PUBLISHED ON : நவ 27, 2011

அன்பார்ந்த பட்டாம்பூச்சிகளே... விளையாட்டு போல் உங்களை எல்லாம் சந்தித்து, 25 வாரங்கள் ஆகி விட்டன. உங்களது அன்பான ஆதரவிற்கு நன்றி. இத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக, எத்தனையோ உண்மைச் சம்பவங்களை உங்களுக்குச் சொல்லி விட்டேன்... உங்களது எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்!
இந்த வார பட்டாம் பூச்சியின் பெயர் ரினிகா - பெயர் மாற்றியுள்ளேன். மலைப் பிரதேசத்தில் பிறந்து, ரப்பர் எஸ்டேட்டில் வாழ்ந்த கோடீஸ்வரி. இவளது அப்பாவிற்கு நிறைய, 'எஸ்டேட்கள்' சொந்தம். இருந்தும் என்ன பயன்? இவளது வாழ்க்கை இப்படி ஆகி விட்டது.
இவர்களது குடும்பத்திலேயே ரினிகா மட்டும் தான் பெண் குழந்தை. எனவே, உற்றார், உறவினர் அனைவருக்குமே ரினிகா என்றாலே செல்லம் தான். கோடீஸ்வரியான ரினிகா, துணிக்கடையில் உள்ள, ஒரு துணியை ஆசைப்பட்டால், அந்த ÷ஷா-ரூமையே வாங்கும் அளவிற்கு பணம் இருந்தது. 19 வயது பட்டாம் பூச்சியாய் கல்லூரியில் சிறகடித்துப் பறந்தாள்.
அழகு தேவதையான ரினிகா, அதிக செல்லமாக வளர்ந்ததால், அப்பாவியாய் இருந்தாள். பொத்தி, பொத்தி வளர்த்தனர். வினுவின் பார்வையில் படும் வரை, அவளது வாழ்க்கை, நினைத்தாலே இனிப்பாகத்தான் இருந்தது. அவளது அமைதியான, அப்பாவியான தோற்றம், 'இவள் தான் தனக்கு சரியான ஜோடி...' என, வினுவை தீர்மானிக்க வைத்தது.
ரினிகாவை துரத்தி, துரத்தி காதலித்தான்.
வினுவின் தகப்பனாரும், ரினியின் அப்பாவிற்கு சமமான பணக்காரர்; வினு, ஆண் அழகனும் கூட. கேட்கவா வேணும். எத்தனையோ பெண்கள் இவனுடன் சுற்றிய போதும், தன் மனைவியாக வரும் தகுதி, ரினிகாவுக்கு தான் உண்டு என்று, திட்டமிட்டு அவள் பின்னால் அலைந்தான்.
'இங்க பாருங்க... எனக்கு நிறைய படிக்கணும்... லைப்ல நிறைய சாதிக்கணும்ன்னு ஆசை... அதனால என்னை, 'டிஸ்டர்ப்' பண்ணாதீங்க...' என்று, 'ப்ளீச்' என்று சொல்லி விட்டாள் ரினி. ஆனாலும், தான் நினைத்ததை சாதித்தே பழக்கப்பட்ட வினு, ரினியின், 'வீக்' பாயின்டில் அடித்தான்; அதுதான் அவளது, 'டாடி!' அப்பா செல்லமான ரினியை மடக்க, அவளது தகப்பனாரை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் நல்ல பெயர் வாங்கினான். தங்களது தகுதிக்குச் சமமானவன், ஆண் அழகனான வினுதான், தன் மகளுக்கு பொருத்தமாக இருப்பான் என நினைத்து, இதற்கு சம்மதித்தார்; ஆனால், ரினி ஏற்றுக் கொள்ளவே இல்லை.
'டாடி... நான் நல்லா படிக்க ஆசைப்படுகிறேன்... இவ்ளோ சீக்கிரம் எனக்கு திருமணம் வேண்டாம்...' என எவ்வளவோ கெஞ்சினாள்.
