளவுக்கு வசூல் சக்கரவர்த்தியாகி விட்டார், பாகவதர்.

ஐம்பதாவது நாடகத்தின் முடிவில், யாருமே எதிர்பார்க்காதவாறு, பாகவதருக்கு, ஒரு கார் வாங்கி பரிசளித்தார், லட்சுமணன். அந்த காலத்தில், எந்த நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் இது.

சரி, இப்போது நாம் பாகவதரின், முதல் நாடகத்திற்கு வருவோம்.

நாடகத்தை பார்க்க வந்த, பொன்னு ஐயங்கார் எனும் பிடில் வித்வான், சிறுவன் தியாகராஜனின் மேதா விலாசத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்; தானாகவே முன் வந்து, தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.

'சம்பளம் எவ்வளவு தரவேண்டும்...' என கேட்டார், பாகவதரின் தந்தை.

'இந்த குழந்தைக்கு இசையைக் கற்றுக் கொடுப்பது, என் பாக்கியம். தட்சணையாக ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ள மாட்டேன்...' என்று சொல்லி விட்டார்.

அந்த காலத்தில், இரண்டு வகையான நாடக கம்பெனிகள் இருந்தன. முதலாவது, நாடக கம்பெனி ஏற்படுத்தி, நடிகர்களை மாதாந்திர சம்பளம் கொடுத்து, நிரந்தர நடிகர்களாக வைத்துக் கொள்வது. அவர்களுக்கான உணவு, உடை, இடம், இன்ன பிறவற்றை கம்பெனியே ஏற்றுக் கொள்ளும்.

அப்படிப்பட்ட கம்பெனிகளிலிருந்து பிற்காலத்தில் திரையுலகத்திற்கு வந்தவர்கள் தான், பெரும்பாலான திரையுலக நடிகர்கள்.

இன்னொன்று, ஸ்பெஷல் நாடகம். நடிகர்கள் எந்த ஒரு கம்பெனியிலும் நிரந்தரமாக இல்லாமல், தானாகவே நாடகம் நடத்திடுதல். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அப்படி நாடகம் நடத்துபவர்கள், எந்த கம்பெனிக்கும் சர்வ சுதந்திரமாக சென்று, தங்கள் ஸ்பெஷல் நாடகங்களை நடத்த முடியும்.

அப்படித்தான் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார், பாகவதர். தன்னை, கலையுலகில் அறிமுகப்படுத்திய, ரசிக ரஞ்சனி சபாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'வள்ளித்திருமணம்' என்ற தன் முதல் ஸ்பெஷல் நாடகத்தை, 1931ல், ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றினார், பாகவதர்.

பாகவதரின் முதல் கச்சேரி, அபிநவ நந்திகேஸ்வரர் என்று புகழ்பெற்ற, மிருதங்க சக்கரவர்த்தியான, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் தலைமையில் நடந்தேறியது.

பாகவதரின் இசை அரங்கேற்றத்தை கண்டு, பூரண மகிழ்ச்சியடைந்தார், பிள்ளை.

'இவன், இன்று முதல் வெறும் தியாகராஜன் இல்லை. தியாகராஜ பாகவதர்; வருங்காலத்தில், இசை நாடக அரங்கங்களை, தங்க சாவி கொண்டு திறப்பான்...' என, வாழ்த்தினார்.

அந்த உன்னத மனிதரின் வாழ்த்து, அப்படியே பலித்தது. சென்னை, மந்தைவெளியில் இருந்த கபாலி தியேட்டரை, தங்க சாவி கொண்டு திறந்து வைத்தார், பாகவதர்.

தன் பெயர் பிரபலமானதிலிருந்து, ஆடை அலங்காரத்தில் அதீத கவனம் செலுத்தினார், பாகவதர்.

கட்டை விரல் நீங்கலாக, அனைத்து விரல்களிலும் வைர மோதிரங்கள். காதில் வைர கடுக்கண். கைகளில் வைர காப்பு. கழுத்தில், நவரத்தின மாலை அணிந்தபடி தான், காட்சி அளிப்பார்.

அவர் அணிந்திருந்த நகைகளின் அன்றைய மதிப்பு, 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகம். இன்றைய மதிப்பில் எத்தனை கோடி என்பதை உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன்.

ஒருமுறை, இயக்குனர் கே.சுப்பிரமணியமும், பாகவதரும் ரயிலில் பயணம் செய்தனர். அவர்களுக்கு எதிரே, வங்காளத்தைச் சேர்ந்த பெண்மணியும், அவரது கணவரும் அமர்ந்திருந்தனர்.

பாகவதரை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார், அந்த பெண்மணி.

பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் அமர்ந்திருந்த, கே.சுப்பிரமணியத்திடம், 'அந்த பெண்மணி, என்னை பார்த்து ஏன் சிரிக்கிறார்...' என்று கேட்டார்.

ஆங்கிலத்தில் அவர்களிடம் அந்த கேள்வியை கேட்டார், கே.சுப்பிரமணியம்.

'எங்கள் ஊரில், பெரிய பணக்கார வீட்டு பெண்மணிகள் கூட, இவ்வளவு நகைகள் அணிய மாட்டார்கள். இந்த மனிதரை இத்தனை நகைகளுடன் பார்த்ததில், மூக்கில் நகை அணிய மறந்து விட்டாரா என்று நினைத்து, என்னை அறியாமல் சிரித்து விட்டேன்; மன்னியுங்கள்...' என்று, ஆங்கிலத்திலேயே பதிலளித்துள்ளார், அப்பெண்மணி.

அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து, பாகவதரிடம் சொன்னார், கே.சுப்பிரமணியம். அந்த பெண்மணியை சற்று நேரம் உற்றுப் பார்த்தார், பாகவதர்.

அடுத்து நடந்தது தான் சுவாரஸ்யம். பாகவதர் என்ன செய்தார் தெரியுமா?

-தொடரும்.

பாகவதர் படங்களுக்கு அதிகமாக இசையமைத்தவர், சங்கீத சக்கரவர்த்தி, ஜி.ராமநாதய்யர். ஒரே நேரத்தில் இரண்டு ஹார்மோனியங்களை வாசிக்கும் திறம் கொண்டவர், ஜி.ராமநாதய்யர்.

பாகவதரின் பாட்டு திறத்தை கண்டு வியந்து, 'இந்த தங்கக் குரலுக்கு பங்கம் வராமல் மெட்டு போட, நான் படும் பாடு இருக்கிறதே, அது அந்த ஈஸ்வரனுக்குத்தான் தெரியும்...' என்பாராம்.

எஸ். கார்முகிலோன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us