தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலுவலக மேஜையில் அந்த மாதிரி, சிடி யா?

அரசு ஊழியையான எனக்கு, என் சக பணியாளர் ஒருவர் விடுப்பில் இருந்ததால், அவரது கோப்புகளையும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை சமீபத்தில் ஏற்பட்டது.

முக்கிய கோப்பு ஒன்றை எடுப்பதற்காக, அவரது மேஜை டிராயரைத் திறந்து, தேடினேன். கோப்புகளுக்கு இடையில், அவர் ஆபாச, 'சிடி' க்களை மறைத்து வைத்திருந்ததைக் கண்டு அதிர்ந்தேன். அந்த, 'சிடி'க்களின் மீதும், அதை வைத்திருந்த கவரின் மீதும், நிர்வாண பாலுறவுப் படங்கள் அப்பட்டமாக இருந்தன.

அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்த நான், அப்படியே போட்டுவிட்டு, இன்னும் என்னென்ன கருமமெல்லாம் உள்ளே இருக்கப் போகிறேதோ என அஞ்சி, கோப்பு தேடுவதை நிறுத்தியே விட்டேன்.

ஆபாச, 'சிடி' பார்ப்பது அவரது தனிப்பட்ட விஷயம். அதை, அலுவலக மேஜை டிராயரில் தான் மறைத்து வைக்க வேண்டுமா? அப்படியே மறைத்து வைத்தாலும், பெண் ஊழியர்கள் புழங்கும் போது, அவர்கள் பார்வையில் படும் வகையில் அதை வைக்க வேண்டுமா?

ஆபாச, 'சிடி' ஆபீசில் பதுக்குவோரே...

ஏதாவது ஒரு கவரில் அதைப் போட்டு, கவரை ஒட்டி, அதிலுள்ள ஆபாச படங்கள் வெளியில் தெரியாத வகையில் வைத்து தொலையுங்கள். பணி நிமித்தமாக, உங்கள் மேஜை டிராயரை துழாவும் பெண் ஊழியர்கள், சங்கடப்படுவதை அது தவிர்க்கும்.

— பெயர் வெளியிட விரும்பாத, வேலூர் வாசகி.

முக்கியமானதை மறக்கலாமா?

'மறதி மன்னி' நான். நாற்பத்தைந்தைக் கடந்தவள்; அதாவது, கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகளைக் கொண்டவள்.

ஒரு நாள், காலை நேரப் பரபரப்புடன், வழக்கம் போல் அலுவலகம் கிளம்பினேன். வேனை விட்டால், பஸ், ரயில் பிடித்து, அலுவலகம் செல்வது கடினம். எனவே, தலைதெறிக்க ஓடி, வேன் ஏறினேன். எதையோ மறந்தது போன்ற உணர்வு; என்னவென தெரியவில்லை.

அலுவலகத்தில், முக்கிய வேலைகளை முடித்தவுடன், 'பாத்ரூம்' சென்று, தலைமுடியைச் சீவி, 'கிளிப்' மாட்டும் போது, 'பொறி' தட்டியது. கழுத்துக்குக் கீழே கண்ணை ஓட விட்டால், 'உள்ளே' ஒன்றுமே அணியவில்லை!

என்னையே நொந்து, வெளியே வந்த போது, எதிர்ப்பட்ட என் தோழி, 'ஹேய்... உன் சுடிதார் ரொம்ப அழகா இருக்கு... கழுத்து எம்ப்ராய்டரி ஒர்க்கைப் பார்க்கிறேன், காட்டு...' என, என் துப்பட்டாவை இழுக்கப் போக, எனக்கோ, அவமானம் உச்சந்தலைக்கு ஏறியது, அவளை அவசரமாய் விலக்கி, 'அலுங்காமல் குலுங்காமல்' நடையைக் கட்டினேன்!

அன்று நான் டெனிம் துணியில் சுடிதாரும், பருத்தியில் அழுத்தமான நெய்யப்பட்ட துப்பட்டாவும் அணிந்திருந்ததால், வெளியிலிருந்து பார்ப்பவர் களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனாலும், எதிர்பட்டவர்கள் அனைவரும் என்னையே பார்ப்பதாக நினைத்து, கூனிக் குறுகி போனேன்.

இந்த அளவு மறதி, உங்களுக்கும் வேண்டாம் வாசகியரே!

—'மறதி' மன்னி, சென்னை.

பொன்னாடை வேண்டாமே!

அரசு அலுவலகம் ஒன்றில் உதவியாளராக பணிபுரிகிறேன். எங்கள் அலுவலகத்தில், புதிய அதிகாரி பதவி ஏற்றுள்ளார். அவரைச் சந்திக்க, பல்வேறு தொண்டு நிறுவனத்தாரும், சங்கங்கள் மற்றும் அமைப்பினரும் வந்து செல் கின்றனர்.

வருபவர்கள் எல்லாரும், 'ஜிகு ஜிகு' என்று ஜரிகை நிரவிய, 'பொன்னாடை'யை போர்த்தி, ஒரு ஆப்பிளை அவர் கையில் கொடுத்து, வாழ்த்து தெரிவித்துச் செல்கின்றனர். அலுவலர் அந்த, 'ஜிகு ஜிகு' பொன்னாடைகளை அள்ளி, என்னிடம் தந்து, ஆப்பிள்களை தன் சாப்பாட்டுக் கூடையில் போட்டு எடுத்துச் சென்று விடுகிறார்.

மூஞ்சி துடைக்கக் கூட லாயக்கில்லாத இந்த பொன்னாடைகளை வைத்து நான் என்ன செய்ய?

பொன்னாடை போர்த்தும் அய்யாமார்களே...

மரியாதை என்ற பெயரில், எதற்கும் உதவாத இந்த ஜரிகைத் துணியை, காசு கொடுத்து வாங்கி போர்த்துவதற்குப் பதிலாக, ஒரு டர்க்கி டவலையோ, ஈரிழைத் துண்டையோ போர்த்தினால், தலை துவட்டவும், முகம் துடைக்கவும், அது, பயனுள்ளதாக இருக்கும்.

அதிகாரி, ஐந்தாறு துண்டுகளை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனாலும், ஒன்றிரண்டை பெரிய மனதுடன், எங்களைப் போன்ற கடைநிலை ஊழியருக்குத் தருவார்; நாங்களும் பயன்படுத்திக் கொள்வோம்; செய்வீர்களா?

— தி.வேலாயுதம், திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us