'மகளே... அதிர்ஷ்டம் ஒரு முறைதான் வரும். அதை நாம், நழுவ விடக் கூடாது...' என்று கூறி, திருமணம் செய்து கொள்ளும்படி மகளை வற்புறுத்தி, டிகிரி முடித்ததும் திருமணம் செய்து வைத்தார்.
இரு பணக்கார குடும்பத்தினரின் திருமணம் என்றால் சும்மாவா? அந்த மலைப் பிரதேசமே அமர்க்களப்பட்டது. கிலோ, கிலோவாக, தன் செல்ல மகளுக்கு கொட்டிக் கொடுத்தார் ரினியின் தந்தை.
புகுந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் வினுவின் பணப் பேராசையும், ஆடம்பர வாழ்க்கையும், அவனது சந்தேகப் புத்தியும், ரினிக்கு தெரிய ஆரம்பித்தது. நொந்து, மிரண்டு போனாள்.
'இதற்காகத்தாண்டி அப்பாவியான உன்னை பிடிச்சேன். நான் உன்னை, 'செலக்ட்' செய்ததற்கு முன்பே, உன் பயோடேட்டாவே எனக்கு தெரியும். அதுபோல, நீயும் என்னைப் பற்றி விசாரிச்சிருக்கணும். அப்படி விசாரிக்காதது என்னோட தப்பு இல்லை...' என்றான்.
தன் வாழ்க்கை இப்படி ஆனது, அப்பாவுக்கு தெரிந்தால், உயிரையே விட்டு விடுவார் என்பதால், மூடி மறைத்தாள் ரினிகா.
தினமும் விதவிதமான டார்ச்சர்களை அனுபவித்தாள். சந்தேகம், சந்தேகம் என அவனது கொடுமைகளுக்கு அளவே இல்லை. இதற்கிடையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு இவ்ளோ பணம் டிபாசிட் செய்யணும்; இவ்ளோ நகை போடணும் என்று சொல்லி, 'டிமாண்ட்' வைத்தான் வினு; அதையும் செய்தனர். அத்துடன் எதற்கெடுத்தாலும், ரினியின் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர வேண்டும்.
இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட ரினிகா, 'மாமனாரின் எஸ்டேட்களை எழுதி வாங்கு...' என கேட்டதும், வெகுண்டெழுந்தாள்.
எனக்கு தம்பிகள் இருக்கும் போது, நீங்கள் எப்படி கேட்கலாம்? ஏற்கனவே, ரப்பர் தோட்டங்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எப்படியும் என் தகப்பானார் இன்னும் சொத்துக்களை கொடுப்பார். அதற்கு எவ்வளவோ காலம் உண்டு. இப்ப என்ன?' என்று ஆத்திரம் கொண்டாள்.
ஒரு நாள் - சண்டை, அடிதடி உச்சத்தை அடைந்தது. மாடியில் இருந்து ரினிகாவை எட்டி உதைத்தான். படிகளில் உருண்டு கீழே விழவும், அவளது தகப்பனார் வீட்டிற்குள் நுழையவும், சரியாக இருந்தது.
மகளை அப்படியே தூக்கிக் கொண்டு மருந்துவமனைக்கு சென்றார். ஆபத்தான கட்டத்திலிருந்து பிழைக்க வைத்தார். மகளிடம், என்ன நடந்தது என்று விசாரித்தார் தந்தை. 'மகளே... உன்னோட சந்தோஷத்திற்காக, நான் எதையும் தருகிறேன். மாப்பிள்ளை பேரில், 'எஸ்டேட்'டை மாற்றித் தருகிறேன். நீ இப்படி கஷ்டப்படுவதை கண்டு என் இதயமே துடிக்கிறது...' என அழுதார்.
நொந்து போன ரினிகா, அப்போது தான் அந்த உண்மையைச் சொன்னாள்...
'அப்பா... இந்த அயோக்கியனை நம்பி சொத்துக்களை கொடுத்தால், நம்மை நடுத்தெருவில் விட்டு விடுவான். உங்களிடம், நான் ஒரு உண்மையை சொல்கிறேன். தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்...' என்றாள்.
