PUBLISHED ON : நவ 12, 2023

பா - கே
'ஒரே மாதிரி வேலை செய்யிறதுக்கு அலுப்பா இருக்கு மணி. இந்த, 'வீக் எண்ட்' எங்காவது வெளியூர் சென்று வரலாமா...' என்றபடி, தன் கேபினிலிருந்து வெளியில் வந்தார், லென்ஸ் மாமா.
மூத்த செய்தியாளர் மேஜை மீதிருந்த, விளையாட்டு சம்பந்தமான ஆங்கில இதழ் ஒன்றை எடுத்து புரட்டிய மாமா, 'நம் வீரர்கள், தொடர்ந்து, தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதிக்கிறாங்கப்பா...' என்று, சிலாகித்தார்.
'இன்னும் கொஞ்ச நாளில், விளையாட்டிலும், நாம் தான் முன்னிலை வகிக்கப் போறோம்...' என்றார், மூத்த செய்தியாளர்.
'மணி... அடுத்த ஆண்டு, 2024ல், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது. அதுக்கு போய் வித விதமாக புகைப்படம் எடுக்கணும்பா... பொறுப்பாசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்கு. போய் வருவோம்...' என்று, 'பிட்' போட்டார், லென்ஸ் மாமா.
விளையாட்டில், எனக்கு அதிக ஈடுபாடு இல்லாததால், பதில் ஏதும் கூறாமல் மவுனம் சாதித்தேன்.
அப்போது உள்ளே வந்த, திண்ணை நாராயணன், 'என்னையும் கூட்டிட்டு போங்களேன்...' என்றார்.
'போச்சுடா... பிள்ளைப் பூச்சியை யாராவது, வயிற்றில் கட்டிக்கிட்டு போவாங்களா... உங்களுக்கெல்லாம் பொறுப்பாசிரியர் அனுமதி தர மாட்டார்...' என்றார், மாமா.
'நீங்க என்ன அனுமதி வாங்கறது... விளையாட்டு வீரர்கள், ஊக்க மருந்து பயன்படுத்தி, அவ்வப்போது மாட்டிக் கொள்வதைப் பற்றி அருமையான, 'மேட்டர்' ஒண்ணு என்கிட்ட இருக்கு. அதை சொன்னா போதும், முதல், 'டிக்கெட்' எனக்குத்தான்...' என்று, பதிலுக்கு வெறுப்பேற்றினார், நாராயணன்.
'ஊக்க மருந்தா... அதைப் பற்றி சொல்லுங்களேன்...' என்று, நான் கேட்க, கூற ஆரம்பித்தார் நாராயணன்:
விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கிறவங்க, அத்தனை பேரும் முதலில் வரணும், பரிசு வாங்கணும்ன்னு தான் ஆசைப்படுவாங்க.
அப்படி ஆசைப்படறதுல ஒண்ணும் தப்பில்ல. ஆனா, குறுக்கு வழியில் சென்று, முதல்ல வந்துடணும்ன்னு நினைக்கிறது தப்பு தானே!
தப்பு மட்டும் இல்ல; சட்ட விரோதமும் கூட.
கடந்த, 1960ல், ரோமாபுரியில் நடந்த ஒலிம்பிக்ல, சைக்கிள் பந்தய இளம் வீரர் ஒருத்தர், போட்டி சமயத்துல, எந்தக் காரணமும் இல்லாம திடீர்ன்னு மைதானத்துல விழுந்து செத்துப் போனார்.
ஏன் இப்படி ஆச்சுன்னு யாருக்கும் புரியல.
பிறகு, அதைப் பற்றி தீவிரமா ஆராய்ந்து பார்த்தப்போ, அதிக ஊக்க மருந்து சாப்பிட்டதுனால தான் அப்படி ஆச்சுன்னு கண்டுபிடிச்சாங்க.
அதுக்கப்புறம் தான், விளையாட்டு வீரர்கள், ஊக்க மருந்து சாப்பிடறதைக் கண்டுபிடிக்கிறதுக்கு ஆய்வுக்குழு ஒன்றை ஏற்படுத்த முடிவு செஞ்சாங்க.
கடந்த, 1976ல், கனடா நாட்டுல நடந்த மாண்டரியல் ஒலிம்பிக்ல தான் முதல் முறையா இந்த ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டது.
இருந்தாலும், இந்த விவகாரம் ரொம்ப பிரபலமானது, பென் ஜான்சன் என்ற குத்துச் சண்டை வீரரால் தான்!
இந்த ஊக்க மருந்தை எப்படி உட்கொள்றாங்க தெரியுமா?
வாய் மூலமா சாப்பிடறது, மூக்கால நுகர்றது, ஊசி மூலமா உடம்புல ஏத்திக்கறது இப்படி பல வழிகள் இருக்கு!
வேகமாக ஓடறது, குண்டு எறியறது, பளு துாக்கறது, நீளம் தாண்டறது மற்றும் உயரம் தாண்டறது மாதிரியான போட்டிகளில் கலந்துக்கிறவங்களுடைய தசை நார்கள் பெரிசாகறதுக்காக, 'அனபாலிக் ஸ்டீராய்ட்' என்ற மருந்தை உபயோகப்படுத்தறாங்க.
இன்னொரு வகை ஊக்க மருந்து உண்டு. அது, கஞ்சா வகையைச் சேர்ந்தது.
ரொம்ப துாரம் ஓட வேண்டியவங்க இதை உபயோகப்படுத்தறாங்க. ஒரு குறிப்பிட்ட அளவு துாரம் ஓடி, அதுக்கப்புறம் ஓட முடியாதுங்கற நினைப்பு வர்றப்போ, இந்த போதை வஸ்துவை எடுத்துப்பாங்க. அது, அவங்களை இயந்திரம் போல ஓட வச்சுடுது.
துப்பாக்கி சுடறவங்க மற்றும் அம்பு விடறவங்களுக்கு, 'டென்ஷன்'ல கை நடுங்கும்; இதயம் பட படக்கும். இதை கட்டுப்படுத்த, இதய நோய்க்கான மருந்தை உபயோகப்படுத்துறாங்க.
குத்துச்சண்டை வீரர்கள், மல்யுத்த வீரர்கள் இவங்கள்லாம் எடையை குறைக்கிறதுக்கு, ஒரு குறிப்பிட்ட மருந்தை உபயோகப்படுத்துறாங்க. மருத்துவத்தில், சிறுநீர் அதிகம் கழிக்க பயன்படுத்தப்படும் மருந்து இது.
வீராங்கனைகள், 'அனபாலிக் ஸ்டீராய்ட்' உட்கொள்றதால, அவர்களுடைய தசை நார்கள் ஆண்கள் மாதிரி மாறிடும். அதுமட்டுமல்லாமல், உடம்பு மோசமாயிடும்.
பெண்களுக்கு, ஆண்கள் மாதிரி குரல் மாறும், முகத்துல முடி முளைக்க ஆரம்பிக்கும். தலைமுடி உதிரும். கர்ப்பப்பையில புற்றுநோய் உண்டாகும்.
ஆண்களா இருந்தா அவங்களுக்கு ஒரு மிருக வெறி உண்டாயிடும். நுரையீரல் புற்றுநோய் வரும். அதுமட்டுமில்லாம, இதய நோய் வரும். ரத்தக்கொதிப்பு ஏற்படும். தலைமுடி உதிரும்.
அதனால், பரிசு வாங்கணும்ங்கிற ஆசையில, பாதை மாறி போறது ரொம்பத் தப்பு.
- இப்படி சொல்லி முடித்தார், நாராயணன்.
'எல்லா விஷயத்தையும் தான் இப்பவே சொல்லிட்டீரே... மணி, நீயும் இதை எழுதிருப்பா... அப்புறம் என்னத்த சொல்லி, நீர், பொறுப்பாசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்கறது...' என்று கடுப்படித்தவாறு எழுந்து சென்றார், மாமா.
'திரு திரு'வென விழித்த நாராயணனை, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன், நான்.
ப
கொஞ்சம் வசதியான ஆள். அவனுக்குத் தாராள மனசு. அடுத்தவங்களுக்கு அப்பப்ப தன்னால முடிஞ்ச உதவி செய்வான். ஆனா, அதுக்கு நேர்மாறான குணம் கொண்டவள், அவனது மனைவி. மகா கருமி மட்டுமில்ல, கணவனையும், ஏழைகளுக்கு உதவ அனுமதிக்கிறதில்ல.
அந்த ஆள் மத்தவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்ன்னு நினைச்சா கூட, மனைவிக்கு தெரியாம செஞ்சாத்தான் உண்டு!
ஒரு சமயம், அந்த அம்மா பிறந்த வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது. நடந்தே போகலாம்ன்னு சொல்லிட்டாங்க.
கடுமையான கோடை காலம், சரியான உச்சி வெயில்ல ரெண்டு பேரும் நடந்தே புறப்பட்டாங்க. அந்த அம்மா, கால்ல செருப்பு கூட இல்ல. வெறும் காலோட நடக்க ஆரம்பிச்சுட்டாங்க!
செருப்பு போட்டுக்கிட்டா அது வேற தேய்ஞ்சு போயிடுமில்லையா... பக்கத்துல நிழல் தரும் மரம் எதுவும் இல்ல. கால்ல சூடு தாங்கல. கடுமையான வெப்பம்!
'கால் சுடுதே... என்ன பண்றது?' என, கேட்டாங்க, அந்த அம்மா.
மனைவி தவிக்கிறதைப் பார்த்து, 'ஏன் இப்படி தவிக்கிற. உனக்குத்தான் உடம்பு ரொம்பப் பெரிசாச்சே... உன் உடம்போட நிழல் பூமியில விழும்ல... அந்த நிழல்ல கொஞ்ச நேரம் நின்னு, உன்னுடைய கால் சூட்டைத் தணிச்சுக்கலாம்...' என, யோசனை சொன்னான், கணவன்.
'என்ன உளர்றீங்க... என் நிழல்ல நானே எப்படி நிற்க முடியும்?' என, கோபப்பட்டாங்க.
'இப்ப கொஞ்சம் சிந்திச்சிப்பாரு. உன்னுடைய நிழலே உனக்கு உதவ முடியல. நீ, பெட்டியில பூட்டி வச்சிருக்கிற பணமா உனக்கு பிற்காலத்துல உதவப் போவுது?' என்றான், கணவன்.
மகான்களுக்கெல்லாம் மரத்து நிழல்ல ஞானம் வருது. இந்த அம்மாவுக்கு, உச்சி வெயில்ல ஞானம் வந்திருக்கு!
- வாரியார் சுவாமிகள் சொன்ன கதை இது.