'நீ படும் கஷ்டங்களை கண்ணால் கண்ட பிறகும், இன்னும் என்ன உண்மைகள் இருக்கு?' என்றார் டாடி.
'அப்பா... உங்க மருமகனுக்கு திருமணத்திற்கு முன்பே, நடந்த கார் ஆக்சிடென்ட்டில் அவரது உறுப்புகள் சிதைந்து போனதால் அவரால், 'செக்சில்' ஈடுபட முடியாது. இப்பவும் நான் கன்னிப்பெண்தாம்பா...' என்றாள்.
'மகளே... என்னம்மா சொல்ற?' என்று கதறினார் தகப்பனார்.
'ஆமாம்பா... திருமணம் ஆன புதிதில் முதலிரவை ஒத்தி வைத்துக் கொண்டே போனார். திடீர் என்று ஒரு நாள், என்னை மிரட்டி நடந்த உண்மைகளை கூறி, 'எனக்கு வாரிசு வேணும். இந்த உலகத்திற்கு என்னை பற்றிய உண்மைகள் தெரியக் கூடாது. அதனால், எனக்கு நிறைய குழந்தைகள் வேணும்... என் குடும்ப டாக்டர் மூலம் என்னுடைய விந்து அணுக்களை உனக்குச் செலுத்தி, நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். நீ இந்த உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால் உன்னையும் கொன்று, உன் அப்பனையும் கொன்று, ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டேன்...' என மிரட்டினார்; வேறு வழியின்றி நானும் சம்மதித்தேன் டாடி. குழந்தைகளை பார்த்தாவது திருத்துவார்... என் மீது, 'அன்பு' வரும் என நினைத்தேன். ஆனாலும், அவர் ஒரு மிருகம் என்பது எனக்கு இப்போ தான் தெரிந்தது டாடி. தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற ஆத்திரத்தில் தான், என்னை இப்படி கொடுமைப்படுத்துகிறார்...' என்றாள்.
இதயமே வெடித்துச் சிதறியது தகப்பனாருக்கு.
'இவ்வளவு நாட்கள், ஏன் இதை மறைத்தாய் மகளே... இப்படி ஒரு காரியத்திற்கு நீ ஏன் சம்மதித்தாய்? விஞ்ஞானம் முன்னேறியது இதற்காகத்தானா?' என கதறி அழுதார்; துடித்தார்; அத்துடன் ஒரு முடிவுக்கு வந்தார்.
விவாகரத்துக்கு, 'அப்ளை' பண்ணினார். கோர்ட்டும், 'ஒரு கன்னிப்பெண்ணின் கன்னித்தன்மையை அழிக்காமல், குழந்தை பெற்றதே பாவம். நடந்தது திருமணமே இல்லை...' என்று, திருமணத்தை ரத்து செய்ததுடன், மாப்பிள்ளை வீட்டார் பெற்றுக் கொண்ட அனைத்தையும் திருப்பித் தரச் சொல்லி, நஷ்ட ஈடாக ஒரு பெரிய தொகையையும், குழந்தையின் எதிர்காலத்திற்கான செலவையும் பொறுப்பேற்கும்படி ஆணையிட்டது.
என்ன தான் நம் பிள்ளைகளுக்கு கண்ணும் கருத்துமாக வரன் பார்த்தாலும், இப்படிப்பட்ட விபரீதங்கள் ஒரு சில பட்டாம் பூச்சிகளின் வாழ்க்கையில் ஏற்பட்டு விடுகின்றன. இதைத்தான் அவரவரின் தலைவிதி என்கிறோமா?
எப்படியோ... பெற்ற பிள்ளைகளின் மீது கண்ணும், கருத்துமா இருங்கள். <உங்களது செல்லப் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தி விடைபெறுவது உங்கள் ஜெபராணி ஐசக்!
— முற்றும் —
ஜெபராணி ஐசக்
